×

ஓமலூர் அருகே சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்: விவசாயிகள் வேதனை

ஓமலூர்: ஓமலூர் அருகே நேற்று முன்தினம் பெய்த மழையின் போது வீசிய சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சாந்து சேதமானதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலுர் வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையை தொடர்ந்து, விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. நெல், வாழை, மஞ்சள், கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.

கடந்தாண்டு பெய்த மழையால் கிணறுகளில் தண்ணீர் உள்ளதால், நீராதாரம் உள்ள பகுதிகளில் விவசாயிகள் வாழையை அதிகமாக சாகுபடி செய்துள்ளனர். கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தில் மொந்தன், பூவன், ரஷ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை உள்ளிட்ட ரகங்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இந்த வாழை மரங்களில், பூ மற்றும் வாழை தார் பிடித்துள்ளது. இந்நிலையில் ஓமலூர் வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது பலத்த காற்று வீசியது.

இந்த காற்றுக்கு கோட்டமேட்டுப்பட்டி கிராமம் பருப்பு மில் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த, 250 வாழை மரங்கள் முழுமையாக உடைந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதில், வாழை பூ மற்றும் வாழை பிஞ்சு, வாழை காய்களுடன் கூடிய 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாந்தது. இதேபோல மேலும், சில இடங்களில் வாழை குழையுடன் மரங்கள் சாய்ந்து, வாழை விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் வேதனையில் உள்ளனர். ஒரு ஏக்கருக்கு சுமார் ₹1.5 லட்சம் வரை செலவு செய்து பயிரிட்டுள்ளனர். அனைத்தும், சாய்ந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்களுக்கு, தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தோட்டங்களை ஆய்வு செய்து இழப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

The post ஓமலூர் அருகே சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Omalur ,Salem district ,Dinakaran ,
× RELATED ஆவணமின்றி இயங்கிய ஆம்புலன்ஸ் பறிமுதல்