×

கோணணூர் கால்வாயை தூய்மைபடுத்த வேண்டும்

*பொதுமக்கள் வலியுறுத்தல்

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று விநாடிக்கு 292 கனஅடியாக நீர் வரத்துள்ளது. பெங்களூர் மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளில் பெய்து வரும் மழையால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 51 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும், பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கே.ஆர்.பி அணையில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர், காவேரிப்பட்டிணம், நெடுங்கல், பேரூஅள்ளி, அகரம், பாரூர், அரசம்பட்டி, மஞ்சமேடு வழியாக பாம்பாறு, தென்பெண்ணை ஆற்றுக்கு தண்ணீர் செல்கிறது. பாரூர் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரியில் இருந்து விவசாய பானத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டால், அந்த தண்ணீர் போச்சம்பள்ளி, கோணணூர் ஏரிக்கு வந்து ஏரி நிரம்பி, இந்த ஏரியிலிருந்து திருவயல் கால்வாய் வழியாக திப்பனூர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கோணணூர் ஏரியில் இருந்து திருவயல் கால்வாய் வழியாக, திப்பனூர் ஏரி வரை சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு இடைப்பட்ட இடத்தில் உள்ள கால்வாய்களை செடி, கொடிகள், குப்பை கூளங்கள் ஆக்கிரமித்து காணப்படுகிறது.

கோணணூர் கால்வாய் அருகில் உள்ளதால், கட்டிட கழிவுகளை மூட்டை மூட்டையாக வீசி செல்வதால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் முன், ஆக்கிரமித்துள்ள செடி, கொடி, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோணணூர் கால்வாயை தூய்மைபடுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Konanur Canal ,Bochamballi ,Krishnagiri Dam ,Bangalore ,South Women ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அணை பாசன கால்வாய்களை ₹98 கோடியில் புனரமைக்க திட்டம்