பூந்தமல்லி: போரூர் ஆற்காடு சாலையில் அளவுக்கு அதிகமான மணல் ஏற்றி வரும் லாரிகள் குறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதனைக் கண்ட டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து வேறொரு நபர் மூலமாக ஓட்டிச் சென்று போரூர் காவல் நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே நிறுத்தினர். இந்நிலையில், அதிக பாரம் தாங்காமல் லாரி திடீரென்று காவல்நிலைய சுற்றுச்சுவரின் மீது சாய்ந்தது. இதனால் காவல்நிலைய சுற்றுச்சுவர் உடைந்து சேதமானது. இதையடுத்து, போலீசார் ராட்சத கிரேன் மூலமாக கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தினர். லாரி கவிழ்ந்து காவல்நிலைய சுற்றுச்சுவர் உடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post லாரி கவிழ்ந்து காவல் நிலைய சுற்றுச்சுவர் சேதம் appeared first on Dinakaran.