நன்றி குங்குமம் தோழி
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம். ஆம் அழகான கூந்தலே ஒருவரை அழகாக மெருகேற்ற உதவும். எனவே, தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு கூந்தல் பராமரிப்பு மிகமிக அவசியம். நன்கு பராமரிக்கப்படும் கூந்தல் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ளவும் உதவுகிறது. அந்த வகையில், எளிதாகப் பின்பற்றக்கூடிய சில ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்புகளை தெரிந்து கொள்வோம்.
தலைக்குக் குளிப்பதன் அவசியம்
கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியமானது தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வது. எனவே, வாரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும்.
வறண்ட தலைமுடி உள்ளவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தலைக்கு குளிப்பது நல்லது. எண்ணெய்ப்பசை அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்குக் குளிக்கலாம். பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே தலைக்குக் குளிக்க வேண்டும். அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இல்லாத தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
தலைக்கு குளித்துவிட்டு தலைமுடியை அப்படியே ஈரமாக வைத்திருக்க கூடாது. உடனே டவலை சுற்றி முடியில் உள்ள ஈரத்தைப் போக்க வேண்டும். முடி ஈரமாக இருக்கும்போது, அதை மென்மையாக நடத்த வேண்டும். ஏனெனில் முடி ஈரமாக இருக்கும்போது, வலிமையில்லாமல் இருக்கும். இதனால் மூன்று மடங்கு அதிகமாக உடைந்துபோக வாய்ப்புண்டு.
முடி ஈரமாக இருக்கும்போது டவலால் அதிகமாக தேய்க்கக்கூடாது.
ஈரமான முடியை சீப்பு கொண்டு சீவக் கூடாது. அப்படியே சீவ நேர்ந்தால், அகலமான பற்கள் உள்ள சீப்புகளால்தான் சீவ வேண்டும். தலையில் அதிகம் சிக்கு விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் பெரிய பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்தி சிக்கினை எடுத்துவிட வேண்டும். இதன் மூலம் தலையில் முடி அதிகம் உதிர்வதை தடுக்கலாம்.
ஒமேகா 3 தலைமுடிக்குச் சிறந்தது
ஒமேகா -3 உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் மயிர்க்கால்கள் மற்றும் செபாசியஸ் சுரப்பிகளைத் தூண்ட உதவும். இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உதாரணமாக, சாலமன் மீன், சியா விதைகள், முட்டை, வால்நட், சோயா பீன்ஸ், தயிர், ஆளி விதைகள், சாலட், தானியம், பாலாடைக்கட்டி போன்றவற்றில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும்
முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியம் நன்கு சமநிலையான உணவால் பாதிக்கப்படுகிறது. புரோட்டீன் முடியின் முக்கிய அங்கமாகும், எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 45 கிராம் புரதத்தை சாப்பிட வேண்டும்.
புரத உணவுகள்
குறைந்த கொழுப்புள்ள பால்
பொருட்கள்
மெலிந்த இறைச்சி
கோழி, மீன்
பீன்ஸ், முட்டைகள் போன்றவையாகும்.
துத்தநாகத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். துத்தநாகக் குறைபாட்டினால்கூட முடிஉதிர்தல் ஏற்படலாம். எனவே, துத்தநாகம் அதிகமுள்ள உணவுகளான பிரேசில் பருப்புகள், வால்நட்ஸ், பெக்கன்கள், முந்திரி மற்றும் பாதாம் போன்ற கொட்டைகளைச் சேர்க்கவும்.
பொதுவான கூந்தல் ஆரோக்கியத்துக்கான உணவுகள்
சுத்தமான வடிகட்டிய நீர் பருக வேண்டும்.
காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும். பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மல்டிவைட்டமின் அல்லது ஜிங்க் சப்ளிமென்ட்ஸ் சேர்த்துக்கொள்வது நல்லது. பொருத்தமான ஷாம்பூவைத் தேர்ந்தெடுக்கவும். தலைமுடிக்கு எத்தனை முறை ஷாம்பு போட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
இவை அனைத்தும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகின்றன. அதற்கு, அவரவர் முடியின் அமைப்பு மற்றும் வகையை அறிந்து கொள்வது அவசியமாகும்.
உதாரணமாக, எண்ணெய்ப்பசையுள்ள கூந்தல் உள்ளவர்கள் தினசரி ஷாம்பு செய்ய வேண்டியிருக்கும், அதே சமயம் வறண்ட கூந்தலுடன் இருப்பவர்களுக்கு குறைவான ஷாம்பு தேவைப்படலாம். அதுபோன்று ஷாம்பு குளியல் செய்யும்போது நேரடியாக ஷாம்புவை தலையில் போடக் கூடாது. சிறிதளவு தண்ணீர் எடுத்து அதில் ஷாம்புவை கலந்து பின்னர், தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லது.
முடி வகைக்கு ஏற்ற ஷாம்பு தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. இது எண்ணெய், சாதாரண அல்லது உலர் மற்றும் பொடுகு போன்ற எந்தப் பிரச்னைகளையும் தீர்க்கும். அம்மோனியம் லாரில் சல்பேட் அல்லது சோடியம் லாரில் சல்பேட் போன்ற கடுமையான இரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளைத் தவிர்க்கவும். மேலும், ஒரு பொருளின் விலை எப்போதும் அதன் தரத்தை குறிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தொகுப்பு: தவநிதி
The post ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்! appeared first on Dinakaran.