×

பஸ் பயணிகளிடம் நகை திருடிய கும்பல் கைது

*திருட்டு பணத்தில் சொந்த வீடு கட்டியது அம்பலம்

கோவை : கோவையில் பஸ் பயணிகளிடம் நகை திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதான கும்பல் திருட்டு பணத்தில் சொந்த வீடு கட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை மாநகரில் டவுன் பஸ்களில், பயணிகளிடம் நகை திருடுவது, குறிப்பாக பெண்களிடம் நகை பறிப்பது தொடர்பான புகார்கள் மாநகர போலீசாருக்கு அதிகளவில் வந்துகொண்டே இருந்தது.

இது பற்றி துப்பு துலக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, ஏட்டுகள் கார்த்தி, பூபதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள், சாதாரண உடை அணிந்து, மாநகர டவுன் பஸ்களில் நோட்டமிட்டனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் பஸ்சில் நோட்டமிட்டபோது முத்தப்பன்-சாந்தி தம்பதி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, இவர்கள், பஸ் பயணிகளிடம் நகை, பணம் திருடுவது தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கிருஷ்ணன்-காளீஸ்வரி, செல்வகுமார்-சுமதி ஆகிய மேலும் இரு தம்பதிகளையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, இந்த 3 தம்பதிகளும் (6 பேர்) கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் டவுன் பஸ்களில் ஏறி, பயணிகள் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நகை, பணம் திருடுவதை தொழிலாக கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 6 பேரையும் கடைவீதி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு, சப்-இன்ஸ்பெக்டர் பாமா, 6 பேரையும் கைது செய்தார். இவர்களிடமிருந்து ஒரு பைக், 10 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 6 பேரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களில், முத்தப்பன், கொள்ளை கும்பல் தலைவராக செயல்பட்டுள்ளார். இவர், போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: எங்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குரங்குமலை அருகே உள்ள மந்திதோப்பு ஆகும். அங்கிருந்து திருட்டு தொழிலில் ஈடுபடுவதற்காக கோவைக்கு வந்துள்ளோம். சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளோம். மாநகர டவுன் பஸ்களில், பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி, எங்களது கைவரிசையை காட்டுவோம்.

நகை பறித்தவுடன் அடுத்த பஸ் ஸ்டாப்பில் கீழே இறங்கிவிடுவோம். பஸ்சை பின்தொடர்ந்து, செல்வகுமார், கிருஷ்ணன் ஆகியோர் பைக்கில் வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களிடம் நகையை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் டவுன் பஸ்சில் ஏறிக்கொள்வோம். யாரேனும் சந்தேகப்பட்டு, எங்களை பிடித்து சோதனையிட்டால், சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம். இப்படி டெக்னிக்காக தொழிலில் ஈடுபட்டு வந்தோம். திருட்டு நகைகளை விற்று, கிணத்துக்கடவு பகுதியில் 3 வீடுகள் சொந்தமாக கட்டியுள்ளேன். செல்வகுமார்-சுமதி, கிருஷ்ணன்-காளீஸ்வரி தம்பதியினரும் சொந்த வீடு கட்டியுள்ளனர். நீண்ட காலமாக இந்த திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த தொழிலில் நன்றாக கைதேர்ந்து பழகி விட்டதால், வேறு தொழிலுக்கு செல்ல மனமில்லை. தற்போது, போலீசார் எங்களை பிடித்துவிட்டனர். நாங்கள் சிறை சென்றாலும், எங்களை ஜாமீனில் வெளியே எடுத்து, சட்டப்பூர்வமாக வழக்கை எதிர்கொள்ள, நபர்களை நியமித்துள்ளோம். அதனால், சிறை செல்வது எங்களுக்கு ஒன்றும் புதிது அல்ல. எங்களைப்போலவே மேலும் 10 தம்பதியினர் கோவை நகருக்குள் ஊடுருவி உள்ளனர்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

The post பஸ் பயணிகளிடம் நகை திருடிய கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Coimbatore ,Dinakaran ,
× RELATED குமரி பெண் டாக்டரை போல் மேலும் பலர்...