×

திமுக அரசு பொறுப்பேற்ற பின் 2000வது குடமுழுக்கு கோலாகலம்: பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் நடந்தது

மயிலாடுதுறை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் 2000வது குடமுழுக்கு பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் நேற்று கோலாகலமாக நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களாக திகழும் தொன்மையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, குடமுழுக்குகள் நடைபெறாத திருக்கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை கடந்த 39 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திருக்கடையூர், அமிர்தகடேஸ்வரர் கோயிலின் உபகோயிலான மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த பரசலூரில் உள்ள பாலாம்பிகை உடனாகிய வீரட்டேஸ்வரர் கோயிலில் ரூ.80.10 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றது.

திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி ஆக.30ம்தேதி (நேற்று) குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் நடைபெறும் 2,000வது குடமுழுக்காகும். இதையொட்டி கடந்த 25ம் தேதி கணபதி ஹோமமும், 27ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கியது. 28ம்தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 29ம்தேதி நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரங்களை அடைந்தது.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, விமான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி மகா குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை எம்பி சுதா, எம்எல்ஏ நிவேதா முருகன், தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தர், மாவட்ட இணை ஆணையர் சிவகுமார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post திமுக அரசு பொறுப்பேற்ற பின் 2000வது குடமுழுக்கு கோலாகலம்: பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : 2000th Kudamuzku Kolagalam ,Parasalur Veerateswarar Temple ,DMK government ,Mayiladuthurai ,Tamil Nadu ,2000th Kudamuzku ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED திமுக அரசு பொறுப்பேற்ற பின் 2000வது...