ஹிமத்நகர்: குஜராத் மாநிலத்தில் ‘சண்டிபுரா’ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழந்ததாக, தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) உறுதிசெய்துள்ளது. குஜராத்தில் ‘சண்டிபுரா’ என்னும் வைரஸ் தாக்குதலால் அம்மாநில மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனிடையே சந்தேகத்திற்கு இடமான வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி நோயால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 8 பேர் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்கள் ‘சண்டிபுரா’ வைரசால் பாதிக்கப்பட்டவர்களா என உறுதியாகவில்லை எனவும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது ‘சண்டிபுரா’ வைரஸ் தாக்குதலால் 4 வயது சிறுமி உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தைகளை மட்டும் குறிவைத்து, வைரஸ் தாக்குவதாக கூறப்படும் நிலையில், காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சண்டிபுரா’ வைரஸ் பொது மக்களிடையே பீதியை கிளப்பி உள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை குஜராத் அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது. சண்டிபுரா வைரஸ் என்பது சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV), ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆர்என்ஏ வைரஸ் ஆகும்.. நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸும் இதில் தான் அடங்கும். இது முதன்முதலில் 1965ல் மகாராஷ்டிராவில் உள்ள சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது.
The post குழந்தைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் சண்டிபுரா வைரஸ் : பாதிக்கப்பட்ட 14 பேரில் 8 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.