×

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாநில அரசுகளுக்கு பங்கு தரப்படுவதில்லை: ஒன்றிய அமைச்சர் பதில்

சென்னை: சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாநில அரசுகளுக்கு பங்கு தரப்படுவதில்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தின் போது, திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு பேசுகையில், சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகை எவ்வளவு? அவ்வாறு வசூலிக்கும் தொகையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு பங்கு தரப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்து பேசியதாவது: நாடு முழுவதும் 48 ஆயிரத்து 452 கிலோமீட்டர் நீளத்திற்கு சுங்கச் சாலை உள்ளது. இவற்றில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து 983 சுங்கச் சாவடிகள் மூலமாக பாஸ்ட்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2023-24ம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ.55,844 கோடி இந்த சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் சுமார் ரூ.6,695 கோடியும், தமிழகத்தில் ரூ.4,221 கோடியும் வசூல் செய்யப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 3109 கிலோமீட்டர் நீளமுள்ள சுங்க சாலையில் 67 சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி வசூலிக்கப்படும் கட்டணத் தொகையை ஏலம் மூலம் நியமிக்கப்படும் வசூலிக்கும் ஏஜென்சிகள் வசூலித்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கணக்கில் செலுத்துகின்றன. அந்தப் பணம் மீண்டும் இந்திய ஒருங்கிணைந்த நிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு எந்த நிதிப் பகிர்வும் இந்தக் கட்டண வசூல் தொகையிலிருந்து வழங்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாநில அரசுகளுக்கு பங்கு தரப்படுவதில்லை: ஒன்றிய அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Union ,CHENNAI ,Union Minister ,Nitin Gadkari ,DMK ,Dr. ,Kanimozhi N.V.N. Somu ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...