×

திருப்பத்தூர் அருகே 5 ஆண்டுக்கு ஒருமுறை வினோத வழிபாடு; ஊரை விட்டு வெளியேறி வனப்பகுதியில் தஞ்சமடையும் மக்கள்: பொங்கல் அடுப்பு புகையால் துஷ்ட சக்தி விலகும் என நம்பிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் அனைவரும் நேற்று ஒருநாள் ஊரை காலி செய்து வெளியே சென்று தங்கினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாரண்டப்பள்ளியில் 300க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படும். திருவிழா நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன், கிராம மக்கள் ஒன்று கூடி, தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு ஊரை காலி செய்துகொண்டு வனப்பகுதியில் ஒரு இடத்தில் கூடுவார்கள். அங்கு காலை முதல் மாலை வரை தங்கியிருந்து பின்னர் மாலையில் வீடு திரும்புவார்கள். அதன்படி, வரும் 15ம்தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு, கிராம மக்கள் நேற்று தங்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மேலும் இளைஞர்கள், இளம்பெண்கள் விளையாடி மகிழ்ந்தனர். சிலர் அங்கேயே மரத்தடியில் ஓய்வெடுத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் ஊர் திரும்பினர்.

இதுகுறித்து கிராம ஊர் பெரியவர் கூறியதாவது:
பாரண்டப்பள்ளியில் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் எல்லா சமூகத்தினரும் உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, 10 நாட்களுக்கு முன் ஊர் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு, அன்று காலை ஊரின் மேற்கு பகுதிக்கு செல்வார்கள். அங்கு ஒரு இடத்தை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் உறவினர்களுடன் குழுவாக தங்குவார்கள். அப்போது, காலை மற்றும் மதிய உணவை அதே இடத்தில் சமைப்பார்கள். அதில் ஒரு சிலர் சைவம், சிலர் அசைவம் செய்வார்கள். பின்னர், தாங்கள் சமைத்த உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பார்கள். இங்கு ஜாதி மதம் பாகுபாடின்றி எல்லாரும் சமமாக விழாவை கொண்டாடுகின்றனர். இந்த வழக்கம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்ட இந்த ஒருநாள் மட்டும் கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும். மேலும், இங்குள்ள எல்லா வீடுகளும், கடைகளும் மூடியிருக்கும்.

காலை 7 மணிக்குள் கிராம மக்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு கோயில் அருகே வருவார்கள். அவர்களை மேளதாளத்துடன் ஊர் மேற்கு பகுதிக்கு அழைத்துச் செல்வார்கள். அதன்பிறகு ஏதோ ஒரு இடத்தை தேர்வு செய்வார்கள். அங்கு அவர்கள் சமைக்கும்போது அதிலிருந்து வெளியேறும் புகை கிராமம் நோக்கி செல்லும். இதனால் கிராமத்தில் உள்ள துஷ்ட சக்திகள் விலகும் என்பதாக நம்பப்படுகிறது. இதற்கிடையே, எல்லாரும் கவலைகளை மறந்து, ஒருவருடன் ஒருவர் பேசி விளையாடி மகிழ்வார்கள். மேலும் மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு அங்கேயே தங்கியிருந்துவிட்டு மாலையில் வீடு திரும்புவார்கள். இதேபோல் நேற்றும் இந்த நிகழ்வு நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பத்தூர் அருகே 5 ஆண்டுக்கு ஒருமுறை வினோத வழிபாடு; ஊரை விட்டு வெளியேறி வனப்பகுதியில் தஞ்சமடையும் மக்கள்: பொங்கல் அடுப்பு புகையால் துஷ்ட சக்தி விலகும் என நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Mariamman Temple festival ,Jolarpet Union Barandapalli, Tirupathur District ,
× RELATED வாணியம்பாடி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!