பெரம்பூர்: ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்திருந்த நிலையில், 3வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை கத்திரிக்கோலால் கொடூரமாக குத்திக்கொன்ற தந்தையை கைது செய்தனர். இது பெரும் அ்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி சுந்தரம் 4வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவர் கூலி தொழிலாளி.
இவரது மனைவி விஜயலட்சுமி (30). தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 3வது பிரசவத்துக்காக விஜயலட்சுமியை கடந்த ஜூன் 29ம்தேதி அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்திருந்த நிலையில், பெண் குழந்தை பிறந்ததால் கணவர் உள்பட குடும்பத்தினர் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 4ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். இதன்பிறகு 7ம்தேதி குழந்தை வயிற்றில் காயத்துடன் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். குழந்தையின் வயிற்றில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகம் அடைந்து 8ம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து வடக்கு மண்டல மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் சென்று குழந்தையின் காயங்களை பார்த்தனர். இதுசம்பந்தமாக பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது தாய், ‘’பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துவிட்டு வெளியே இருந்துவிட்டு மீண்டும் சென்று பார்த்தபோது வயிற்றில் ரத்த காயத்துடன் குடல் சரிந்து கிடந்தது’ என்று தெரிவித்துள்ளானர்.
இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு மையம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், கடந்த 10ம்தேதி குழந்தை பரிதாபமாக இறந்தது. குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருந்ததால் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் மாதிரிகள் எடுக்கப்பட்டன.
நேற்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘’கூர்மையான ஆயுதம் மூலம் குழந்தையின் வயிற்றில் குத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டது.இதன்அடிப்படையில், வியாசர்பாடி (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தியபோது, ‘’கணவரின் செயல்பாடுகளில் சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குழந்தையின் தந்தை ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தியபோது, ‘’ 3வதும் பெண் குழந்தை என்பதால் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.சம்பவம் நடந்தபோது மனைவி விஜயலட்சுமி குளித்துக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் குழந்தை அழுதுள்ளது. ஏற்கனவே பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கோபத்தில் இருந்த ராஜ்குமார், கத்திரிக் கோலை வைத்து குழந்தை வயிற்றில் குத்திவிட்டு உடல் மீது துணியை போர்த்தியுள்ளார்.
இதன் பின்னர் கத்திரிக்கோலை மறைத்து வைத்துள்ளார். குளித்துவிட்டு வந்த மனைவி சென்று பார்த்தபோது குழந்தையின் குடல் சரிந்து ரத்தம் வந்துக்கொண்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி கணவரிடம் கேட்டபோது குழந்தை பிறக்கும்போது குடல் சரியில்லை என்று மருத்துவர்கள் கூறினர் என்று நம்பவைத்து உள்ளார்.
ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3வதும் பெண் குழந்தை பிறந்ததால் காப்பாற்ற முடியாது என்று நினைத்துள்ளார். இதன்காரணமாக குழந்தையை கொடூரமாக குத்திக் கொலை செய்து உள்ளார். இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை வழக்குபதிவு செய்து நேற்றிரவு ராஜ்குமாரை கைது செய்தனர். இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆண் குழந்தை என்று நினைத்திருந்தபோது 3வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற தந்தை: வியாசர்பாடியில் பயங்கரம் appeared first on Dinakaran.