×

சேலம் மாவட்டத்தில் 1,879 பள்ளிகளில் பயிலும் 1.56 லட்சம் மாணவர்களுக்கு சீருடை

சேலம், ஜூலை 29: சேலம் மாவட்டத்தில் உள்ள 1,879 பள்ளிகளில் பயிலும் 1.56 லட்சம் மாணவர்களுக்கு, ₹9.17 கோடி மதிப்பிலான சீருடை வழங்கும் பணி நேற்று தொடங்கியது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் அங்கு படித்து வரும் மாணவர்களின் ேமம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை, பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் நலனுக்காக காலை உணவுத்திட்டம், விலையில்லா பாடபுத்தகம், சைக்கிள், பஸ் பாஸ், லேப்டாப், கணித உபகரணங்கள், சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இவை கொள்முதல் செய்யப்பட்டு படிப்படியாக விநியோகிக்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் சீருடையை பொறுத்தவரை, 1 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 9 மற்றும் 10ம் வகுப்புக்கு தனி சீருடையும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு தனி சீருடையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம், சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த துறையின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சீருடைகள் 4 செட் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 1,879 பள்ளிகளிலும் பயிலும், 1.56 லட்சம் மாணவர்களுக்கு, ₹9.17 கோடி மதிப்பிலான சீருடை வழங்கும் பணி நேற்று தொடங்கியது. கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு, சீருடை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி, வடக்கு ெதாகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், சிஇஓ கபீர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளிலும், நகராட்சி மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், 4 செட் சீருடைகள் வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கு சீருடைகள் தயார் செய்யும் பணி கடந்த இரு மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடந்து வந்தது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 1,879 பள்ளிகளைச் சேர்ந்த 79,949 மாணவர்கள் மற்றும் 76,478 மாணவிகள் என மொத்தம் 1,56,427 பேருக்கு சீருடை வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு 4 செட் என்ற அடிப்படையில் மொத்தம் 6,25,708 சீருடைகள் வழங்கப்படும். இதில் மாணவர்களுக்கான சீருடைக்கு ₹6.39 கோடியும், மாணவிகளுக்கான சீருடைக்கு ₹9.17 கோடியும் என, மொத்தம் ₹15.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்துடன் தையற்கூலி செலவினமாக ₹4.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தமாக ₹9.17 கோடி மதிப்பிலான சீருடைகள், 1.56 லட்சம் மாணவர்களுக்கு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. நடப்பாண்டு மாணவர்களுக்கான சீருடைகள் வழங்க ஏற்கனவே அளவெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தைக்கப்பட்டுள்ளது. இவை சமூக நலத்துறை மூலம் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சேலம் மாவட்டத்தில் 1,879 பள்ளிகளில் பயிலும் 1.56 லட்சம் மாணவர்களுக்கு சீருடை appeared first on Dinakaran.

Tags : Salem district ,Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஓமலூர் அருகே சூறாவளி காற்றில் வாழை...