×

ஆஸ்டியோபோரோசிஸ் காரணமும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவர் துரை. நீலகண்டன்

எலும்புரை நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்) என்பது எலும்புகளை மெல்லியதாகவும் நுண்துளைகள் மிக்கதாகவும் மாற்றக்கூடிய ஒரு நிலையாகும். இதன் விளைவாக எலும்பின் வலிமை குறைந்து எளிதில் உடைந்து போவதற்கான (எலும்பு முறிவு) இடர் அதிகமாக உள்ளது.நம் வீடுகளில் உள்ள வயதானோர் அறுபதுகளுக்கு மேல் கூன்போட ஆரம்பித்து விடுகின்றனர். அவர்களால் ஏன் கூன் போடாமல் வளையாமல் நேரே நிமிர்ந்து நிற்க முடிவதில்லை என்று என்றாவது நாம் யோசித்துப் பார்த்ததுண்டா.. அப்படி யோசித்தோமானால் அதற்கு பதில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புரை நோய்தான் காரணம். இந்நோய் வந்தால் எலும்பு வலுவிழந்து நாளடைவில் காய்ந்த மாவு போல் நொறுங்கி உதிர ஆரம்பிக்கும்.

முதுகெலும்பில் ஏற்படும் தொடர் மயிரிழை முறிவுகளே மனிதனை அறுபதுகளுக்கு மேல் கொக்கி வடிவில் வளைத்துவிடுகிறது. பொதுவாக இந்நிலை அதிக அளவில் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடையே காணப்படுகிறது. வயது ஏற ஏற நம் உடலில் உள்ள புதிய எலும்புகள் உருவாகும் வேகம் குறைய ஆரம்பிக்கும். அதே சமயம் பழைய எலும்புக் கூறுகள் உடலில் இருந்து வேகமாக நலிவடைய ஆரம்பிக்கிறது. இத்தருவாயில் எலும்புகள் வலுவிழந்து எலும்புப் புரைநோய் ஆரம்பம் ஆகிறது.

நம் எலும்பு வலுவிழக்கும்போது முதுகுத்தண்டு எலும்புகள் மட்டும் இன்றி உடம்பில் உள்ள அனைத்து எலும்புகளும் நொறுங்க ஆரம்பிக்கிறது. எலும்புரை முற்றிய நிலையில் சில சமயங்களில் சும்மா உட்கார்ந்து எழுந்தால் கூட எலும்புமுறிவு ஏற்படும். இந்நிலை வந்தால் படுத்த படுக்கையில் ஓய்வாக இருக்கும் நிலை வந்துவிடும். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளைக்கூட மிகக் கடினமாக்கிவிடும். பிறர் உதவி இன்றி வாழமுடியாது. இதை கவனத்தில் கொண்டு நாம் இளம் வயதிலேயே பேணுதல் வேண்டும்.

யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்

நீங்கள் கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றில் பொருந்தினால் எலும்புரை நோய் ( ஆஸ்டியோபோரோடிக்) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

*ஐம்பது வயதிற்கு மேல் இருந்தால்
*கால்சியம், வைட்டமின் டி குறைபாடு இருந்தால்.
*பெண்ணாக இருந்தால். குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்ணாக இருந்தால்
*மது அருந்துபவர் அல்லது புகைபிடிப்பவராக இருந்தால்
*போதுமான அளவில் உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தால்
*உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் எலும்புரை நோய் (ஆஸ்டியோபோரோடிக்) இருந்திருந்தால்.
*நீண்ட நாள் ஸ்டெராய்டுதெரப்பி எடுத்துக் கொண்டிருந்தால்.

காரணங்கள்:

எலும்புகளென்பது அடிப்படையில் உயிருள்ள திசுக்களாகும். மேலும் இவை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். நீங்கள் பிறந்தது முதல் பருவம் அடையும் வரை உங்களின் எலும்புகள் வளர்ந்து பலமடையும். இது சரியாக 30 வயதில் நன்கு வளர்ச்சி அடைந்து முழுவதும் பலமடைந்துவிடும். பிறகு வயது கூடக்கூட எலும்புகள் அதன் நிலையைச் சிறிது சிறிதாக இழக்கத் தொடங்கி எளிதாக உடைந்து போவதற்கான சாத்தியம் அதிகம் ஏற்படும்.

வலுவான எலும்புகளுக்கு கால்சியம் இன்றியமையாதது. வைட்டமின் டி3 நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள அல்லது பொருட்களில் உள்ள கால்சியத்தை எடுத்துக் கொள்ள மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது. ஆகவே, இவை இரண்டும் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மிகவும் முக்கியமாக தேவைப்படுபவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை பாலுறவு ஹார்மோன் (ஈஸ்ட்ரோஜன்) எலும்புகளில் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுவதன் மூலம் எலும்புரை நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படாமல் பாதுகாக்கிறது. பெண்கள் 45-55 வயதடைந்ததும் (மாதவிடாய் நின்றுபோகும் காலம்) பாலுறவு ஹார்மோன் குறையத் தொடங்குவதன் மூலம் இதன் பலத்தை சிறிது சிறிதாக இழக்கத் தொடங்குகிறது.

புகைப்பிடித்தலும், மது அருந்துவதும் எலும்பு உறுதியாகும் செயல்பாட்டை சிறிது சிறிதாக குறைத்து எலும்புரை நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுவதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுக்கிறது.எலும்புக்கு வேலை கொடுக்கும்போது நன்கு பலமடைகிறது. எலும்பில் இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கு வயது வந்த ஆண்களிடத்தில் உடற்பயிற்சி முக்கியத் தூண்டுகோலாக இருக்கிறது. ஆகவே எடையைக் கூட்டும் உடற்பயிற்சிகளான ஜாக்கிங் தண்டுவடம், இடுப்புகள் மற்றும் கைகளிலுள்ள எலும்புகளைப் பராமரித்து அதன் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் எலும்புரை நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

ஸ்டீராய்டு மருந்துகள் (அதாவது பிரட்னிசோலோன்) நீண்ட நாட்களுக்கு உபயோகிப்பது எலும்புகள் பலம் இழக்கக் காரணமாகிறது. அதன் விளைவாக எலும்புரை நோய் ஏற்படும். சில குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகள் அதாவது தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக செயல்படுவது, நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு, ரூமாட்டிக் ஆர்த்தரைட்டீஸ் (மூட்டு நோய்) அல்லது நடப்பதற்குத் தடையாக இருக்கும் நிலைகள் போன்ற காரணங்களாலும் எலும்புத்திண்மை குறைவு ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

எலும்புரை நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்), கண்ணுக்குத் தெரியாத ஒரு நோயாகும். இது ஒருவருக்கு முதன்முதலில் எலும்பு முறிவு ஏற்பட்டாலொழிய அவருடைய எலும்பில் ஏற்படக்கூடிய இழப்புக்கான அறிகுறிகள் ஏதும் தெரியாது. குறைந்தது 3-ல் ஒரு பெண்ணும் 5-ல் ஓர் ஆணும் தங்களின் வாழ்நாளில் எலும்புரை நோய் எலும்பு முறிவில் (ஆஸ்டியோபோரோடிக் ஃப்ராக்சர்) அவதியுறுவார்கள்.

கைமணிக்கட்டு, தண்டுவடம், தோள்பட்டை மற்றும் இடுப்பு ஆகிய பகுதியில் எலும்புரை நோய் (ஆஸ்டியோபோரோடிக் ஃப்ராக்சர்) ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.
ஆஸ்டியோபோரோசிஸ் மேம்பட ஆரம்பித்த உடன் உயரம் குறுக, சுருங்க ஆரம்பிக்கும், வயிறு பிதுங்கி வெளியே துருத்த ஆரம்பிக்கும் அல்லது மணிக்கட்டு, இடுப்பு எலும்பு முறிவுகள் அறிகுறியாகத் தென்படும். நாளடைவில் இருமும்போது, தும்மும்போதுகூட முதுகு வலிக்கும், அதிக நேரம் நின்றால், உட்கார்ந்தே இருந்தால் முதுகு வலிக்கும், சற்று படுத்து ஓய்வு எடுத்தால் உடனே இடுப்பு, முதுகு வலி போய்விடும்.

