நியூயார்க்: ஈரானின் துணை ராணுவ படை தளபதி காசிம் சுலைமானியை அப்போதைய டிரம்ப் அரசு ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்ததற்கு பழிவாங்குவதற்காக அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரான் துணை ராணுவத்தின் சிறப்பு அதிரடி படை பிரிவு தளபதியாக இருந்தவர் காசிம் சுலைமானி. அந்நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். இவர், ஈராக் சென்றிருந்தபோது, அவரை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கடந்த 2020, ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதில் சுலைமானி உள்பட 8 பேர் உயிரிழந்தனர். சுலைமானியை படுகொலை செய்வதற்கான உத்தரவை டொனால்ட் டிரம்ப் நேரடியாக பிறப்பித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவர், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லர் நகரில் டிரம்ப் கடந்த 13ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகிலுள்ள கட்டடத்தின் கூரையில் இருந்து தாமஸ் மாத்யூ க்ரூக்ஸ் (20) என்பவர், அவரை நோக்கி 8 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப்பின் காதை துப்பாக்கி தோட்டா உரசி சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது. இது தவிர, துப்பாக்கி குண்டு பாய்ந்து கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர். டிரம்ப்பின் காதில் காயம் ஏற்படுத்திய துப்பாக்கி குண்டு பாய்ந்து வந்த பாதையின் குறுக்கே அவரின் தலை 2 விநாடிகளாக அப்படியே நிலைத்திருந்தது. பின்னர் திடீரென எதையோ படிப்பதற்காக தலையை சற்றே சரித்ததால் நூலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்ட தாமஸ் மாத்யூ க்ரூக்ஸை மற்றொரு கூரையில் இருந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிரம்ப்பின் பாதுகாவலர்கள் உடனடியாக சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படுகொலை முயற்சி குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில், சுலைமானி படுகொலைக்கு பழிவாங்குவதற்காக இந்த படுகொலை முயற்சியில் ஈரான் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த 13ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், டிரம்ப்பை படுகொலை செய்ய அந்த நாடு சதி திட்டம் தீட்டியுள்ளது உண்மைதான்’ என்றார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலேயே, டிரம்பை படுகொலை செய்யும் திட்டமில்லை என்று ஈரான் தற்போது தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் நாசர் கனானி கூறியதாவது: அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் எங்கள் நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அதுபோல், தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்கு பழிவாங்குவதற்காக டிரம்ப்பை கொல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதும் தவறான தகவல். சுலைமானி படுகொலையை பொருத்தவரை, அதற்கு நேரடி தொடர்புடைய டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துதான் பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டு டிரம்பை கொல்ல முயன்ற விவகாரம்; ஈரான் மறுப்பு appeared first on Dinakaran.