×

வயநாடு நிலச்சரிவில் 340 பேர் பலி; 275 பேரை காணவில்லை நவீன கருவிகளுடன் தேடும் பணி தீவிரம்: 4 நாட்களுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340ஐ தாண்டி விட்டது. 3 கிராமங்கள் அடியோடு அழிந்தன. நவீன ரேடார்கள், லேசர் கருவிகள், டிரோன்கள் உதவியோடு காணாமல் போன 275 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கர நிலச்சரிவு 3 கிராமங்களை அடியோடு அழித்து விட்டது. 4வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தன. நேற்று காலை வரை நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 340ஐ தாண்டி உள்ளது.

இன்னமும் 275க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் விட்டதாக கூறப்பட்டாலும், அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. சூரல்மலையில் 599 வீடுகளும், முண்டக்கையில் 431 வீடுகளும், புஞ்சிரிமட்டத்தில் 35 வீடுகளும் இருந்தன. இந்த பகுதிகளில் தற்போது 60க்கும் குறைவான வீடுகளே மிஞ்சி உள்ளன. நிலச்சரிவு ஏற்படும் என்று பயந்து அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த மேலும் பலர் இந்த வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். பெரும்பாலான வீடுகளில் அந்த வீட்டினர் தவிர மேலும் பலர் இருந்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

எனவே பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சூரல்மலை பகுதியில் மீட்புப் பணிகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்து விட்டன. முண்டக்கைக்கு செல்வதற்கு ராணுவம் இரும்புப் பாலம் அமைத்து விட்டதால் நேற்று காலை முதல் இங்கு மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. பல அடி ஆழத்தில் குவிந்து கிடக்கும் சகதியை தோண்டியும், இடிந்து கிடக்கும் வீடுகள், கட்டிடங்களுக்கு உள்ளும் நவீன உபகரணங்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதியில் யாரும் உயிரோடு இல்லை என்று ஏற்கனவே ராணுவம் தெரிவித்து உள்ளது. ஆனாலும் யாராவது உயிருடன் இருக்க மாட்டார்களா? என்ற நம்பிக்கையுடன் தேடுதல் வேட்டையில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சாலியார் ஆற்று பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆகவே இந்தப் பகுதியில் மீட்பு பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ட்ரோன்கள், ஹெலிகாப்டர் மூலம் உடல்களை கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 4 டிரோன்கள் வரவழைக்கப்பட்டன.

நேற்று காலை முதல் இந்த டிரோன்களை பயன்படுத்தி உடல்களை தேடும் பணி நடைபெற்றது. மேலும், மண்ணில் புதையுண்டிருக்கும் மனிதர்கள், கால்நடைகளை கண்டறியும் திறன் கொண்ட நவீன ரேடார், லேசர் கருவிகளை பயன்படுத்தி தீவிர தேடுதல் வேட்டையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வெள்ளார்மலை பகுதிக்கு அருகே உள்ள படவெட்டிக்குன்னு என்ற இடத்தில் நேற்று காலை முதல் ராணுவத்தினர் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஆட்கள் இருக்கலாம் என்று அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் ராணுவத்தினரிடம் கூறினார்.

உடனடியாக ராணுவத்தினர் இடிந்து கிடந்த அந்த வீட்டுக்குள் நுழைந்து தேடினர். அப்போது வீட்டுக்குள் ஒரு அறையில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதவித்தபடி இருந்தனர். உடனே அவர்களை பத்திரமாக மீட்ட ராணுவ வீரர்கள், தங்கள் கொண்டு வந்திருந்த குடிநீர், உணவை அவர்களுக்கு கொடுத்தனர். விசாரணையில் அவர்களது பெயர் ஜோனி, ஆபிரகாம், ஜோமோள், கிறிஸ்டி என்பது தெரியவந்தது. கடந்த 4 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த தாங்கள் உயிரோடு மீண்டு வருவோம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்குப் பின்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீட்கப்பட்டது ஒரு அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது. அவர்களை மீட்ட இந்திய ராணுவத்திற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

* ஆற்றில் கிடந்த 172 உடல்கள்
வயநாட்டில் நிலச்சரிவு உருவான பகுதி புஞ்சிரிமட்டம் மலை என்று தெரியவந்து உள்ளது. இந்த மலையில் உள்ள சிறிய ஓடையில்தான் பெரிய பெரிய பாறைகளும், மண்ணும், மரங்களும் அடித்து செல்லப்பட்டன. இந்த ஓடைதான் சுமார் 35 கிமீ தொலைவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியார் என்ற ஆற்றில் கலக்கிறது. வழியில் சூஜிப்பாறை என்ற ஒரு அருவியும் உள்ளது. புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் இருந்து அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அனைத்தும் இந்த அருவியைக் கடந்து 35 கிமீ தொலைவில் உள்ள சாலியார் ஆற்றுக்கு வந்துள்ளது. நேற்று வரை இந்த ஆற்றில் இருந்து மட்டும் 172 உடல்கள், உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னமும் இந்த ஆற்றில் உடல்கள் இருக்கலாம் என்று கருதப்படுவதால் நேற்றும் இங்கு உடல்களைத் தேடும் பணி நடைபெற்றது.

* பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் வீடு – ராகுல் காந்தி உறுதி
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு நேற்று முன்தினம் வந்தனர். நேற்று முன்தினம் வயநாட்டிலேயே தங்கிய ராகுலும், பிரியங்கா காந்தியும் நேற்றும் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிக்கு சென்றனர். அங்கு அரசு அதிகாரிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதன்பின் அவர் கூறியது: நேற்று முன்தினம் முதல் நான் இங்கு இருக்கிறேன். இது ஒரு மிக மோசமான பேரழிவாகும். கடந்த இரு தினங்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* சின்னா பின்னமான 8.6 ஹெக்டேர் நிலம் – இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பல அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கிடைத்துள்ளன. நிலச்சரிவு உருவான இடம் கடல் மட்டத்திலிருந்து 1550 மீட்டர் உயரம் கொண்ட புஞ்சிரிமட்டம் மலைப் பகுதியாகும். இங்கிருந்து சுமார் 8 கிமீ தொலைவுக்கு ராட்சத பாறைகளும், மண்ணும், மரங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பயங்கர நிலச்சரிவால் இந்தப் பகுதியில் 8.6 ஹெக்டேர் நிலம் சின்னாபின்னமாகி உள்ளது. இந்தப் புகைப்படங்களை ரிசாட் என்ற செயற்கைக்கோள் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. கடந்த வருடமும் இதே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. கார்ட்டோசாட் 3 என்ற செயற்கைக்கோள் எடுத்த அந்த புகைப்படங்களையும் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

* அடித்துச் செல்லப்பட்ட 21.25 ஏக்கர் நிலம்
வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள் நாம் நினைப்பதை விட மிக அதிகம் என்று பலரும் கூறுகின்றனர். இந்த பயங்கர நிலச்சரிவில் இந்த பகுதியில் 21.25 ஏக்கர் நிலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பெரிய பெரிய ராட்சத பாறைகளும், மரங்களும் சுமார் 8 கிமீக்கு மேல் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

* வயநாடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் 56 ஆயிரம் சதுர கிமீ நிலப்பரப்பு சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி: ஒன்றிய அரசு அறிவிப்பு
வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகள் உள்பட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 56 ஆயிரத்து 800 சதுர கிமீ-ஐ சுற்றுசூழல் உணர்திறன் பகுதி என ஒன்றிய அரசு வரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு நாளைக்கு பின் இது வெளியிடப்பட்டுள்ளது. இதில், வயநாட்டின் 2 தாலுகாக்களை சேர்ந்த 13 கிராமங்களும் இதில் அடங்கும். இந்த உத்தரவின்படி சுரங்கம்,குவாரி, மணல் அள்ளுதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். தற்போதுள்ள சுரங்கங்கள் ஐந்தாண்டுகளுக்குள் இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து அல்லது தற்போதுள்ள சுரங்க குத்தகை காலாவதியாகும் வரை, எது முன்னதாகவோ படிப்படியாக அகற்றப்படும்.

புதிய அனல் மின் திட்டங்கள் தடை செய்யப்படுகிறது. தற்போதுள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படலாம், ஆனால் விரிவாக்கம் அனுமதிக்கப்படாது. பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்கள் மற்றும் டவுன்ஷிப்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள கட்டிடங்களை பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் செய்யலாம். மருத்துவமனைகள் செயல்படலாம்.ஆரம்ப சுகாதார நிலையங்களை சட்டத்துக்கு உட்பட்டு அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துகள், ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால் 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வயநாடு நிலச்சரிவில் 340 பேர் பலி; 275 பேரை காணவில்லை நவீன கருவிகளுடன் தேடும் பணி தீவிரம்: 4 நாட்களுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Wayanad landslide ,Thiruvananthapuram ,Kerala ,Kerala… ,Wayanad ,landslide ,
× RELATED வயநாடு நிலச்சரிவில் பாதித்தோருக்கு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி