×

ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை, ஆக.1: ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை), ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 295 பேருந்துகளும், நாளை மறுநாள் 325 பேருந்துகளும் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 60 பேருந்துகளும், நாளை மறுநாள் 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்கப்படும். மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆகஸ்ட் 4ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு அதிகளவில் பக்தர்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூருவிலிருந்தும் பொது மக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு செல்வர். எனவே வரும் ஆக.3ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கும் மற்றும் ஆக.4ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Audi ,Transport Corporation ,Chennai, ,Transport Department ,Managing Director ,Government Rapid Transport Corporation ,Dinakaran ,
× RELATED விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை...