சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது அந்த ராஜகோபுரம். சாலைக்குக் கீழே சில படிகள் இறங்கித்தான் கோயிலுக்குள் போகவேண்டும். போக்குவரத்து வசதிக்காக, சாலையை மேம்படுத்தும் முயற்சியாக, மேலே மேலே ஜல்லியும், தாரும் இடப்பட்டதால் சாலை உயர்ந்துவிட்டது போலிருக்கிறது. சாலையிலிருந்து இறங்கி, கோயிலுக்குள் போவதை தாழ்மை உணர்வின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஏனென்றால் தாழ்மை உணர்வின்றி திரிந்த பிரம்மனின் அகங்காரத்தை அழித்த ஈசனின் பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டிய திருத்தலமல்லவா இது!சம்பிரதாயமாக வெளிப் பிராகாரச் சுற்றில் வலம் வரும்போது பொய்கையாழ்வார், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், ராமானுஜர், தேசிகர் ஆகியோரின் சந்நதிகளை தரிசிக்கலாம்.
அடுத்து பள்ளியறை. கொஞ்சம் நகர்ந்தால் தலவிருட்சமான அரசமரம். அதனடியில் சில நாகர் சிலைகள். அடுத்து கமலவல்லித் தாயார் தனிச் சந்நதியில் அருளாசி வழங்குகிறார். வடக்குப் பக்கமாக ஆண்டாள் தனித்து கொலுவிருக்கிறார். மேலும் ஒன்றிரண்டு சந்நதிகள் காலியாகவே இருக்கின்றன. அதேபோல மண்டபமும் எந்த அர்ச்சாவதாரமும் இன்றி வெறுமையாகக் காணப்படுகிறது. ஸ்தல புராண அடிப்படையில் முன்னொரு காலத்தில் பிரம்மன், சரஸ்வதி ஆகியோருக்கு இங்கே சந்நதிகள் இருந்திருக்கலாமென்றும், பின்னாளில் இந்த பெருமாள் கோயிலுக்குச் சற்று அருகே ஈசன் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட, அந்தக் கோயிலுக்குள் பிரம்மன், சரஸ்வதி முதலான விக்ரகங்கள் எடுத்துச் செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாமென்றும் சொல்கிறார்கள். கருவறை சந்நதியில் மூலவர் ஹரசாப விமோசனப் பெருமாளுக்கு எதிரே சிறிய திருவடியும், பெரிய திருவடியும் அருகருகே நின்றபடி சேவை சாதிப்பது வித்தியாசமான காட்சி.
வேறெந்த கோயிலிலும் இப்படி அனுமனும், கருடாழ்வாரும் ஒருசேர மூலவரைப் பார்த்தபடி சேவை சாதிப்பதைக் காண இயலாது என்கிறார்கள். கருவறை மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் திகழ்கிறார். இவரது இடதுகால் முன்னே எட்டி நிற்க, போர் முனைப்புடன் இவர் காட்சி தருவது பரவசமளிக்கிறது. சந்நதி பின்சுவர் தடுப்பதால், இவருக்குப் பின்னாலிருக்கும் நரசிம்மரை தரிசிக்க இயலவில்லை. பதினாறு கரங்களுடனும், பிரயோக சக்கரத்துடனும் பரிமளிக்கிறார் சக்கரத்தாழ்வார். சக்கரமாகச் சுழன்றோடி வந்து இத்தலப் பெருமாளின் பக்தர்களுடைய துயர் துடைக்க இவர் 16 திருக்கரங்களுடன் விளங்கும் அவரது கருணையை எண்ணியும், விரைந்து செல்லும் ஆயத்தமாக இடது கால் முன் நிற்பதும் நெஞ்சை விம்மச் செய்கின்றன.
விசேஷ நாட்களில் இவர் தங்கக் கவசம் பூண்டு ஜொலிக்கிறார். கருவறையில் மூலவர் ஹரசாப விமோசனப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், பேரானந்தம் அளிக்கிறார். மூலவர் பலிநாதன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு முன்னால் உற்சவர் கமலநாதனாக தேவியர் இருவருடன் கருணை மழை பொழிகிறார். பஞ்ச கமலத் தலமாக இவ்விடம் விளங்குகிறது. உற்சவர் கமலநாதன், கமலவல்லித் தாயார், கமல விமானம், கமல புஷ்கரணி மற்றும் கமல க்ஷேத்திரம் என்று ஐந்து கமலங்கள்! தன் ஒரே ஒரு பாசுரத்தால் இத்தலத்தைச் சிறப்பித்திருக்கிறார் திருமங்கையாழ்வார்.
பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே
– என்கிறார் ஆழ்வார். ‘உளுத்துப்போய் உதிருவதுதான் மண்டையோடு. ஆனால் அந்த மண்டையோடும் தன் கரத்தை விட்டு அகலாததால் அந்த தோஷத்தை நீக்குவதற்காக பிற வீடுகளுக்கு அலைந்து சென்று யாசித்து பிட்சை கேட்டு உண்ண வேண்டிய நிலையிலிருந்த சிவபெருமானின் துன்பத்தை நீக்கிய இணையற்ற தலைவன், இந்த ஹரசாப விமோசனப் பெருமாள். இந்த திருக்கண்டியூர் திவ்ய தேசம் மட்டுமல்லாது திருவரங்கம், திருமெய்யம், திருக்கச்சி, திருப்பேர், திருக்கடல் மல்லை ஆகிய திவ்ய தேசங்களிலும் ஆங்காங்குள்ள பெருமாள்களை வணங்க, அவ்வாறு துதிப்போர் துயரங்களெல்லாம் நீங்கும். வேறு யாரால்தான் இப்படி ஒரு பேரருளை வழங்க இயலும்?’ என்கிறார் அவர்.சிவன் கையில் மண்டையோடு ஒட்டிக்கொண்டது எப்படி? அது பிரம்மனுடைய கபாலம்.
அகம்பாவம் கொண்ட கபாலம். ஸ்ரீ மன் நாராயணன் தன் நாபிக் கமலத்தில் பிரம்மனைத் தோற்றுவித்தார். அந்த பிரம்மனுக்கு ஐந்து தலைகள் விளங்கின! நான்கு தலைகளும் ஒரே மாதிரியாக இருக்க, ஐந்தாவது தலைமட்டும் வித்தியாசமான, பார்க்கும் அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக அமைந்திருந்தது. அந்த அழகைக் கண்டு திருமகளே பிரமித்துப் போனாள். அழகு என்று ரசிக்க ஆரம்பித்தால், தன்னைவிட இந்த ஐந்தாவது தலை, தன் நாயகன் நாராயணனைப் பெரிதும் கவர்ந்துவிடுமோ என்று கவலை கொண்டாள் தேவி. பரந்தாமன் அதற்குப் பிறகு ஈசனைப் படைத்தபோது, ஸ்ரீ தேவி ஈசனிடம் சொல்லி, தன் அழகால் பொறாமை கொள்ள வைத்த பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறியுமாறு கேட்டுக்கொண்டாள். அதன்படியே ஈசன் செய்ய, அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு, அந்தத் தலை அப்படியே அவர் கையில் ஒட்டிக்கொண்டுவிட்டது.
இது பிரமாண்ட புராணம் கூறும் கதை. ஆனால் சிவபுராணத்தில் வேறு மாதிரியாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது தனக்கும் சிவபெருமானைப் போலவே ஐந்து தலைகள் இருக்கும் பெருமையில், அகங்காரம் கொண்டிருந்தான் பிரம்மன். அதனாலேயே தன்னை ஈசனோ என்று கருதி தனக்கு பார்வதி பணிவிடை செய்வதை மிகவும் கர்வத்துடன் ஏற்றுக்கொண்டான். இதுகண்டு வெகுண்ட பரமேஸ்வரன், ஆணவத்துடன் மெல்ல அசைந்துகொண்டிருந்த பிரம்மனின் ஐந்தாவது தலையைத் தன் கை விரல்களால் துண்டித்தார். உடனே பளிச்சென்று அந்தத் தலை அவர் கரத்துடன் ஒட்டிக்கொண்டுவிட்டது!இதனால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகி, சிவனுக்கு தணியாத பசியும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் பசி தீர, ஈசனும் பல தலங்களுக்குச் சென்று பிட்சை கேட்டு அன்னதானமும் பெற்றார் என்றாலும், பசியும் அடங்கவில்லை; கபாலமும் கரத்தைவிட்டு அகலவில்லை.
இவ்வாறு ஒவ்வொரு தலமாக அவர் சென்ற அவர், உத்தமர் கோயிலுக்கும் வந்தார். அங்கே திருமால் ஆணையிட, திருமகள் ஈசனுக்கு பிட்சை இட்டாள். அதனால் அவருக்குப் பசி தணிந்தது ஆனால் கபாலம் மட்டும் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. அதனின்று விடுபட திருமாலையே யோசனை கேட்டார் மஹேஸ்வரன். உடனே பெருமாள், அவரை திருக்கண்டியூர் திருத்தலத்துக்குச் செல்லுமாறும், அங்கே தான் உருவாக்கிய கதா தீர்த்தத்தில் (பெருமாளின் கதை ஆயுதத்தால் உருவானது) நீராடுமாறும் அவ்வாறு செய்தால் கபாலத்திடமிருந்து விடுதலை பெறலாம் என்றும் அறிவுறுத்தினார். அதன்படியே ஈசன் செய்ய, அவருக்கு சுதந்திரம் தந்தது பிரம்ம கபாலம். இதனாலேயே இந்த தீர்த்தம் கபால புஷ்கரணி என்று பெயர் கொண்டது. சிவபெருமானுக்கு கண்டீஸ்வரர் என்றும் ஒரு பெயர் இருப்பதால், இந்தத் தலம் இந்தப் பெயரை ஒட்டியே திருக்கண்டியூர் என்றானது என்று சொல்லப்படுகிறது.
