×

சென்னையில் ’ஓவியச் சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட ரூ.10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் கலைஞர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட ரூ.10 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணையின் அடிப்படையில் சென்னையில், 3.8.2024, 4.8.2024 மற்றும் 5.8.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டத்தினை செயல்படுத்தி அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டு, விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களிடமிருந்து 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

100 ஓவிய, சிற்பக் கலைஞர்களின் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்டர் கலர், கேன்வாஸ், ஆயில் கலர், அக்ரலிக், மிக்‌ஷர் மீடியா, பென்சில், பிரிண்ட் மேக்கிங் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய ஓவியச் சந்தை இன்று (3.8.2024), சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனால் தொடங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, இ.ரா.பா.ப., அரசு அருங்காட்சியகங்களின் இயக்குநர் கவிதா ராமு, இ.ஆ.ப., சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் முதல்வர்(பொ) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் ஓவியச் சந்தை திட்டமானது தமிழ்நாட்டினை சார்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம். ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்காக மாநில அளவிலான ஓவிய கண்காட்சி நடத்துதல், சிறந்த கலைப்படைப்புகளுக்கு பரிசுகள் வழங்குதல், சிறந்த கலை ஆசிரியர்களுக்கும், கலை நூல் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்குதல் மற்றும் ஓவிய, சிற்பக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் மாநில அளவில் கலைச்செம்மல் என்ற விருதுகள் வழங்குதல், மண்டல கலை கலைக்காட்சிகள் நடத்தி சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்குதல், தனி நபர் / குழுவாக ஓவிய கண்காட்சி நடத்த நிதியுதவி வழங்குதல், அரசு கவின் கலைக் கல்லூரியில் பயிலும் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு படிப்பு உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்காக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

கலையினை வாழவைப்பதோடு, கலைஞர்களையும் வாழ வைத்திட ஏதுவாக, ஓவிய சந்தை கண்காட்சியினை திரளான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள், ஓவியர்கள், சிற்பிகள் வருகை தந்து கண்டுகளிப்பதோடு, கலைஞர்களை ஊக்கவிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், கலைஞர்களின் கலைப்படைப்புகளை வாங்கிடவும் அழைக்கப்படுகிறார்கள்.

The post சென்னையில் ’ஓவியச் சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட ரூ.10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Arts and Culture ,Coimbatore ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...