×
Saravana Stores

அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது; அமெரிக்க வாக்காளர்களை கவரும் பிரசார யுக்திகள்: டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் தீவிர ஆர்வம்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க வாக்காளர்களை கவரும் பிரசார யுக்திகளை டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர், 5ம் தேதி நடைபெறவுள்ளது. இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், நாட்டின் 60வது அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும்தான் முதன்மையான போட்டி நிலவுகிறது. இவற்றைத் தவிர மூன்றாவது மற்றும் சிறு, குறு கட்சிகளாக சுதந்திரவாதக் கட்சி, பசுமைக் கட்சி, அரசியலமைப்பு கட்சி, கூட்டணிக் கட்சி, வெர்மான்ட் முற்போக்கு கட்சி, ஃப்ளோரிடா சுதந்திரக் கட்சி, அமைதி மற்றும் விடுதலைக் கட்சி போன்றவையும் போட்டியிடுகின்றன. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

கடந்த ஜூன் 27ம் தேதிதொலைக்காட்சியொன்றில் நேரலையாக அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, பலமுறை பேச வார்த்தைகள் கிடைக்காமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அர்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள், அவரால் இந்தத் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா? என்ற கவலையை அவருடைய ஜனநாயகக் கட்சியினரிடையே ஏற்படுத்திவிட்டது. இதனையடுத்து, தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

அதன்பின் சிகாகோவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் வருகிற அதிபர் தேர்தலின் வேட்பாளராகத் துணை அதிபர் கமலா ஹாரிஸை அறிவித்தார். இந்த நிலையில் டிரம்புக்கும், கமலா ஹாரிசுக்கும் இடையிலான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவருவதற்காக விதவிதமான பிரசார யுக்திகளும் கையாளப்பட்டு வருகின்றன. டிரம்ப், கமலா ஹாரிசின் புகைப்படங்கள் அடங்கிய விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் தொடங்கி டி-சர்ட் என்று பல தளங்களிலும் வர்த்தகமும் சூடுபிடித்துள்ளது. உலகமே எதிர்பார்க்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவாரா? கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா? என்பது வரும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

The post அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது; அமெரிக்க வாக்காளர்களை கவரும் பிரசார யுக்திகள்: டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் தீவிர ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Trump ,Kamala Harris ,New York ,United States ,
× RELATED அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப்: கமலா ஹாரிஸ் காட்டம்