×
Saravana Stores

ஆடி மாத திருவிழாக்களும் அம்மன் கோயில் அற்புதங்களும்

1. முன்னுரை

ஆடி மாதம் பிறந்து விட்டது. வருடத்தின் இரண்டு பெரும் காலங்களில் தட்சணாயணம் எனப்படும் சூரியனின் தெற்குப் பயணம் தொடங்கிவிட்டது. இது தேவர்களுக்கு மாலைப்பொழுது என்பதால் வழிபாடுகள் நிகழ்த்த வேண்டிய காலம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஆடி மாதத்தில் தான் அமர்க்களமான பல பண்டிகைகள் வரிசை கட்டி வருகின்றன. இந்த வருடம் ஆடிமாதத்தில் வரும் விசேஷங்களும் பண்டிகைகளும். 1. சாதுர்மாஸ்ய விரதம், 2. சங்கரன்கோவில் கோமதி அம்மன் திருவிழா, 3. திருமாலிரும் சோலை கள்ளழகர் திருவிழா, 4. ஆடித்தபசு, 5. பட்டினத்தடிகள் குருபூஜை, 6. ஆடி கிருத்திகை, 7. ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூரம் மற்றும் திருத்தேர், 8. ஆடிப் பெருக்கு, 9. ஆடி அமாவாசை, 10. மதுரை மீனாட்சியம்மன் திருவிழா, 11. ராமேஸ்வரத்தில் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம், 12. மன்னார்குடி செங்கமலத்தாயார் தேரோட்டம், 13. நாக சதுர்த்தி, 14. கருட பஞ்சமி, 15. ஸ்ரீ வரலட்சுமி விரதம் என்று இந்த ஆண்டு ஆடிமாதம் நாள்தோறும் திருவிழாபோல அமைந்திருக்கிறது.

2. ஆடித் தள்ளுபடி

இதுதவிர பல வைணவ சைவ மகான்களின் திருநட்சத்திரம் மற்றும் குருபூஜையும் அமைந்த மாதமாக ஆடி மாதம் அமைந்திருக்கிறது. ஆடி என்ற சொல்லுக்கு பல்வேறு விதமான பொருள் உண்டு. நீங்கள் கடைவீதியில் செல்லும்பொழுது ஆடி மாதம் தள்ளுபடி என்று பல சுவரொட்டிகளைப் பார்ப்பீர்கள். ஆம்; கடைகளில் விற்பனை அதிகரிக்க அவர்களிடம் தேங்கி உள்ள பல விஷயங்கள் நீக்குவதற்காக விலைத் தள்ளுபடி செய்கின்றார்கள். ஆன்மீகத்திலும் இந்த ஆடி மாதத்தில் செய்ய வேண்டிய ஆடித்தள்ளுபடிகள் நிறைய உண்டு. என்னென்ன தள்ளுபடி தெரியுமா?
1. நம்முடைய கெட்ட எண்ணங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
2. வஞ்சகம் சுயநலம் சூதுவாது முதலிய எண்ணங்களை கழித்துக் கொள்ள வேண்டும்.
3. உடம்பின் மாசுகளை நீக்கிக் கொள்வது போல உலகியலில் பல்வேறு காரணங்களால் மனதில் படிந்துள்ள கோபம், தாபம் முதலிய மாசுகளை கழித்துக் கொண்டு தூய்மை உடையவர்களாய், அம்பிகையை சரணடைய வேண்டும்.
4. நம்மால் கழித்துக் கொள்ள முடியாத குணங்களை, ஆடி மாதத்தில் அம்மனை வணங்கி நின்றால், அவள் தள்ளுபடி செய்து விடுவாள்.
அதனால்தான் ஆடித் தள்ளுபடி என்பது விசேஷமானது. இந்த ஆடி மாதத்தில் நடைபெறும் பல்வேறு கோயில் சிறப்புகளைப் பற்றியும், ஆடி மாதத்தில் வரும் விழாக்களைப் பற்றியும் 30 முத்துக்கள் என்கிற தொகுப்பில் நாம் மூழ்கி முத்து எடுப்போம்

