×

சேலம் வழியே செல்லும் ரயில்களில் மோப்பநாய் மூலம் போலீசார் தீவிர சோதனை

சேலம்: சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடாக சேலம் வழியே செல்லும் ரயில்களில் மோப்பநாயை கொண்டு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் 77வது சுதந்திரதினவிழா நாளை மறுநாள் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தவகையில் தமிழ்நாட்டில் சென்னை, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், தமிழக ரயில்வே போலீசாரும் இணைந்து 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

ரயில்களில் தீவிர சோதனையும் நடத்தி வருகின்றனர். சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார், 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். ஆங்காங்கே உள்ள ரயில்வே பாலங்கள் மற்றும் சேலம்-கோவை, சேலம்-ஜோலார்பேட்டை மார்க்க தண்டவாளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் கோட்ட பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களிலும் இன்று காலை முதல் தமிழ்நாடு ரயில்வே போலீசாரும், ஆர்பிஎப் போலீசாரும் இணைந்து சோதனையை நடத்தி வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்மித் ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் ரயில்களில் ஏறி தீவிர சோதனை நடத்தினர். சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் மோப்பநாய் ப்ரூக்ஸ் மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனை நடத்தினர்.

பயணிகளின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டன. தொடர்ந்து பிளாட்பார்ம்களில் இருந்த பயணிகளின் உடமைகள், பார்சல் அலுவலகத்தில் இருந்த பண்டல்கள், டூவீலர் மற்றும் கார் பார்க்கிங் பகுதி, ஸ்டேஷன் முழுவதும் உள்ள தண்டவாளங்கள், யார்டு பகுதி ஆகியவற்றில் மோப்பநாய் ப்ரூக்ஸ் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு சோதனையை போலீசார் நடத்தினர். தொடர்ந்து சேலம் வழியாக வட மாநிலங்களுக்கு சென்ற ரயில்களிலும், அங்கிருந்து சேலம் வழியே கேரளா சென்ற ரயில்களிலும் மோப்பநாய் கொண்டு போலீசார் தீவிர சோதனையை நடத்தினர். சந்தேகப்படும்படி யாரும் சுற்றித்திரிகின்றனரா? என கண்காணித்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணி வரும் 16ம் தேதி வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சேலம் வழியே செல்லும் ரயில்களில் மோப்பநாய் மூலம் போலீசார் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : MOPHANAI ,SALEM ,77th Independence Day of ,Moppanai ,Dinakaran ,
× RELATED திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது