×

மாயாருக்கு பஸ் இயக்க தாமதம்; பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

ஊட்டி: ஊட்டி அருகே மாயார் செல்லும் அரசு பஸ் கிளம்ப தாமதமானதால், ஊட்டி பஸ் நிலையத்தில் கோவைக்கு புறப்பட்ட பஸ்சை வழிமறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் ஊட்டி மண்டலத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், மேட்டுப்பாளையம்-2 ஆகிய 6 போக்குவரத்து பணிமனைகள் உள்ளது.

இங்கிருந்து கிராமப்புறங்கள் மட்டுமின்றி திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மலைப்பிரதேசத்தில் கிராமப்பகுதிகளுக்கு குறுகலான சாலைகள் வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் அரசு சிறிய ரக பஸ்களும் இயக்கப்படுகிறது.

இதற்கிடையே, பல பஸ்களில் மேற்கூரை போதிய பராமரிப்பின்றி உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை ஊட்டியில் இருந்து மாயார் செல்வதற்கு பஸ் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊட்டி பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து கோவை காந்திபுரம் சென்ற அரசு பஸ்சை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘‘மாயாருக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு வர வேண்டிய பஸ் ஒரு மணி நேரமாகியும் வரவில்லை.மேலும், 5:30 மணிக்கு வரவேண்டிய பஸ்சும் வரவில்லை. சரியான நேரத்திற்கு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாயார் பகுதிக்கு, ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி சாலை வழியாக சென்று வர வேண்டும். இதனால், அந்த பஸ்சில் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒவ்வொரு முறையும் சோதித்து தான் அந்த பஸ் இயக்கப்படும். நேற்று அந்த பஸ்ஸில் தேவைப்படும் ஒரு சில உதிரிபாகங்கள் மாற்றப்பட்டது. இதனால், சற்று நேரம் தாமதமானது. இனிமேல் தினசரி வழக்கமான நேரத்திற்கு இயக்கப்படும்,’’ என்றனர். சிறிது நேரத்தில் மாயார் பகுதிக்கு பஸ் இயக்கப்பட்டது.

The post மாயாருக்கு பஸ் இயக்க தாமதம்; பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mayar ,Ooty ,Ooty bus station ,Coimbatore ,State Transport Corporation ,Ooty-1 ,Ooty-2 ,Kudalur ,Kotagiri ,Ooty Zone ,Dinakaran ,
× RELATED நகர திமுக சார்பில் இன்று பொது உறுப்பினர்கள் கூட்டம்