×
Saravana Stores

பிடிவாத குணம் வந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எதையும் யோசிக்காமல் உணர்ச்சி வசப்படும் கணவன். (தசரதன்) எந்தப் பதிலையும் சமாதானத்தையும் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளாத பிடிவாதம் உள்ள மனைவி (கைகேயி). இவர்களின் வாழ்க்கை எப்படி முடியும் என்பதற்கு தசரதன் கைகேயி வாழ்க்கை ஒரு உதாரணம். யாருக்காவது விளைவு (result) சாதகமாக முடிந்ததா? யாரவது மகிழ்ச்சி அடைந்தார் களா? முடிவாக தசரதனும் சந்தோஷப்படவில்லை. கைகேயியும் தன்னுடைய பிடிவாதத்தால், தான் நினைத்ததை சாதித்தாலும், மகிழ்ச்சியை அடைய முடியவில்லை. இது பெரிய விஷயம் இல்லை. தனிப்பட்ட கணவன் – மனைவி இடையே உள்ள சாதாரண மனஸ்தாபத்தின் பாதிப்பு, அவர்கள் இருவருக்கும் தானே என்று விட்டுவிடலாம். ஆனால், ராமாயணத்தில் அப்படியா முடிகிறது? தனிப்பட்ட இருவருக்குள்ளும் நடந்த கருத்து வேறுபாட்டினால், தசரதன் மனம் உடைந்து, மாண்டு போனான். கைகேயி தன்னுடைய மகன் பரதனாலேயே புறக்கணிக்கப்பட்டு, மனம் நொந்து மூலையில் முடங்கினாள். ராமன் காட்டுக்கு போனான். எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு ராமனின் கைப் பிடித்து வந்த சீதை, தன்னுடைய அரண்மனை வாழ்வை துறந்தாள். ஆரண்யத்துக்கு நடந்தாள்.பெற்ற ஒரே மகனை மருமகளோடு காட்டுக்கு அனுப்பிவிட்டு கோசலை தவித்தாள்.

அயோத்தியின் நிர்வாகம் அடுத்து என்ன என்ற கையறு நிலையில் தத்தளித்தது. நாளை ராமனின் பட்டாபிஷேகம் என்று மகிழ்ச்சியோடு காத்துக் கொண்டிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இத்தனை விளைவும் ஒரு கணவன் மனைவியின் தனிப்பட்ட தகராறினால் விளைந்தது என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். அதேதான் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வீட்டுக்குள் கணவனும் மனைவியும் சண்டையிடுகின்ற பொழுது அந்த வீட்டின் அமைதி மட்டும் கெடுவதில்லை. குறிப்பிட்ட தகராறுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத மற்றவர்களும் பாதிக்கின்றனர் என்பதையும் உணர வேண்டும். அதற்காகத்தான் ராமாயணம். கைகேயி எந்த விதமான தாட்சிண்யமும், குழப்பமும் இல்லாமல், மிகத் தெளிவோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரண்டு வரங்களை கேட்டாள்.“என் மகன் நாடாள வேண்டும். ராமன் காடாள வேண்டும்” இங்கே கம்பனின் பாடல் வரிகளை மிக நுட்பமாக கவனிக்க வேண்டும். பரதனை என் மகன் என்று சொல்லிய கைகேயி, ராமனை தசரதனின் மகன் என்றும் சொல்லவில்லை; தன்னுடைய வளர்ப்பு மகன் என்றும் சொல்லவில்லை; கோசலையின் மகன் என்றும் சொல்லவில்லை; சீதை கேள்வன் என்று சொல்வதைக் கவனிக்க வேண்டும்.வேண்டும் போது ஒரு உறவு. வேண்டாத போது வேறு ஒரு உறவினால் குறிப்பிடுகின்ற இயல்பு இங்கே வெளிப்படுகிறது. இதிலும் உளவியல் இணைகிறது.வீட்டிலே பையன் நல்ல மார்க் வாங்கிவிட்டால், மனைவி கணவனிடம் ‘‘என் மகன் எப்படி மதிப்பெண் வாங்கி வந்திருக்கிறான், பார்த்தீர்களா?’’ என்பாள்.