பிற அறிகுறிகள்:

அதிகம் நடக்கும், வேலை பார்க்கும் நாட்களில் அவ்வப்போது நம்மையும் அறியாமல் கூனல் போட தொடங்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக முதுகெலும்பு முன்னோக்கி வளைந்து நிரந்தரமாக பின்கூனல் விழுந்துவிடும்.

பரிசோதனையும் சிகிச்சையும்:

எலும்பு தாது அடர்த்தியை அளவிடுதலின் மூலமாக எலும்புரை நோய் உறுதிப்படுத்தப்படுகிறது. ரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே மூலம் உறுதி செய்யப்படுகிறது. (குறிப்பாக டெக்சா ஸ்கேன்), இளம் வயது வந்தோருடைய எலும்பு தாது அடர்த்தி 2.5 நிலை விலகலை விட குறைவாகவோ சமமாகவோ இருக்கும்போது எலும்புரை நோய் உறுதி செய்யப்படும். இது ஒரு டி- ஸ்கோர் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு பின்வரும் அறுதியிடல் வழிகாட்டல்களை நிறுவியது.

டி-ஸ்கோர் 1.0 அல்லது மிகப்பெரியவை என்பது சாதாரணமானது, டி-ஸ்கோர் 1.0 மற்றும் 2.4 இடையே இருந்தால் குறைவான எலும்பு எடை (அல்லது ஆஸ்டியோபீனியா) ஆகும். டி-ஸ்கோர் 2.5 அல்லது அதற்கு மேல் இருந்தால் எலும்புரையாகும்.எலும்புரைக்கு சிகிச்சை அளிப்பதற்கு பல மருத்துவங்கள் இருக்கின்றன. அவை வயது மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றன. வாழ்க்கைமுறை மாற்றங்களும் சிகிச்சையின் முக்கிய அம்சமாகும்.

மருத்துவ சிகிச்சை முறை:

பிஸ்ஃபோஸ்ஃபோனேட்டுகள்தான் சிகிச்சைக்கான முக்கிய மருந்தியல் அளவீடுகளாகும். எலும்புரை உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு பிஸ்ஃபோஸ்ஃபோனேட்டு மருந்துகள்தான் பெண்களுக்கான முதல்கட்ட சிகிச்சையாகும்.  சமீபத்தில் எலும்புரையில் டெரிப்பரட்டைட்டின் (இனக்கலப்பு உயிர் இணை தைராய்டு ஹார்மோன்) பயன்பாடு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

இது இணை தைராய்டு ஹார்மோன் போன்று செயல்பட்டு எலும்பாக்கிகளைத் தூண்டுவதினால் அதனுடைய செயல்பாட்டை அதிகரிக்கிறது. எலும்புரை உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் (ஏற்கெனவே எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்), குறிப்பாக குறைவான எலும்புத் தாது அடர்த்தி அல்லது எலும்பு முறிவுக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பவர்கள் அல்லது வாய் வழி பிஸ்ஃபோஸ்ஃபோனேட்டை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் ஆகியோருக்கு இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்து – கால்சியம்

எலும்பு வளர்ச்சி, எலும்பு குணமாதல் மற்றும் எலும்பு வலிமையைத் தக்கவைத்தல் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதற்கு கால்சியம் அவசியமாக இருக்கிறது. இது எலும்புரைக்கு ஒரு சிகிச்சையாகவும் உள்ளது. எலும்புரையின் ஆபத்து அதிகமாக இருப்பவர்களுக்கு (ஐம்பது வயதுக்குப் பிறகு) ஒரு நாளைக்கு 1.200 மி.கி. அளவு கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க சுகாதார நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் அதிகமாக கால்சியத்தை எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு முறிவு குறைவான விகிதத்தில் இருக்கிறது. மற்ற காரணிகளான புரதம், உப்பு மற்றும் சூரிய ஒளி படும்படி இருத்தல் ஆகியவற்றோடு சேர்த்து எலும்புரை உருவாக்கத்தில் இருக்கும் பல காரணிகளில் கால்சியமும் ஒன்றாகிறது.

The post ஆஸ்டியோபோரோசிஸ் காரணமும் தீர்வும்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dr. ,Doctor ,Durai ,Dinakaran ,
× RELATED மழைக்காலப் பராமரிப்புகள்