×

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.. 40,000 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணை: ஊரக வளர்ச்சி துறை தகவல்..!!

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 40,000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியிட்டார். அறிவிப்பை தொடர்ந்து, இதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின. தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், இந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தில் சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள். சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது. பயனாளிகளுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கீட்டு தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அதில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.

இதையடுத்து கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் தேர்வை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்காக ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 40,000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மீதமுள்ள பயனாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஆணைகள் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.. 40,000 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணை: ஊரக வளர்ச்சி துறை தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,DMK alliance ,2021 assembly election ,Tamil Nadu ,M.K.Stalin ,Chief Minister ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணி சுமுகமாக உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி