கோவை: கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 பேரிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் 1.4 கிலோ கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் இருந்தது. விசாரணையில், கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்தது உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த யாசிக் இலாகி (26), போளுவாம்பட்டியை சேர்ந்த மரியா (31), கரும்புக்கடை முஜிப் ரகுமான் (27), ஆர்.எஸ்.புரம் கிருஷ்ணன் (எ) பூச்சி கிருஷ்ணன் (24), சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த சினேகாஸ்ரீ (31) என தெரியவந்தது. 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் வைத்திருந்த போதை மாத்திரை, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் யாசிக் இலாஹி சினிமா துணை நடிகராகவும், மரியா, சினேகா ஸ்ரீ ஆகியோர் துணை நடிகைகளாகவும் உள்ளனர். இந்த போதை மாத்திரை, கஞ்சா விற்பனையில் கல்லா மேடு பகுதியை சேர்ந்த அப்துல் கலாம், கரும்பு கடை பூங்கா நகர் ஆசிப் ஷெரீப், சௌகார் நகர் ரிஸ்வான், வட மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை தேடுகின்றனர்.
கைதான துணை நடிகர், நடிகைகள் கூறும்போது, ‘‘பொள்ளாச்சி, கோபி உள்ளிட்ட பகுதியில் நடக்கும் ஷூட்டிங் மற்றும் சென்னையில் நடக்கும் சினிமா படப்பிடிப்பிற்கு செல்வோம். அப்போது எங்களுக்கு இடையே அறிமுகம் ஏற்பட்டது. கஞ்சா, போதை மாத்திரை விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்றார்கள். அதனால் எங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலமாக கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்து வந்ேதாம். மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்க காத்திருந்தபோது மாட்டி கொண்டோம்’’ என்றனர்.
The post கோவையில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற சினிமா துணை நடிகர், நடிகை கைது appeared first on Dinakaran.