3. வடக்கு வாசலும் தெற்கு வாசலும்

ஆடி என்பது அற்புதமான மாதம். உத்தராயணத்தில் முடிந்து தட்சிணாயனத்தின் தொடக்க மாதம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம், அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகர்வதாகப் பொருள். பல கோயில்களில் ஆறு மாதம் உத்திராயண வாசலும் ஆறு மாதம் தட்சிணாயன வாசலும் இருக்கும். அதாவது வடக்கு வாசல், தெற்கு வாசல் என்று இரண்டு வாசல் வைத்திருப்பார்கள். ஆடி ஒன்றாம் தேதி அன்று வடக்கு வாசலை மூடி விட்டு, தெற்கு வாசல் மூலமாக சுவாமி தரிசனமாகும். தேவர்களுக்கு இது இரவு நேரம் தொடக்கம். அதாவது மாலை சந்தி நேரம். எனவே மாலை நேர பூஜையை தேவர்களும் மனிதர்களும் இணைந்து வழிபடுகின்ற நேரமாக ஆடி மாதத்தைக் கருதலாம்.

4. சக்தி மாதம்

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று சொல்வார்கள். சக்தி இருந்தால்தான் ஆடமுடியும். பாடமுடியும். அந்த சக்தியை கொடுப்பவள் அன்னை ஆதிபராசக்தி. எனவே தான் பெரும் கோயில்களிலிருந்து, கிராமங்களில் உள்ள எளிய கோயில்கள் வரை ஆடிமாதம் விழாக்கோலம் கொள்கிறது. நமது சக்தி உணர்வூட்டப் பெற்று உச்சம் கொள்கிறது. அதனால் தான் சக்திகரகம் ஆடுதல் முதலிய உற்சாகங்களின் வெளிப்பாடுகளை ஆடி விழாக்களில் காண்கிறோம். ஆடி மாதம் சக்தி தந்து நம்மை ஆட வைக்கும் மாதம்.

5. நிலையற்ற வாழ்க்கையில் இருந்து நிலைக்கும் வாழ்க்கை

ஆடுகின்ற இந்த உயிர் ஓட்டமானது நின்று விடுவதற்கு முன், நிலையற்ற வாழ்க்கையில் இருந்து நிலைக்கும் ஒரு வாழ்க்கையை நாம் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய வாழ்வின் நோக்கம். அதற்காகத் தான் இந்த ஆடி மாத திருவிழாக்கள்.
1. ஆடி என்பது கண்ணாடி. நம்மை நமக்குக்காட்டுவது.
2. ஆத்ம பரிசோதனைக்கு உதவுவது.
ஆடி மாதம் சந்திரனுக்குரிய மாதம். சந்திரன் ஆடி போல் பிம்பத்தைக் காட்டுபவன். உதாரணமாக சூரியனுடைய கதிர்களை (ஒளியை) எடுத்துப் பிரதிபலிப்பவன். அவன் ஆட்சி செய்யும் இந்த மாதத்தை ஆடி மாதம் என்று சொல்லுகின்றார்கள். கண்ணாடியில் பார்த்து நாம் நம்முடைய புற அழகை சீர் திருத்திக் கொள்வது போல, பக்தி என்னும் கண்ணாடியில் நம்முடைய அக அழகைச் சீர்திருத்திக் கொள்வதற்கு ஏற்ற மாதம்.

6. ஆடிப் பட்டம் தேடி விதை

ஆடி பிறந்து விட்டாலே அம்மன் கோயில்களில் பத்து நாள் உற்சவத்தில் இருந்து (பிரமோற்சவம்), ஒரு நாள் உற்சவம் வரை, விதம் விதமாக கோயில் உற்சவங்கள் நடைபெறுவதை நாம் காணலாம். உத்தராயண காலத்தில் சூரியனிலிருந்து வெளிப் படும் கதிர்களை விட, தட்சிணாயன காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம்.

