×

சொத்து வரி வசூலிக்கும் போது பொதுமக்களிடம் கடுமை காட்டினால் நடவடிக்கை: மேயர் பிரியா எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கேள்வி நேரத்தில் 15வது வார்டு திமுக கவுன்சிலர் நந்தினி பேசுகையில், ‘கொசஸ்தலை ஆற்றை மழைக்காலங்களுக்குள் சரி செய்ய வேண்டும். மணலி புதுநகர் விரைவு சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட வேண்டும். மழைக்காலங்களில் மணலி புதுநகரில் பொதுமக்களை பாதுகாக்க மேடான பகுதியில் ஒரு சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும்,’ என்றார்.
13வது வார்டு திமுக கவுன்சிலர் சுசீலா பேசுகையில், ‘தெருக்களில் மழைநீர் தேங்குகிறது.

அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் நல மையத்தில் ஓராண்டாக மருத்துவர்கள் இல்லை. திருவொற்றியூர் வரதராஜன் தெருவில் 8 கிரவுண்ட் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் சமுதாய நலக்கூடமும், அங்கன்வாடி மையமும் அமைத்து தர வேண்டும்’ என்றார். 41வது வார்டு திமுக கவுன்சிலர் இளங்கோ பேசுகையில், ‘சொத்து வரியை வசூலிப்பதில் அதிகாரிகள் கடுமை காட்டுவதாக கூறப்படுகிறது. வார்டுகளில் கவுன்சிலர் நிதியிலிருந்து பெரிய திட்டங்களை கொண்டு வரும் போது நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. அப்போது அடுத்த ஆண்டுக்கான நிதியிலிருந்து எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்,’ என்றார்.

இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா பேசுகையில், ‘சொத்து வரி வசூலிக்கும் போது பொதுமக்களிடம் கடுமை காட்டக்கூடாது, என்று அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். வரைமுறை மீறி பொதுமக்களிடம் பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளோம். அப்படி ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் எனது கவனத்திற்கு கொண்டுவரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது கவுன்சிலர் நிதி போதவில்லை என்றால் அடுத்த ஆண்டுக்கான நிதியை எடுத்து செலவழிப்பது குறித்து விதி இருக்கிறதா என்பது தெரியவில்லை. அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,’ என்றார்.

The post சொத்து வரி வசூலிக்கும் போது பொதுமக்களிடம் கடுமை காட்டினால் நடவடிக்கை: மேயர் பிரியா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,Chennai ,Chennai Municipal Council ,Mayor ,Priya ,15th Ward ,DMK ,councilor ,Nandini ,Kosasthalai river ,Manali Pudunagar Expressway ,
× RELATED நீர்நிலைகளில் உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படும்: மேயர் பிரியா