×

சாலை பணிகள் நிறைவடைந்தது பைக்காரா படகு இல்லம் விரைவில் திறப்பு

*வனத்துறை அதிகாரிகள் தகவல்

ஊட்டி : ஊட்டி அருகே சாலை பணிகள் நிறைவடைந்த நிலையில் மழை காரணமாக விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, பைக்காரா படகு இல்லம் விரைவில் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி – கூடலூர் சாலையில் சுமார் 22 கி.மீ தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது. வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த அணையில் உள்ள நீரை கொண்டு சிங்காராவில் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் பைக்காரா அணையில் இருந்து கடநாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் வனத்திற்கு நடுவே உள்ள இந்த அணையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்து படகு பைக்காரா அணையில் படகு சவாரி செய்வது வழக்கம்.

குறிப்பாக இங்கு இயக்கப்படும் தண்ணீரை கிழித்துக்கொண்டு சீறி பாயும் ஸ்பீட் படகில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமான நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேரும் வருகின்றனர். சீசன் சமயங்களில் பல மடங்கு அதிகரிக்கும். ஊட்டி – கூடலூர் பிரதான சாலையில் இருந்து சுமார் 1.3 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக பைக்காரா படகு இல்லத்துக்கு செல்லவேண்டும். படகு இல்லத்திற்கு செல்ல கூடிய சாலையானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. படகு இல்லம் செல்வதற்கு
வனத்துறை மூலம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த படகு இல்ல சாலை, குண்டும் குழியுமாக காட்சியளித்து வந்தது. மிகவும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் சாலை சீரமைப்பிற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி சாலை சீரமைப்பு பணிகள் துவங்கின. இதன் காரணமாக பைக்காரா படகு இல்லம் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கான்கிரீட் சாலையாகவும், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் இன்டர்லாக் கற்கள் கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் பணிகள் நிறைவடைந்தன.

இச்சூழலில் கடந்த 15 நாட்களுக்ளும் மேலாக பெய்து வரும் மழை பெய்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி படகு இல்லம் திறக்கப்படவில்லை. மேலும் பலத்த காற்று காரணமாக சாலையில் பல இடங்களிலும் மரங்கள் விழுந்தன. இவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பைக்காரா வனச்சரகர் சரவணன் கூறுகையில், ‘‘வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைக்காரா படகு இல்ல சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. இந்த சூழலில் பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக பாதுகாப்பு கருதி படகு இல்லம் திறக்கவில்லை. மேலும் பலத்த காற்று காரணமாக படகு இல்ல சாலையில் மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படகு இல்லம் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றார்.

The post சாலை பணிகள் நிறைவடைந்தது பைக்காரா படகு இல்லம் விரைவில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Baikara Boat House ,Forest Department ,Ooty ,Baikara ,boat house ,Nilgiris ,Dinakaran ,
× RELATED சாலை பணிகள் நிறைவடைந்ததால் ஊட்டி...