7. சக்திக்கே வல்லமை

ஆடி மாதத்தில், சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசி என்பது, சந்திர பகவானின் ஆட்சி வீடு. சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டில் சஞ்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சந்திரனின் ஆளுமை (சக்தி, தாய்மை) கூடுகிறது. சிவனைவிட சக்திக்கே வல்லமை அதிகமாக ஆடி மாதத்தில் போற்றப்படுவது ஆடி மாதம் என்பது காற்றுக்குரிய மாதம். ஆடியில் காற்று அடித்தால் ஐப்பசியில் மழை வரும். விவசாயத்துக்கு உரிய மாதம். உயிர்களின் உயிர் நாடி நீர். “நீர் இன்றி அமையாது உலகு”. கடக ராசி என்பது நான்காவது ராசி. அதாவது நீர் ராசி. ஆடியில் (நீர் ராசி மாதத்தில்) எல்லா விதமான நீர் நிலைகளிலும் புதிய நீர் வரத்து இருக்கும். நீரை கண்டால் விவசாயிகளுக்கு உற்சாகம். ஆடி மாதம் விவசாயிகளுக்கு உயிர் நாடியான மாதம்.

8. ஆடி அமாவாசை

பித்ரு காரகனான சூரிய பகவான், மாத்ரு காரகனான சந்திரனின் வீட்டில் அமர்கிற காலம் ஆடி. ஆக, இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் அமாவாசையன்று முன்னோர்க்கு நீர் கடன் கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும். தேவகணங்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக உத்தராயணமும், பித்ருக்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக தட்சிணாயனம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். ஆடி அமாவாசை தினம் பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு கிளம்பும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக, அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை (ஆகஸ்ட் 4 ஆம் தேதி) சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை (பிதுர் காலம்) மிகவும் சிறந்ததாகும். அன்று கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்கவேண்டும்.

9. ஆடிக் கூழ்

ஒரு காலத்தில் பிரதான உணவாகவே கூழ் இருந்தது. இப்பொழுது நமது பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வுக்கு ஆன்மிக மாதமான ஆடி மாரியம்மன் திருவிழா வகை செய்கிறது. காற்றில் பரவும் நோய்கள் ஆடி மாதத்தில் அதிகம் தொற்றுக் கிருமிகளால் அதிக அளவில் நோய்கள் பரவும். ஆடி மாதத்தில் தான் அம்மை அதிகம் பரவியது. அது வேகமாக பரவுவதற்கு ஆடிக் காற்றும் துணை செய்தது நோயிலிருந்து குணமடையவும், வலிமையும் ஆரோக்கியம் பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும், கூழ் காய்ச்சி விநியோகிக்கப்பட்டது. அது பொதுவாக எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மன் கோயில் ஆலயத்தில் விழா கொண்டாடி ஆன்மிகத்தோடு பிரசாதமாக அளிக்கப்பட்டது.

10. ஆடி வெள்ளி

எத்தனை வெள்ளிக் கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கும், தை மாத வெள்ளிக்கும் என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வரும். வாரக் கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். சகல செல்வங்களும் கிடைக்க வெள்ளிக்கிழமை விரதம் உதவும். திருமகள் அருளைப் பெற்றுத் தரும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். கிராமங்களில் ஆடி வெள்ளியன்று வேப்ப இலையை கொண்டு வந்து வீட்டின் நிலை வாசலில் கட்டி வைப்பார்கள். அத்துடன் ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், குங்குமம், இரண்டும் போட்டு, இந்த தீர்த்தத்தில் குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்வார்கள்.

11. மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் விளை நிலங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து மீனாட்சி அம்மனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக் கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் வீதியில் உலா வரும் போது சிறப்பு நாதஸ்வரம் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையுடன் அம்மனை சேர்த்தி சேர்ப்பர். தினசரியும் அம்மன் அன்னம், காமதேனு, யானை, ரிஷபம், கிளி வாகனத்தில் எழுந்தருள்வார். 7வது நாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 8ஆம் நாள் குதிரை, 9ஆம் நாள் இந்திர விமானம், 10ஆம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.

