×

அமெரிக்க ஸ்டைலில் சைவ உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

புதுசு புதுசா அதே சமயம் வித்தியாசமான உணவினை சுவைக்க விரும்புகிறார்கள் இளம் தலைமுறையினர். அவை பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாகவும் இருக்க வேண்டும். இதை புரிந்து கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக இளம் தலைமுறையினரை அட்ராக்ட் செய்யும் வகையில் பட்ஜெட் ஃப்ரெண்ட்லியான ‘ஜிக்கிஸ்’ என்ற உணவகத்தை அண்ணாநகரில் அமைத்துள்ளார் சென்னையை சேர்ந்த ஜிங்கேஷ். அமெரிக்காவில் வழங்கப்படும் ஸ்மால் பைட்ஸ் உணவுகளை இந்தியன் ஸ்டைலில் முழுக்க முழுக்க சைவ உணவுகளாக அளித்து வருகிறார்.  “ஸ்டீல்‌ மற்றும்‌ இரும்புதான்‌ எங்க குடும்பத்‌ தொழில்‌. பூர்வீகம்‌ குஜராத்‌ என்றாலும்‌ நாங்க 1960ல்‌ சென்னைக்கு குடி பெயர்ந்தோம்‌.

இங்கு ஒரு ஹார்டுவேர்‌ கடையினைதான்‌ முதலில்‌ அப்பா துவங்கினார்‌. அது அப்படியே வளர்ந்து தற்போது நாங்க குடும்பமாக ஸ்டீல்‌ மற்றும்‌ இரும்பு பிசினஸில்‌ ஈடுபட்டு வருகிறோம்‌. எனக்கு உணவு மேல்‌ தனிப்பட்ட ஈர்ப்புண்டு. அதனால்‌ சென்னையில்‌ ஒரு உணவகம்‌ அமைக்க வேண்டும்‌ என்பது என்னுடைய நீண்ட நாள்‌ கனவு. முதலில்‌ அமெரிக்க உணவகம் ஒன்றினை அறிமுகம்‌ செய்தேன்‌.

ஆனால்‌ இரண்டு வருடத்‌திற்கு மேல்‌ அதனை தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதில்‌ கிடைத்த அனுபவத்‌தில்‌ மல்டி குசைன் உணவகம்‌ ஒன்றை துவங்கினேன்‌. ஆனால் மக்கள் விரும்பும் உணவு வேறாக இருந்தது. ஒரே இடத்தில்‌ அனைத்து உணவுகளை சாப்பிட அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்ைல. அதனால் ஒரே உணவகமாக இல்லாமல், அதில் உள்ள குசைன்களை தனித்தனி உணவகமாக அமைக்க திட்டமிட்டேன்.

அதில்‌ ஒரு குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே தனிச்சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டதுதான் இந்த ஜிக்கிஸ் உணவகம். நான் ஏற்கனவே அமெரிக்கன் உணவுகள் சார்ந்த ஒரு உணவகம் அமைத்திருந்தாலும், அதில் கொடுக்கப்பட்ட உணவுகள் போல் இல்லாமல், அதே அமெரிக்க ஸ்டைலில் ஸ்மால் பைட்ஸ் உணவாக இங்கு கொடுக்க விரும்பினேன்’’ என்றவர் இந்த உணவகத்தில் உள்ள உணவுகள் குறித்து விவரித்தார்.

‘‘பெரும்பாலானவர்கள் ஸ்மால் பைட்ஸ் உணவுகளைதான் அதிகம் விரும்புகிறார்கள். மேலும் இது போன்ற உணவுகள் நண்பர்களுடன் நேரம் செலவழித்துக் கொண்டே எளிதாக சாப்பிடக்கூடியவை. அவர்களின் விருப்பம் அறிந்து அசைவத்தில் கொடுக்கக்கூடிய அதே உணவுகளை சைவத்தில் கொடுக்க முடிவு செய்தேன். பொதுவாக அமெரிக்க உணவில் சிப்ஸ், நாச்சோஸ், பீட்சா, பாட்சா, டாக்கேஸ், சாண்ட்விச், பர்கர் போன்ற உணவுகள்தான் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு உணவுக்கும் ஒரு குறிப்பிட்ட சாஸ்களை பயன்படுத்துவார்கள். அந்த சாஸ்கள்தான் அந்த உணவின் சுவையினை மேலும் மெருகேற்றும். சொல்லப்போனால் சாதாரண ஒரு சிப்சிற்கு கூட சாஸ் இல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.

அதனால் நான் 18க்கும் மேற்பட்ட சாஸ்களை இங்கு அறிமுகம் செய்திருக்கிறேன். காரம், மிக காரம், இனிப்பு, புளிப்பு என அனைத்து சுவைகளிலும் சாஸ்கள் உள்ளன. இந்த சாஸ்களை நாங்க அதன் தன்மைக்கு ஏற்ப ஹாட் சாஸ், ஸ்பெஷல் சாஸ், ரெகுலர் மற்றும் ஜெயின் சாஸ்கள் என பிரித்து இருக்கிறோம். ஹாட் சாஸ் பெரும்பாலும் வேகன் என்பதால் அதில் உள்ள பலவிதமான சாஸ்கள் அனைத்தும் மிகவும் காரமாக இருக்கும். ரெகுலர் வகை சாஸ்களில் சீஸ், கார்லிக் ராஞ்ச், ஹனி மஸ்டர்ட், ஸ்பைசி கார்லிக் மேயோ, தந்தூரி மேயோ போன்ற சாஸ்கள் அடங்கும். ஜெயின் உணவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாத பார்பெக்யு சாஸ், ஜலபென்னோ சீஸ், மின்ட் மேயோ, தக்காளி போன்ற சாஸ்களை கொடுக்கிறோம்.

பீட்சாவில் ஒரு முழு பீட்சாவாக இல்லாமல், அதனை ஒரு சின்ன துண்டாக மட்டும் தருகிறோம். இதில் பேசில் இலை, செடார் சீஸ், மக்ரோனி சேர்க்கப்பட்ட மேக் பீட்சா, ஆலிவ், சன்டிரைட் தக்காளி, சீஸ் கொண்ட சிசிலியனா பீட்சா, செர்ரி தக்காளி, சிப்போட்லே சாஸ், கோசங் சாஸ், மஷ்ரூம், வெங்காயம், ஸ்வீட்கார்ன் சேர்க்கப்பட்ட கொரியன் பீட்சா…
இவ்வாறு பீட்சாவிலேயே பத்து வகை உள்ளது. அதே போல் பாஸ்தாவிலும் அராபியாட்டா, ஆல்பிரட்டோ, பெஸ்தோ என ஐந்து வகை பாஸ்தாக்கள் உள்ளன. சிப்சில் நாச்சோ, பிரஞ்ச் ஃபிரைஸ், மசாலா ஃபிரைஸ், டாக்கோ சிப்ஸ் கொடுக்கிறோம்.

எங்களின் ஸ்பெஷல் உணவு என்றால் அது காலி விங்கஸ், பர்கவிச், சிக்கன் விங்கஸ் போல் காலிஃபிளவரில் அதே சுவையில் கொடுப்பதுதான் காலி விங்கஸ். பர்கவிச் என்பது பர்கர் மற்றும் சாண்ட்விச் இரண்டையும் இணைத்து அதில் பன்னீர், காய்கறிகள், மஷ்ரூம் ஸ்டப் செய்து கொடுக்கிறோம். சிலர் ஒரு முழு மீல் போன்ற உணவினை சாப்பிட விரும்புவார்கள். அவர்களுக்கானதுதான் ராப்ஸ் மற்றும் ரைஸ் பவுல். இதில் பன்னீர் மற்றும் மஷ்ரூம் என இரண்டு விதமான பவுல்களை தருகிறோம். பன்னீர் ரைஸ் பவுலில் பான் ஃபிரை பன்னீர், சிப்போட்லே சாஸ், குடை மிளகாய், ஜலபென்னோ, ரெட் பீன்ஸ் சேர்த்து தருகிறோம். இதுவே மஷ்ரூம் என்றால் அதில் காய்கறிகள், ஆலிவ் சேர்த்து தருகிறோம். மேலும் உங்களுக்கு விருப்பமான காய்கறி, சிப்ஸ், சீஸ் கொண்டு சாலட்களை தயாரித்துக் கொள்ளலாம்.

எங்களின் அடுத்த ஸ்பெஷாலிட்டி இங்கு நாங்க கொடுக்கும் பல வகையான குளிர் மற்றும் சூடான பானங்கள் தான். கோல்ட் காபி, ஃபேஷன் ஃப்ரூட் மொஜிட்டோ, ரெயின்போ மொஜிட்டோ, காஃபே லாட்டே, காஃபே மோகாசினோ, ஹாட் சாக்லேட்… இவை தவிர மில்க் ஷேக் மற்றும் ஐஸ்கிரீம் சேர்க்கப்பட்ட சோடா போன்ற பானங்களும் உள்ளன.
ஒவ்வொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவையுண்டு.

அதை நாம் எந்த வடிவில் கொடுக்கிறோம் என்பதில்தான் அதன் தனித்துவம் அடங்கியுள்ளது. சாட் உணவுகளுக்கு என தனிப்பட்ட விருப்பம் உண்டு. அதே போல்தான் மற்ற உணவுகளும். ஆனால் இந்த உணவுகளை நாம் ஸ்நாக்ஸ் வடிவில் கொடுக்கும் போது எல்லோரும் அதனை விரும்பி சாப்பிட முன்வருவார்கள். அந்த அடிப்படையில்தான் இந்த உணவகத்தில் உள்ள மெனுவினை திட்டமிட்டிருக்கிறேன். இதில் மேலும் பல உணவுகளை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. உதாரணத்திற்கு நாணை டாக்கோஸ் போல் அமைத்து அதனுள் பன்னீர் பட்டர் மசாலாவினை ஸ்டஃப் செய்யும் எண்ணம் உள்ளது’’ என்றார் ஜிங்கேஷ்‌.

தொகுப்பு: ரிதி

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

The post அமெரிக்க ஸ்டைலில் சைவ உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED தொழிலதிபரான பள்ளி மாணவி!