ஹரனின் சாபத்தைப் போக்கியதாலேயே இந்தப் பெருமாள் ஹரசாப விமோசனப் பெருமாள் என்று பெயர் கொண்டார். இவருக்கு பலிநாதன் என்றும் ஒரு பெயர் உண்டு என்றோமே, அந்தப் பெயர் எப்படி வந்தது?ஒருமுறை, திருமாலுக்குச் சொந்தமான ஒரு பொன் ஆபரணத்தை விரோசன மன்னனின் மகனான பலி, திருடிக்கொண்டுவந்து பாதாள உலகத்தில் ஒளித்து வைத்தான். ஆனால், நாளாவட்டத்தில் தான் இப்படி திருடி வந்ததை எண்ணி மிகவும் வெட்கமும் வேதனையும் கொண்டான். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவன் திருக்கண்டியூர் வந்து ஹரசாப விமோசனப் பெருமாளை வணங்கித் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான், தான் களவாடிச் சென்ற அவரது ஆபரணத்தை அவர் முன் வைத்து மனம் விட்டுக் கதறினான்.
அவன்மீது இரக்கம் கொண்ட பெருமாள் அவனுக்குக் காட்சியளித்தார். அதோடு தன்னிடமிருந்த தாமரை மலரால் அவர் பூமியைக் கீற அங்கே ஒரு தீர்த்தம் உருவாகியது. அதில் நீராடித் தன் மன உளைச்சலையும் தீர்த்துக்கொண்டான் பலி. அதுமுதல் இந்த தீர்த்தம் பலி தீர்த்தம் என்று வழங்கப்பட்டது. அவனுக்கு அருளிய பெருமாளும் பலிநாதன் என்று அழைக்கப்பட்டார். இந்தத் தலம் ஸ்ரீ ரங்கத்தைவிடவும் தொன்மை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். இங்கே ஹரசாப விமோசன பெருமாளுக்கு முன்னாலேயே சந்தான கோபால கிருஷ்ணனும், நவநீத கிருஷ்ணனும் அர்ச்சாவதாரமாக கொலுவிருந்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த இரு மூர்த்தங்களும் இப்போது இக்கோயிலில் காணக்கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது.
ஒருவேளை முதலில் சொன்னபடி காலியாக உள்ள சந்நதிகளில் இந்த விக்கிரகங்கள் இருந்திருக்குமோ இப்போது அவை எங்காவது இடம் பெயர்ந்து சென்றிருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற பக்தர் ஹரசாப விமோசன பெருமாளிடம் பெரும் பக்தி பூண்டிருந்தவர். இவர் கண்டியூருக்கு அருகே உள்ள திருப்பூந்துருத்தி என்ற ஊரில் வாழ்ந்தவர். மிகப் பிரபலமான கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற, கிருஷ்ணனின் லீலைகளை விளக்கும் அரிய நூலை இயற்றியவர் இவர். இந்த தகவலிலிருந்தும் திருக்கண்டியூர் தலத்தில் முதலில் கிருஷ்ணனே கோயில் கொண்டிருந்தான் என்றும் ஊகிக்க முடிகிறது.
தியான ஸ்லோகம்
புண்யே ஸ்ரீ ஹர சாப மோசந புரே யத்ரா விராஸீத் ஹரி:
தத்ர ஸ்ரீ கமலா ததைவகமலம் தத் வயோம யாநம் மஹத்
தீர்த்தம் தத்ர கபால மோசனமிதி க்யாதம் ஸ்வஹஸ்தாத்சிவ:
த்யக்த்வா ப்ரம்ஹ கபாலம் அச்யுத க்ருபாம் காங்க்ஷந் ஸ்தித: கண்டனே:
எப்படிப் போவது: திருவையாறு&தஞ்சை வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்டியூர். திருவாரூரிலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 12 மணிவரையிலும், மாலை 4 முதல் 8 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்டியூர் அஞ்சல், திருவையாறு வழி, தஞ்சை மாவட்டம் – 613202.
The post திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் appeared first on Dinakaran.