12. ஆடி 18

“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவன் வாக்கு, அதன்படி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும்விதமாக ஆடிமாதம் 18-ம்தேதி ஆடிப்பெருக்கு தினமாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி 18 அன்று கொடியில் பூக்கக்கூடிய காய்களை விதைப்பார்கள். அவரை, பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய். தங்கம் வெள்ளி நகைகள் வாங்குவார்கள். ஸ்ரீ ங்கத்தில் காவிரிக்கு ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் தரும் சீர் வரிசை அம்மாமண்டபத்தில் கொண்டாடப்படும். புதுமணத் தம்பதிகள் நீர்நிலைகளில் புனித நீராடி தாலிப்பெருக்கு எனப்படும் தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு, வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்து பெற்றோர்களிடத்தில் ஆசிபெற்று தாலி மாற்றிக் கொள்வர். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்கவேண்டி கடவுளை வணங்குவார்கள்.

13. ஆடி அறுதி

ஆடி அறுதி என்பது ஆடி மாதத்தின் கடைசி நாளாகும் அன்று விவசாயத்தில் நாற்று நடுவதும் உண்டு. ஆடி கடைசி நாள் என்பதால் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் இருக்கும். ஆடி அறுதி எந்த கிழமையில் வருகின்றது என்ற அடிப்படையில் கூடுதல் சிறப்பைப் பெறும். இந்த ஆண்டு, ஆடி அறுதி 2024 ஆகஸ்ட் 16, வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று மூதாதையர்களையும் வணங்க வேண்டிய நாள். சிலர் அவர்கள் பயன்படுத்திய துணிகளை பாதுகாத்து படையல் போடுவார்கள். தென் மாவட்டங்களில் கும்மியானம் செய்து (பல தானியங்கள் மற்றும் கருப்பட்டி சேர்த்து) படையல் செய்வார்கள்.

14. வேப்பிலைக்கு மதிப்பு

ஆடி வந்தாலே அம்மன் கோயில்களில் உற்சவங்கள் ஆரம்பமாகிவிடும். ஆடி கூழுக்கும், வேப்பிலைக்கும் மதிப்பு கூடிவிடும். வேப்பிலை இல்லாத அம்மன் விழாக்கள் ஏது? மா இலையைப் போலவே, வேப்பிலைக்கும் அற்புத சக்தி உண்டு. அதை நுட்பமாக உணர்ந்து ஆன்மிகத்தோடு இணைத்தனர். பெருமாள் கோயில் என்றால் துளசி, சிவன் கோயில் என்றால் வில்வம், அம்மன் கோயில் என்றால் வேப்பிலை. ‘‘வேப்பிலைக்காரி” என்றே அம்மனை அழைப்பார்கள். கொடுமையான தொற்று நோய்களுக்கு வேப்பிலை அருமருந்து. சிறந்த கிருமி நாசினி. அதன் கசப்புச் சுவை பல வியாதிகளை போக்குகிறது. வேப்பிலையும் மஞ்சளும் கலந்த நீரில் நீராட, சரும நோய்கள் முதல் கொண்டு அம்மை போன்ற தீவிர நோய்களும் தீரும். ஆன்மீகத்தோடு இணைத்ததால் மன நோய்க்கும் மருந்தாகும்.

15. ஆடித் தபசு

ஆடி மாதம் வந்தால் அம்மன் கோயில் விழாக்களும் வில்லிபுத்தூர் ஆண்டாளும் நினைவுக்கு வருவதைப்போலவே சங்கரன்கோவில் நினைவுக்கு வந்துவிடும். ஆடிப் பௌர்ணமி விழா 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர். இந்த ஆண்டு அம்மன் தபசு காட்சி 21.7.2024 இரவு 12.05க்கு நடைபெறும்.

16. காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிப் பூரம்

ஆடிப்பூரம் (7.8.2024) என்றால் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு. காமாட்சி அம்மன் என்ற திருநாமத்தோடு எங்கு அம்மன் கோயில்கள் இருந்தாலும், அங்கே ஆடிப்பூரம் கொண்டாடப்படும். ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் விமரிசையாக நடக்கும். பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் காமாட்சி அம்மன் அன்னை லலிதா மஹா திரிபுரசுந்தரியின் முழுமை ரூபமாக, ‘‘பரப்ரஹ்ம்ம ஸ்வரூபினியாக’’ காட்சி தருகிறாள். இங்கு ஆடிப்பூரம் மிக சிறப்பாக நடைபெறும். பல இடங்களில் அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் மேளதாளத்தோடு சீர் தட்டு ஏந்திச் சென்று சமர்ப்பிக்கும் காட்சி கண் கொள்ளாக். காட்சியாக இருக்கும். இனி ஆடிமாதம் ஒட்டி சில அம்மன் கோயில்களை தரிசிப்போம்.

