×

பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்களுக்கு டிச.31ம் தேதி வரை அவகாசம்: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம் காட்ட, ஓட்டுநர் உரிமம் பெற, கடவுச்சீட்டு மற்றும் விசா உரிமம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழ் ஆகும். அவ்வாறு பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயரை பதிவு செய்யாதவர்கள், பெயரை பிறப்புச் சான்றிதழில் 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குநர்களுக்கு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் விடுபட்டிருந்தால் அதுகுறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து பெயரை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளரின் கையொப்பமிட்ட படிவம் பெற்று பெயரை சேர்க்கலாம். பிறப்பு சான்றிதழ் குறித்து எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த ஆண்டுக்குள் பெயரை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவரின் முழு பெயரை சேர்க்கலாம் அல்லது பெயரில் சில எழுத்துகள் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும், அந்த திருத்தத்தையும் மேற்கொள்ளலாம். தேவைக்கு ஏற்ப இதற்காக சிறப்பு முகாம் நடத்தலாம். இவ்வாறு கூறியுள்ளார். குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழ் ஆகும்.

The post பிறப்பு சான்றிதழில் பெயரை சேர்க்காதவர்களுக்கு டிச.31ம் தேதி வரை அவகாசம்: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Public Health Information ,CHENNAI ,public health department ,Dinakaran ,
× RELATED நிபா வைரஸ் எதிரொலி: தமிழ்நாடு – கேரள...