×

நன்றி உணர்வோடும், கொள்கை உணர்வோடும் பெரியார் கொள்கையை பரப்புவோம்: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

சென்னை: அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். “தந்தை பெரியார் பிறவாமலிருந்தால், நாம் சுயமரியாதை, கல்வி உரிமை பெற்றிருப்போமா?. நன்றி உணர்வோடும், கொள்கை உணர்வோடும் பெரியார் கொள்கையை பரப்புவோம். மானுடத்தையே தனது பரப்பு எல்லையாகக் கொண்டு 95 வயது வரை சலிப்பறியாத சரித்திரம் படைத்தவர் பெரியார்” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “இன்று (17.9.2024) மானுடத்தையே தனது பரப்பு எல்லையாகக் கொண்டு, 95 வயது வரை – சலிப்பறியாத சரித்திரம் படைத்து, ஜாதி எனும் கொடிய நோயை அழித்து, பிறவி பேதம் எனும் பெண்ணடிமையை அழித்து, சகோதரத்துவத்தையும், சமத்துவம் பொங்கும் ‘‘மனிதத்தையும்’’, தனது இலக்காக்கிக் கொண்டு, உழைத்து, தனக்குப் பின்னாலும் தனது கொள்கை, லட்சியப் பணியும், பயணமும் தொடர்ந்து நடந்திட, நல்லதோர் அடிக்கட்டுமானத்தையும் உருவாக்கி, சமூக தளத்தில் என்றும் போராட, ஓர் இயக்கத்தினையும், அதன் கொள்கைகளை அரசியலும், அகிலமும் ஏற்கப் பல்வகை பாசறைகளும் அமைய வைத்தவருமான அறிவு ஆசானின் 146 ஆவது ஆண்டு பிறந்த நாள் இன்று!

புதிய புத்தனின் புத்தொளி பிறந்த நாள்!

மானமும், அறிவும் தான் மனிதர்களுக்கு அழகு என்று போதித்த ‘புதிய புத்தனின்’ புத்தொளி பிறந்த நாள்!
வரலாற்றில் தனித்த சிறந்த நாள்!! பெருவிழா – அதுதான் எம் திருவிழா!
‘‘தமிழ்நாட்டின் தலைவர்களில் பெரும்பான்மையோர் அவரது புகழின் சிதறல்கள்’’ என்றார் பொருத்தமாக பேரறிஞர் அண்ணா! அவர் ஒரு நாணய உற்பத்திச் சாலை (Mint)!
‘‘அவர் பிறவாதிருந்தால் நாமெல்லாம் மானமிகு சுயமரியாதைக்காரர்களாகி இருக்க முடியுமா?’’
கல்விக் கண் பெற்றவர்களாகவும், பதவி, பணி வாய்ப்புக்குத் தகுதி உள்ளவர்களாகவும் நம்மை ஆக்கிட்ட அமைதிப் புரட்சிக்கு வித்திட்ட ஏர் உழவர் அல்லவா அவர்!

எதிர்நீச்சலில் வெற்றி பெறுவது எப்படி என்பதை அன்றும் – இன்றும் – என்றும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தத் துறைபோகிய பேராசானின் பிறந்த நாள் இன்று!

அனைவரும் அனைத்தும் பெறும் சரியான அறம் வளர்க்கும் அறிவியல் அறிஞர்!
அகிலத்தின் அறிவுப் புரட்சித் திருநாள் இன்று!

உலகின் பற்பல நாடுகளில் வாழும் மனிதர்கள் அவரது மண்டைச் சுரப்பை ‘‘தொழுது’’ (பின்பற்றி) மகிழ்கின்ற உவகையின் உச்சத் திருநாள் இன்று!

உயர் எண்ணங்கள் மலர்ந்துகொண்டே
உள்ள தத்துவப் பேராசானின் வித்தக
விளைச்சலை வீதிதொடங்கி வியனுலகம் வரை
அங்கிங்கெனாதபடி எங்கும் காண்கின்றோம்!

அவரது தொண்டால் பயன்பெற்ற – பெறும் மக்களும், அக்கொள்கையை தங்களது மானுட உரிமைப் போர்களுக்கான எழுச்சியின் எடுத்துக்காட்டாகவே எண்ணுகின்றனர். பல நாட்டு மக்களும் அதைத் துலங்கச் செய்து பயன்பெற்றுப் பகுத்தறிவைப் பரப்பும் பார்வையும், பாதையும் சிறந்து அமைந்து தகத்தகாய ஒளியை உலகுக்கு அளித்துக் கொண்டே உள்ளது!

நேற்று முன்தினம் (15.9.2024) ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ‘ஈரோட்டுப் பூகம்பம்’ என்றாலும், அழிவற்ற அறிவுள்ள விளைச்சல் அறுவடை கண்டு மகிழ்ந்தோம். இன்று (17.9.2024) சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள், வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, அய்ரோப்பா என்று உலகம் முழுவதும் பகுத்தறிவு, சமூகநீதி, அறிவியல் விழாவாக தந்தையின் பிறந்த நாள் விழாவின் கொள்கை வெற்றி வெளிச்சத்தை நாம் கண்டு மகிழ்கிறோம்! பூரித்துப் புளகாங்கிதம் அடைகிறோம்!!

ஆம், இப்போது ‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்!’’ வேகமான சுழற்சி கண்டு சொக்கி நிற்கிறோம்!

நன்றி உணர்வோடும், கொள்கை உணர்வோடும் தந்தை பெரியார் கொள்கையைப் பரப்புவோம் அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

The post நன்றி உணர்வோடும், கொள்கை உணர்வோடும் பெரியார் கொள்கையை பரப்புவோம்: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : President ,Dravidar ,Association ,Veeramani ,Chennai ,Thravidar Club ,K. Veeramani ,Dravidar Khagak ,Khanaka Ka ,
× RELATED வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்