17. சமயபுரத்து மாரியம்மன் கோயில்

திருச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ள சமயபுரத்து மாரியம்மன் கோயில் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றாகும். பிரதான கோபுரம் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, பகலிலும் இரவிலும் கோபுரம் பிரகாசமாகவும் பிரமிக்க வைக்கும் விதமாகவும் ஜொலிக்கிறது. இக்கோவிலின் தேவி சுயம்பு என்று கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் அல்லது திருமணத்தில் தடைகள் உள்ளவர்கள் அம்மனுக்கு தங்க மங்களசூத்திரத்தை சமர்பிப்பார்கள். மேலும், பக்தர்கள் தங்கள் நோய் மற்றும் வலிகளில் இருந்து நிவாரணம் பெற உடல் உறுப்புகள் கொண்ட வெள்ளி சிலைகளும் உண்டியலில் போட்டு வழிபடுகின்றனர். ஆடி மாசத்தில் இக்கோவில் மிகவும் விசேஷமாக இருப்பதால், பக்தர்கள் கூட்டம் அலை மோதும். ஆடி வெள்ளி, ஆடி பூரம் போன்ற நாட்களில் சமயபுரத்திற்கு சென்று அம்பாளின் ஆசியைப் பெற்று வாருங்கள்.

18. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயம், அங்காளம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்ட யோக வடிவில், பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி எழுந்தருளி காத்து வருகிறாள், அங்காளபரமேஸ்வரி. ஆடியில் அங்காளபரமேஸ்வரியை தரிசிப்பது ஆயிரம் கோடி நன்மைகளைத் தரும். ஒவ்வொரு பௌர்ணமியும் இங்கு படு விசேஷமாக இருக்கும். எங்கு எங்கிருந்தோ மக்கள் இங்கு வந்து பௌர்ணமி அன்று அம்பாளை தரிசித்துவிட்டு செல்வார்கள். குறிப்பாக ஆடி மாதத்தில் மேல்மலையனூர் எல்லைக்குள் கூட நுழைய முடியாது, இக்கோயிலில் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகளும் புனஸ் காரங்களும் நடைபெறுகின்றன.

19. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் புற்று வடிவமாகவே தோன்றி சுயம்பு வடிவம் கொண்டவள். அம்பாளை வணங்கி புற்றுமண் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி மாதத்தில் நடைபெறும் வழிபாடுகளும் திருவிழாக்களும் மிகவும் சிறப்புமிக்கவை. பக்தர்கள் தங்களின் நோய்கள், வறுமை மற்றும் துன்பங்கள் அனைத்தையும் போக்க இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். அவர்கள் தேவிக்கு உடல் உறுப்புகளின் மண் பிரதிகள், இனிப்பு புட்டு, சிவப்பு சேலை மற்றும் பூக்களை வழங்குகிறார்கள்.இவ்வளவு பெருமை வாய்ந்த இத்தலம் தஞ்சாவூரில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அம்மனுக்குரிய ஆடியில் எதாவது ஓர் நாள் வசதிப்படி புன்னை நல்லூர் மாரியம்மனை தரிசியுங்கள்.

20. திருமயிலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம்

முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மயிலாப்பூரில் அமைந்துள்ள அம்மன் ஆலயம். 1300 ஆண்டுகள் பழமையானது. பேசும் தெய்வமாக விளங்கும் இந்த அம்மன் கோவில் சென்னையில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோயில். இன்றும் எளியோர்க்கு பாரபட்சமின்றி அருள்கிறாள் முண்டகக் கண்ணி அம்மன். சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள ஆலமரத்தடி புற்றில் பால், மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை வைத்து பூஜித்து வந்தால் சர்ப்ப தோஷம் நீங்குகிறது என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலில் ஆடி திருவிழா மிகவும் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது. தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு, புது துணி சார்த்தப்பட்டு, வெள்ளிக் கிழமைகளில் கூழ் ஊற்றி மக்கள் வழிபடுகின்றனர். இந்த புனிதமான ஆடி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் அம்பாளை தரிசித்து ஆசி பெற்றிடுங்கள்.

