சிவா சிவசங்கரன் என்று பெயர் இருந்தால் அவரை சிவா என்று அழைக்கிறோம். ஆனால், சிவா என்பது பெண்பால் பெயர். சிவ என்றால்தான் ஆண்பால் பெயர். இன்னும் சொல்லப் போனால் சிவஹ… ராமஹ… கிருஷ்ணஹ… என்று வரும்போது ஆண்பால் பெயர். அதே சிவா என்றால் பெண்பால் பெயர். அதேபோலத்தான் கிருஷ்ண… கிருஷ்ணா… போன்ற பெயரும்கூட இதில் கிருஷ்ண என்பதுதான் கிருஷ்ணனுடைய பெயர். அதேபெயரை நீங்கள் பெண்பால் பெயராக சொன்னால் அது திரௌபதியின் மற்றொரு பெயரான கிருஷ்ணா என்று வரும். திரௌபதிக்கு கிருஷ்ணா என்றொரு பெயர் உண்டு. இப்போது சிவ… என்றால் சிவனுடைய பெயர். சிவா என்றால் அம்பாளுடைய பெயர். இங்கே அம்பாளுக்கு சிவா என்கிற நாமம் வருகிறது. சிவா என்பது அம்பிகையினுடைய நாமம்.
இந்த லலிதா சஹஸ்ரநாமத்தில் சில நாமங்கள் பார்க்கும்போது சமஸ்கிருத இலக்கணத்தையும், தமிழ் இலக்கணத்தையும் கொஞ்சம் கொண்டு வந்து புரிந்துகொள்ள வேண்டியதிருக்கும். ஏனெனில், சமஸ்கிருத இலக்கணப்படி ஆகாராந்தம் – அதாவது ஆ என்ற (நெடில்) எழுத்தில் முடிவடையக் கூடியது, அதேபோல ஈகாராந்தம் என்கிற எழுத்தில் முடிவடையக் கூடியது. பெரும்பாலும் நெடில் எழுத்தில் முடிவடையக் கூடியது எல்லாமே ஸ்த்ரீ லிங்கமாக இருக்கும். தமிழில் பெண்பால் என்போம் அல்லவா. அதுதான். ஆங்கிலத்தில் feminine gender. உதாரணத்திற்கு லக்ஷ்மி என்று சொல்கிறோம் எனில் உண்மையில் லக்ஷ்மீ என்றுதான் சொல்ல வேண்டும். உமா என்கிற பெயரில் ஆகாராந்தம் அங்கு வரும். அப்படிப் பார்க்கும்போது சிவா என்றால் அது ஸ்த்ரீ லிங்கம். ஆனால், நாம் ஆண்களையும் சேர்த்து சிவா என்று அழைக்கிறோம்.
இதற்கு முந்தைய நாமங்களான சிவகாமேஸ்வராங்கஸ்தா என்கிற நாமமும், சிவா என்கிற நாமமும், இதற்கு அடுத்து இருக்கக்கூடிய ஸ்வாதீன வல்லபா என்கிற இந்த மூன்று நாமமுமே சிவசக்தி சம்மந்தத்தை காட்டுகின்றன. அப்படிப் பார்க்கும்போது இதற்கு முந்தைய நாமமான சிவகாமேஸ்வராங்கஸ்தா என்று சொல்லும்போது சிவ காமேஸ்வரருடைய அங்கத்தில் அதாவது இடது மடியில் வீற்றிருப்பவள். இதற்கு முந்தைய நாமத்தில் நமக்கொரு விஷயம் புலப்படும். என்னவெனில், சிவ காமேஸ்வரருடைய இடது மடியில் வீற்றிருப்பவள் என்று சொன்னாலே அந்த இடத்தில் சிவகாமேஸ்வரருடைய உருவம் நமக்கு தெரிந்து விடுகிறது. அங்குதான் சிவகாமேஸ்வரர் அங்கத்தில் இடது மடியில் வீற்றிருக்கிறார். அம்பிகையினுடைய உருவத்தை நாம் இதற்கு முன்பு தலைமுதல் பாதம் வரை (கேசாதி பாதாந்தம் என்பார்கள்) வர்ணனையில் பார்த்து விட்டோம்.
இப்போது அந்த அம்பாள் சிவகாமேஸ்வரருடைய இடது மடியில் வீற்றிருக்கிறாள் என்றால், சிவகாமேஸ்வரருக்கும் ஒரு உருவம் இருக்கிறது என்று தெரிந்து விட்டது. அப்போது இந்த இரண்டு உருவங்களும் சேர்ந்து இருக்கக் கூடியதுதான் முந்தைய நாமா. சென்ற நாமமானது இந்த சிவசக்தி சொரூபத்திற்கு நடுவே இருக்கும் உருவ சாமரஸ்யத்தை காண்பித்துக் கொடுத்தது. ரூபத்தில் இருக்கக்கூடிய ஒற்றுமை. இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் அம்பாள் சுவாமியினுடைய ரூபத்தை வர்ணிக்கும்போது, இதற்கு முந்தைய நாமாவில் அந்த அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். அதாவது, பஞ்ச ப்ரம்மம், பிரம்ம விஷ்ணு ருத்ர மகேஸ்வரன்.
அதற்குமேல் சதாசிவ மூர்த்தி, அதற்குமேல் மகாகாமேஸ்வரர் மகாகாமேஸ்வரரின் இடது மடியில் மகாகாமேஸ்வரியான அம்பாள் என்று பார்த்தோம். இப்போது அந்த ரூபம் எப்படியிருக்குமென்று பார்த்தால், இரண்டு பேருடைய ரூபமும் ஒரே மாதிரி இருக்கும். அதாவது அம்பிகையின் கையில் வைத்துக் கொண்டிருக்கக்கூடிய புஷ்ப பாணம், கரும்புவில், பாசம், அங்குசம் போன்றவை அம்பாளுக்கு எப்படி உண்டோ அதேபோன்று சுவாமிக்கும் உண்டு. சுவாமிக்கு எப்படி தலையில் பிறைச்சந்திரன் உண்டோ அப்படியே அம்பாளுக்கும் பிறைச்சந்திரன் உண்டு. சுவாமிக்கு எப்படி மூன்று கண்கள் உண்டோ, அம்பாளுக்கும் மூன்று கண்கள் உண்டு. அதனால் அவர் திரிபுரசுந்தரி இவர் சுந்தரேஸ்வரர்.
இப்போது இப்படி உருவத்தில் ஒற்றுமை (ரூப சாமரஸ்ரம்) ஓரளவிற்கு தெரிந்ததற்கு பிறகு, இந்த நாமாவில் அந்த சாதகன் ரூப சாமரஸ்யத்தை சகுண ரூபத்தில், சிவசக்தி ஐக்கிய சொரூபத்தை சகுண உபாசனை செய்வது ஸ்ரீவித்யா மார்க்கம். அந்த சகுண உபாசனையில் முந்தைய நாமாவில் அந்த ரூப சாமரஸ்யத்தை தரிசனம் செய்ததற்குப் பிறகு, இப்போது இந்த நாமாவில் அந்த சாதகனுக்கு முக்கியமான ஒரு விஷயம் காட்டப்படுகின்றது. என்ன விஷயம் காட்டப்படுகிறதெனில், அந்த நாமத்திலும் ஒரு சாமரஸ்யம் உண்டு என்பதே இந்த நாமத்தின் மூலமாக வாக்தேவதைகள் வர்ணிக்கிறார்கள். எனவே, நாம சாமரஸ்யத்தை காண்பித்துக் கொடுக்கக்கூடியது இந்த நாமம். நாம சாம்ரஸ்யம் என்கிற நாமத்தின் மேன்மையும் அதன் உட்பொருளாக ஊடுருவி நிற்கும் ஒற்றுமையும் நாமத்திலும் உண்டு என்பதுதான் இந்த நாமத்தின் மூலமாக நமக்கு வெளிப்படுத்தப்படும் கருத்தாகும்.
அது என்ன நாம சாமரஸ்யம் என்றால், சிவனுக்கு சிவ என்று பெயர். அம்பாளுக்கு சிவா என்று பெயர். அப்போது இரண்டு பேருடைய நாமமும் ஒன்றுதான். இப்போது மீண்டும் கொஞ்சம் சமஸ்கிருத இலக்கணத்திற்கு வருவோம். ஆண்பால், பெண்பால் – பூ லிங்கம், ஸ்த்ரீ லிங்கம் என்று பிரித்து விட்டு மூன்றாவது நபூம்சக லிங்கம் என்று பிரிப்பார்கள். இந்த நபூம்சக லிங்கத்தை தமிழில் அக்றினை என்று சொல்வோம். ஆனால், இங்கு சமஸ்கிருதத்தில் அது அக்றினை என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில், இந்த நபூம்சக லிங்கம் என்பது உயர்வான லிங்கம் – உயர்திணை – என்கிற உயர் பால் வேற்றுமையில் குறிப்பிடுவதும் இருக்கிறது. ஆண் பாலையும் தாண்டி பெண் பாலையும் தாண்டி, உயர்பாலான ஒன்றை குறிப்பிட நபூம்சக லிங்கம் என்கிற வார்த்தையை சமஸ்கிருதத்தில் குறிப்பிடுவார்கள்.
இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம். பிரம்மம் என்கிற வார்த்தை இருக்கிறதல்லவா… இது நபூம்சக லிங்கம். இப்போது புரிகிறதா. அது உயர்ந்த விஷயத்தை இங்கு குறிக்கிறது. அதனால்தான், ஸ்ரீ ரமண பகவான் போன்ற ஞானிகளை சொல்லும்போது பகவான் கூப்பிடுது என்றுதான் சொல்வோம். பகவான் சொல்லுச்சு. பகவான் உத்தரவு செஞ்சுருக்கு. பகவான் சாப்பிடுது, பகவான் வருது என்று சொன்னால், இந்த இடத்தில் வருது சொல்லுது போகுது போன்றவையெல்லாம் தாழ்வான வார்த்தையில்லை. இங்கு உயர்ந்த நிலையில் பிரம்மத்தை நாம் அது என்று சொல்கிறோமோ தத் சொல்கிறோமோ, பிரம்மத்தை தத் என்கிற வார்த்தையால் குறிப்பிடுகிறோம். அதுபோல உயர்ந்தவர்களை, ஞானிகளை, சுவாமிகளை நாம் தத் பதத்தால் குறிப்பிடுகிறோம். அதனால்தான், அவர்களை சுவாமி வந்துச்சு. சுவாமி என்ன சொல்லுச்சு… சுவாமி என்ன சொல்லுச்சு என்றால் இதென்ன சுவாமியை மரியாதை இல்லாமல் சொல்கிறார்களோ என்று தோன்றலாம்.
ஆனால், சுவாமி என்ன சொல்லுச்சு என்றால் அது உயர்ந்த மரியாதை. இன்றைக்கும் ஆதீன மடங்களிலேயும் அந்தப் பழக்கம் இருக்கிறது. சந்நிதானம் என்ன சொல்லுச்சு என்று கேட்பார்கள். சந்நிதானம் பூஜைக்கு போயிருச்சா என்றெல்லாம் கேட்பார்கள். இதிலுள்ள விஷயம் என்னவெனில், தத் பதம் என்கிற அது என்று குறிப்பிடுவது. இப்போது இந்த இடத்தில் இந்த தத் பதம் எப்படி பிரம்மமானது இரண்டு பால்வினை வேறுபாட்டையும் தாண்டி இருக்கிறதோ அதுபோன்று இங்கு புல்லிங்கம், ஸ்த்ரீ லிங்கம், நபூம்சக லிங்கம் என்று சொல்லும்போது ஆண்பாலாகச் சொல்லும்போது சிவ என்றும், பெண்பாலாகச் சொல்லும்போது சிவா என்று அம்பாளுக்குப் பெயர். நபூம்சகம் என்பதான இரண்டு பால்வினை பாகுபாட்டிலும் சேராததாகச் சொல்லும்போது ஷிவம் என்று பெயர்.
இந்த ஷிவம் என்று சொல்லக் கூடியதுதான் நாம் சொல்லக் கூடிய பிரம்மம். இந்த பிரம்மமானது நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கும்போது அதை புருஷமாகவோ ஸ்த்ரீயாகவோ வேறுபடுத்தி பார்க்க முடியாத சமயத்தில் அது சிவம் என்கிற நிலையில் இருக்கிறது. மாண்டூக்ய உபநிஷதத்திலிருந்து ஒரு விஷயம் பேசினோம். மாண்டூக்ய உபநிஷதத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது. என்னவெனில், ‘‘பிரபஞ்சோப சமம் சாந்தம் ஷிவம் சதுர்த்தம் அத்வைதம் மன்யந்தே’’ என்று வருகிறது. பிரபஞ்ச உபசமம் – இந்த பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றி மீண்டும் எங்கு லயமாகின்றதோ அந்த லயமாகக் கூடிய இடம் எப்படி இருக்குமெனில் சாந்தமாக இருக்கும்.
எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு, எல்லாவற்றையும் தனக்குள் லயப்படுத்திக் கொண்டு சாந்தமாக… எந்தவித மாறுபாடும் இல்லாமல் இருக்கக்கூடிய அந்த பிரபஞ்சோப சமம் சாந்தம் என்கிற வஸ்து எப்படியிருக்கிறதெனில், ஷிவம் என்கிற நிலையில் இருக்கிறது என்று உபநிஷதம் சொல்கிறது. அப்படி ஷிவமாக இருக்கக்கூடிய வஸ்து எப்படியிருக்கிறது எனில் சதுர்த்தமாக என்று சொல்லப்படுகின்ற நான்காவது நிலையில் இருக்கிறது. நான்காவது நிலை என்பதற்கு நிறைய விஷயங்களை உதாரணமாக கூறலாம். அதாவது ஜாக்ரம் என்கிற விழிப்பு நிலை, சொப்பனம் என்கிற கனவு நிலை, சுழுப்தி என்கிற கனவுகளும் அற்ற தூக்கநிலை என்பதையெல்லாம் தாண்டி துரீய நிலையில் இருப்பதைத்தான் நான்காவது நிலை என்று சொல்கிறோம். அதேபோல மூன்று காலங்களை தாண்டியுள்ள வஸ்து. மூன்று தேகங்களான ஸ்தூல, சூட்சும, காரண தேகத்தை கடந்தது.
ஆனால், மாண்டூக்ய உபநிஷதம் சொல்கிறது, இந்த ஜீவாத்மாவானது வைஸ்வானரன், பிராக்ஞன், தைஜஸன் – அதேபோல பரமாத்மாவானது ஹிரண்ய கர்ப்பன், விராட், ஈஸ்வரன் என்கிற மூன்று நிலையில் இருக்கிறான். இந்த மூன்று நிலைகளையும் தாண்டி ஓரிடத்தில் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறில்லை என்று வரும்போது நான்காவது நிலையில் ஆத்மா மட்டும்தான் உள்ளது. அங்கு எந்த பேதமும் இல்லை. அந்த ஆத்ம வஸ்துவைத்தான் இங்கு உபநிஷதம் பிரபஞ்சோப சமம் சாந்தம் என்று குறிப்பிடுகிறது. அந்த ஷிவம் நான்காவது நிலையில் இருக்கிறது. அதற்கடுத்து அத்வைதமாக இருக்கிறது. இரண்டாவதான பொருள் இல்லாமல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று உபநிஷதம் சொல்கிறது.