அதே பையன் தவறு செய்துவிட்டால் ‘‘உங்கள் பையன் தவறு செய்ததைக் கண்டிக்க மாட்டீர்களா?’’ என்பாள். ராமனை வார்த்தைக்கு வார்த்தை, என் மகன் என் மகன் என்று பேசியவள்தான் கைகேயி. ஆனால், தன்னுடைய மகனுக்கு அவன் போட்டியாக வந்து விட்டதாகக் கருதி, மனம் திரிந்த பிறகு, ராமன் மீது கொண்ட அத்தனை அன்பும் வெறுப்பாக மாறுகிறது. பிறகு, தவறிப் போய்கூட தன்னுடைய மகன் ராமன் என்று சொல்ல விரும்பவில்லை. தசரதன் மகன் என்று தன்னோடு சேர்ந்த உறவோடும் இணைக்க விரும்பவில்லை. தன்னுடைய மூத்தவளான கோசலையின் மகன் என்றும் சொல்ல விரும்பவில்லை. தங்கள் குடும்பத்தில் நேற்று வரை சம்பந்தமில்லாமல் இருந்து புதிதாக திருமண உறவால் வந்த சீதையோடு இணைத்து பேசுகின்ற நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். இதில் இன்னொரு விஷயமும் உண்டு. பொதுவாக பிடிவாத குணம் வந்துவிட்டால், அவர்களிடம் அசைக்க முடியாத ஒரு உறுதியும் வந்துவிடும். விளைவுகள் பற்றியோ, யார் பாதிக்கின்றார்கள் என்பதை பற்றியோ, கவலைப்பட மாட்டார்கள். அதுதான் கைகேயிடம் இருக்கிறது. அவளுடைய இந்த இரண்டு வரங்கள் காதிலே விழுந்தவுடன் தசரதனுக்கு எப்படி இருந்தது என்பதை கம்பன் காட்டுகின்றார். ஒரு விஷமுடைய பாம்பு கொத்திய உடன், அந்த விஷம் கடகடவென்று ரத்தத்தில் கலந்து தலைக்கு ஏறி உடம்பெல்லாம் எரிய வைத்து, நடுங்க வைத்து, அப்படியே தரையில் தள்ளியது போல் விழுந்தான் தசரதன்.

``நாகம் எனும் கொடியாள் தன் நாவில் ஈந்த
சோக விடம் தொடர நுணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்’’

தசரதன் யாராலும் வீழ்த்த முடியாத வேழம் போன்ற கம்பீரம் மிக்கவன். ஆனால், கைகேயின் நாவில் இருந்து பிறந்த இரண்டு வரங்கள் விஷங்களாக மாறி அவனை வீழ்த்தியது. கம்பீரமான தசரதன் கையறு நிலையில் துடிக்கின்ற துடிப்பு இருக்கின்றதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. சகல திசைகளில் இருந்தும், இருந்து வரும் மன்னர்கள் அவன் காலில் விழுந்து வணங்குவர். ஆனால், இவனோ ஒரு சின்ன பிள்ளையைப் போல மண்ணில் விழுந்து புரளுகிறான். தசரதனின் நாக்கு வறண்டது. உயிர் போகத் தொடங்கியது. மனம் வாடியது. கண்களில் இருந்து ரத்த கண்ணீர் வடிந்தது. தசரதன் உயிர் துடிக்குமாறு பெருந்துன்பத்தை அடைந்து சற்று நேரம் உட்காருவான். பிறகு எழுந்து நிற்பான். அப்படியே கீழே விழுவான். மூச்சு ஒடுங்கியது போல் இருப்பான். திடீரென்று புஸ் புஸ் என்று பெருமூச்சு விடுவான். அப்படியே எழுந்து போய் கைகேயியின் தலையை சுவற்றோடு சுவராக மோதிவிடும் நினைவோடு எழுவான். மனைவியை அடித்தாள், பெண்ணை அடித்தான் என்கின்ற பெரும்பழி வந்துவிடும் என்று நாணு வான் கம்பத்தில் கட்டி வைத்த யானை நிலத்தில் விழுந்து துடிப்பதைப் போல தசரதன் துடித்தான் என்கின்றார் கம்பர்.இத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த ஆசை மனைவி கைகேயி, தன் கணவன் தன்னுடைய சொற்களால் படும் வேதனையை எந்த விதமான பதட்டமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கைகேயிக்குப் பயமில்லை. மனம் இறங்கவில்லை. நாணம் கொள்ளவில்லை. “அஞ்சலள், ஐயனது அல்லல் கண்டும் உள்ளல் நஞ்சிலள் நாண் இலள்” என்று அவள் நிலையை கம்பன் காட்டுகின்றார். இத்தனைக்கும் நடுவில் தசரதனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. என்ன சந்தேகம் தெரியுமா?…

தேஜஸ்வி

The post பிடிவாத குணம் வந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Dasarathan ,Kaikeyi ,Dasharathan Kaikeyi ,
× RELATED கவனமாகப் பேசுங்கள்