×

சாயக்கழிவுநீரை திறந்து விடும் சாய ஆலைகள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்கலாம்

 

திருப்பூர், ஜூலை 21: திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக சாயக்கழிவுநீரை திறந்து விடும் சாய ஆலைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் நிலைகளில் சாயக்கழிவுநீர் கலப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூர் வடக்கு மற்றும் பறக்கும் படை அதிகாரிகளால் திருப்பூர் வடக்கு அலுவலக எல்லைக்கு உட்பட்டு அமைந்திருக்கும் நீர் நிலைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களின் ஆய்வின் போது அனுமதியின்றி இயங்கி வரும் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக கழிவுநீர் வெளியேற்றும் பட்டன் ஜிப் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு கலெக்டர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவாயிலாக மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் சீல் வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 23 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 3 நிறுவனங்களுக்கு மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் நிலத்தையோ கட்டிடத்தையோ அனுமதி பெறாத தொழிலுக்கு வாடகைக்கு விட வேண்டாம். மேலும் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் முறைகேடாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் அல்லது சாயக்கழிவுநீரை வெளியேற்றும் சாய ஆலைகள் மற்றும் பட்டன் ஜிப் நிறுவனங்கள் பிரிண்டிங் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் 80560 33416, உதவி பொறியாளர் 78455 52693, சுற்றுச்சூழல் பொறியாளர் 78455 52938 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சாயக்கழிவுநீரை திறந்து விடும் சாய ஆலைகள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Collector ,Kristhraj ,Tirupur district ,Dinakaran ,
× RELATED நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய சுங்கச்சாவடியை அகற்ற ஆணை