×

திருமங்கலம் அருகே அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தது விரைந்து சீரமைக்க கோரிக்கை

 

திருமங்கலம் ஜூலை 22: திருமங்கலம் அருகே மேலஉரப்பனூரில், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் மாணவ, மாணவியர், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இ தனை விரைந்து சீரமைக்க வேண்டும் என, அவர்கள் கோரியுள்ளனர். திருமங்கலம் அருகேயுள்ள மேல உரப்பனூர் கிராமத்தில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த பள்ளியில், தற்போது 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த பள்ளியின் பாதுகாப்பு கருதி சுற்றுசுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே வாறுகால் செல்கிறது. மழைக் காலங்களில் வாறுகாலில் தண்ணீர் அதிகம் செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளியின் முன்பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் சுமார் 50 அடிக்கு திடீரென இடிந்து விழுந்தது.

அந்த நேரத்தில் சுவர் அருகே மாணவர்கள் யாரும் இல்லை. திடீரென சுற்றுசுவர் இடிந்து விழுந்தததால் மாணவ, மாணவியர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில், பொதுபணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளியின் சுற்றுச்சுவரை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரியுள்ளனர்.

The post திருமங்கலம் அருகே அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தது விரைந்து சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Government Kallar Higher Secondary School ,Melurapanur ,Mela Urappanur ,Tirumangalam ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி