×

தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் ரூ.840 எகிறியது

சென்னை: தங்கம் விலை நேற்று கிடுகிடுவென சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, மீண்டும் சவரன் ரூ.53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடையச் செய்துள்ளது.ஒன்றிய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. பட்ஜெட் எதிரொலியாக சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. அதாவது தங்கம் விலை எப்படி ஏறியதோ அதே வேகத்தில் குறைந்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வந்தது.

இதற்கிடையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.52,440க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,565க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,520க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளது. ஆவணி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிக அளவில் நடப்பது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் பணச் செலவையும், சுமையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

 

The post தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் ரூ.840 எகிறியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,EU ,Dinakaran ,
× RELATED கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு...