- அம்மன்
- கோபிக் செட்டிபாளையம்
- பஸ் ஸ்டாண்ட்
- பாரியூர் அம்மன் கோயில்
- குண்டம் திருவிழா
- குண்டம் (திமிதி) திருவிழா
நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் அம்மன்
கோபிச் செட்டிப் பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 3கி.மீ. தொலைவில் உள்ளது பாரியூர் அம்மன் கோயில். இங்கு இரண்டு விசேஷ அம்சங்கள் உண்டு. ஒன்று பூவைத்து வேண்டுதல், மற்றது குண்டம் திருவிழா. குண்டம் (தீமிதி) திருவிழாவில் (சித்திரை மாதம்) லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கு பெறுவர். இந்த அம்மனுக்கு அர்ச்சனை செய்து நலிந்தவர்களுக்கு அன்னதானம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேலை அருளும்வேதபுரீஸ்வரர்
சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது வேதபுரீஸ்வரர் எனும் ஓதீஸ்வரர் ஆலயம். சர்வஜித்து எனும் மன்னனுக்கும், ஆதிசேஷனுக்கு அருள்புரிந்து இத்தலத்தில் நிலை கொண்டார் ஓதீஸ்வரர். பல்லவர் காலத்துத் திருக்கோயில் இது. இத்தலத்தில் உள்ள மிகப் பெரிய அரசமரத்தில் திருமணம் ஆக வேண்டிய இளைஞர்கள் மஞ்சள் நூலால் சுற்றி வலம் வந்து வணங்க, அம்மையப்பர் அருளால் திருமணம் நடந்தேறுகிறது. அன்னை ஓதீஸ்வரி எனும் வேதநாயகி அழகே உருவாய் அருள்கிறாள். வேலைவாய்ப்பு வேண்டுவோர் நம்பிக்கையுடன் ஓதீஸ்வரரை வணங்க நிச்சயமாக வேலை கிடைக்கப் பெறுகின்றனர்.
முருகப் பெருமானின் பாத தரிசனம்
கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தூரத்தில் மலை மீது அமைந்துள்ளது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி திருக்கோயில். மலை மீதுள்ள கோயிலில் மூலவர் கையில் வேலுடன் காட்சி தருவதால் வேலாயுத சுவாமி’ என்று போற்றுவர். ஞானப் பழத்திற்காக பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடிகொண்ட முத்துக்குமாரசுவாமி, முதன் முதலில் இந்தக் கிணத்துக் கடவு பொன்மலையில்தான் பாதம் பதித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் இங்கு மூலஸ்தானத்தில் அருள்புரியும் வேலாயுத சுவாமிக்கு பூஜைகள் நடைபெறுவதற்கு முன், முருகனின் பாதங்கள் பொறித்த திருவடிக்கு பூஜைகள் நடைபெறுகின்ன. இந்தப் பாதப் பூஜையின்போது தரிசிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாகச் சொல்லப்படுகிறது. முருகப் பெருமானின் இரு பாதங்களுக்கு முன் அவரது வாகனமான மயில் இல்லை. அதற்குப் பதில் பலிபீடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூலஸ்தானத்தில் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ வேலாயுத சுவாமி எழுந்தருளிய பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
வேலவன் தரிசனம்
முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. ஆனால், வேறு எங்கும் தரிசிக்க இயலாத வகையில் தனிச் சிறப்பு பெற்று திகழ்கிறது ‘கொல்லிமலையில்’ அமைந்திருக்கும் தண்டபாணி திருக்கோயில். அனைத்து கோயில்களிலும் கையில் வேலுடன் அல்லது ஓம் என்ற பிரணவ எழுத்தைக் காட்டி அபயமுத்திரை அருளும் திருக் கோலத்தில் அருள் புரிவதைத் தரிசிக்கலாம். இங்கு முருகப் பெருமான் தனது இடது கையில் சேவலை, அரவணைத்து வைத்தபடி இருக்கும் அற்புதமானக் காட்சியைத் தரிசிக்கலாம்.
வேலாயுதத்தின் பல்வேறு பெயர்கள்
வேலாயுதத்திற்கு நிகண்டுகளில் பல்வேறு பெயர்கள் கூறப்பட்டுள்ளன. நாமதீபநிகண்டு வேலின் பெயர்களாக ஞாங்கர், சக்தி, எஃகு, அயில், உடன்கிடி ஆகியவற்றைக் கூறுகிறது. பிங்கலநிகண்டு இவற்றுடன் அரணம், விட்டேறு எனும் பெயர்களையும் கூறுகின்றது. மேலும் அலகு, உத்தண்டம் முதலிய பெயர்களும் உள்ளன. இவற்றையொட்டி அதற்கு ஞானஆயில், உத்தண்டநெடுவேல், சக்திவேல் முதலான பெயர்கள் வழங்குகின்றன. மேலும், இலக்கியங்களில் குகாஸ்திரம். குமராஸ்திரம், நீதிசக்தி முதலான பெயர்களாலும் வேல் குறிக்கப்படுகிறது. சிவபெருமான் ஏந்தும் முத்தலை சூலத்திற்கு மூவிலைவேல் என்பது பெயராகும். தேவாரத்துள் அனேக இடங்களில் திரிசூலம், ‘‘மூவிலைவேல்’’ என்று போற்றப்படுகிறது’’.
The post நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் அம்மன் appeared first on Dinakaran.