×

ஊட்டியில் தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.மலை மாவட்டமான நீலகிரியில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் உள்ளனர். 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.

இதனிடையே இம்முறை ஏப்ரல், மே மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் கொளுத்தியதால் தேயிலை மகசூல் பாதித்தது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி ஜூன் மாதம் துவங்கவில்லை. ஜூன் மாதத்தில் அவ்வப்போது மட்டும் மழை பெய்த நிலையில், இம்மாதம் 13ம் தேதி துவங்கி பருவமழை தீவிரமடைந்தது.

சுமார் 15 நாட்களாக பலத்த காற்றுடன் இடைவிடாது மழை பெய்தது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. தேயிலை செடிகளில் பசுமையாக கொழுந்துகள் வளர்ச்சி இருந்தது. நல்ல மகசூல் ஈட்டும் நோக்கில் விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு உரமிட்டு பராமரித்தனர். ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

The post ஊட்டியில் தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : NEILAGIRI DISTRICT ,Nilgiri ,
× RELATED யானை மிதித்து பெண் சாவு