இப்படி நான்காவது நிலையில் இருக்கக்கூடிய ஷிவம் என்கிற பிரம்மம் ஆத்ம வஸ்துவான தன்னுடைய கருணை எப்பொழுது வெளிப்படுகிறதோ, ஷிவமாக இருக்கக் கூடிய வஸ்து சிவ… சிவா… என்று இரண்டாகப் பிரிகிறது. அப்போது ஷிவமாகவே இருந்த அந்த வஸ்து, அங்கு கருணை பெருகும்போது சிவ என்கிற காமேஸ்வரராகவும், சிவா என்கிற மகா காமேஸ்வரியாகவும் இரண்டாக வந்து இந்த சிருஷ்டி முதலான விஷயங்களை அந்த பிரம்மம் செய்கிறது. அந்த நிலையில் காமேஸ்வரராக இருக்கக்கூடிய சுவாமிக்கு சிவ என்று பெயர். காமேஸ்வரியாக இருக்கக்கூடிய அம்பாளுக்கு சிவா என்று பெயர். இந்த இரண்டும் ஒரு வஸ்துவினுடைய இரண்டு வெளிப்பாடாக இருப்பதினால் அந்த இரண்டு வஸ்துவினுடைய நாமமும் இங்கு சேர்ந்தே இருப்பது போல (சாமரஸ்யமாக) இருக்கிறது. சாமரஸ்யம் என்றால் இரண்டாகத் தெரியும். ஆனால், பிரிக்க முடியாத ஒன்றேயானது. அங்கு நாமத்தில் இருக்கக் கூடிய ஒற்றுமை நமக்குத் தெரிகின்றது.
நாம சாமரஸ்யம் என்று பார்க்கும்போது, ஆணல்லன் பெண்ணல்லன் அலியுமல்லன் என்று நம்மாழ்வார் பாடுகிறார். அவனை ஆண்பால், பெண்பால், அக்றினை என்று எதற்குள்ளும் அடக்க முடியாது. அவன் புருஷோத்தமன் என்று ஆழ்வார் காண்பித்துக் கொடுக்கிறார்.
இப்போது இங்கு நபூம்சக லிங்கமாக பிரம்மமாக இருக்கும்போது ஷிவம் என்றும், புல்லிங்கமாக சிவ என்றும், ஸ்த்ரீ லிங்கமாக இருக்கும்போது சிவா என்று சொன்னாலும் வாஸ்தவத்தில் இந்த மூன்றுக்குள்ளும் அடங்காத ஒன்று. இந்த மூன்றுக்குள்ளும் அதை அடக்க முடியாது. ஆனால், நமக்காக அது தன்னை மூன்று விதமாக காண்பித்துக் கொள்கிறது. எனவே, நாமத்தின் ஒற்றுமையான நாம சாமரஸ்யம் என்று இதைச் சொல்லலாம். சிவா என்கிற நாமத்தின் முக்கியத்துவம்தான் இங்கு சொல்லப்படுகின்றது. சிவ… சிவா… என்று சொல்லும்போது சிவ சக்தி ஐக்கியம் ரூபமாக இல்லாமல் நாமமாக காட்டப்படுவதை பாருங்கள். அர்த்தநாரீஸ்வர கோலத்தை பாருங்கள். இந்த சிவா என்கிற நாமத்தைக் குறித்த இன்னும் சுவாரசியமான ஆழமான கருத்துக்களை பார்போம் வாருங்கள்.
(சுழலும்)
The post தீவினைகளை களையும் சிவா எனும் நாமம்! appeared first on Dinakaran.