×

வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் என 13 துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் என 13 துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீட்டுமனை பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சிறப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை 1.3.2024 அன்று பிறப்பித்த அரசாணையின்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் 18 உறுப்பினர்கள் கொண்ட மாநில அளவிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 13.6.2024 அன்று கூடி மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனை இடங்களில் 836 பட்டாக்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அம்பத்தூர் திட்டப்பகுதி மனை இடங்களில் 516 பட்டாக்கள், நகர நிலவரி திட்டத்தின் கீழ் மாதவரம் மற்றும் அம்பத்தூர் வட்டங்களில் 9,563 பட்டாக்கள் என மொத்தம் இதுவரை 33,766 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2,099 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி பேசியதாவது:
எல்லோருக்கும் வீடு கிடைக்க வேண்டுமென நம்முடைய தலைவர் முதல்வர் மு.க..ஸ்டாலின், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை இந்த ஆண்டு அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. சென்ற ஜூலை மாதம் கூட ரூ.925 கோடி செலவில் கட்டப்பட்ட 5,600 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நம்முடைய முதல்வர் திறந்து வைத்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதிகளை உடனடியாக வழங்கிடும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

வடசென்னை பகுதியின் நலனை கருத்தில் கொண்டு ரூ.4,000 கோடி மதிப்பில் வடசென்னை வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால்தான் தமிழ்நாடு அரசு இன்றைக்கு வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் என 13 துறைகளில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்று முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் எஸ்.சுதர்சனம், நா.எழிலன், துரைசந்திரசேகர், கே.பி.சங்கர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி, ஜே.ஜே.எபிநேசர், துணை மேயர் மகேஷ்குமார், வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் என 13 துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,India ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கல்வித்துறையில் செயல்படுத்தப்படும்...