21. பெரியபாளையம் பவானி அம்மன்

சென்னைக்கு அருகில் உள்ள ஆரணி ஆற்றின் கரையோரத்தில் பெரிய பாளையத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் ஆலயம். பிரதான தெய்வமான பவானி அம்மனை தரிசிக்க, வார இறுதி நாட்களிலும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். நீண்ட காலம் புற்று வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த பவானி அம்மன், ஒருமுறை வளையல் வியாபாரி வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். வளையல் வியாபாரியின் கனவில் வந்த அன்னையின் ஆணைப்படி அந்த புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதில்தான் ரத்தம் வடிந்தது. இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம். மூல ஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்திற்குச் சென்று தீச்சட்டி எடுத்தும், வேப்பிலை ஆடை அணிந்தும் கோயிலை வலம் வந்தால் நினைத்தது கைகூடும், காரியங்கள் யாவும் வெற்றி அடையும்.

22. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன்

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடக்கும். ஆடித் திருவிழா பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் நிகழ்ச்சி சிறப்பு. அன்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று நேர்த்திகடன் செய்வார்கள். பக்தர்கள் முகம் மற்றும் முதுகின் பின்புறம் மிகவும் கூர்மையான கத்தியைக் குத்தி கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்துவர். நீளமான சூலத்தை வாயில் அலகு குத்தியும், பட்டா கத்தி அலகு, விமான அலகு என பல்வேறு விதமான அலகுகளை உடலில் குத்திக்கொண்டும் வருவர். அலகு குத்தும் ஊர்வலத்தைக் காண அப்பகுதியில்
பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பர்.

23. கூர பாளையம் சின்னம்மன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ளது கூர பாளையம். வாவி கடை என்ற நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் சென்றால் கோயிலை அடையலாம். இங்கு எழுந்தருளி இருக்கக்கூடிய சின்னம்மன் மகிமை வாய்ந்தவள். கொங்கு நாட்டு மக்களின் குலதெய்வம். கோயிலுக்கு வெளிப்பக்கத்தில் பிள்ளையார் மேடை நாகர் சிலைகள் இருக்கின்றன. ஆலயத்தின் நுழைவாயிலில் தீபம் பலிபீடம் இருக்கிறது. கருவறையில் சின்னம்மன் எழுந்தருளியுள்ளார். இவளுக்கு முன் நந்தி உள்ளது அலங்காரவல்லி என்ற பெயரோடு அருள் பாலிக்கிறார்  சக்கர பீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. திருமணத் தடை நீங்க விசேஷமான தலம் முக்கிய விசேஷமாக பாலாபிஷேகம் நடக்கிறது பாம்பு கடிக்கு விஷம் நீக்கி நிவாரணம் தரும் தெய்வமாக விளங்குகின்றாள். அம்மன் சந்நதி எதிரே சுதை சிற்பங்களான குதிரைகளும் ஆடுகளும் காணப்படுகின்றன. கால்நடைகளின் நோய் தீர்க்கும் தெய்வமாக இந்த அம்மன் விளங்குவதால் மாடு குதிரை போன்றவற்றின் சுதை உருவங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகிறார்கள்.

24. பொள்ளாச்சி மாசாணி அம்மன்

தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயங்களில் பொள்ளாச்சி மாசாணி அம்மன் ஆலயம் ஒன்றாகும். ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. அம்மன் சுயம்புவாக உள்ளார். பேச்சியம்மனுக்கு தனி சந்நதி உள்ளது. கோயிலின் காவல் தெய்வமாக கும்ப முனீஸ்வரர் உள்ளார். நான்கு கைகளுடன் மண்டை ஓடு, பாம்பு, மேளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியவாறு 17 அடி உயரத்தில் படுத்த நிலையில் காட்சியளிக்கிறார் அம்மன். பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீர்த்து வைப்பவளாகவும், மக்களின் உடல் உபாதைகளைச் சரிசெய் பவளாகவும், துன்பங்களைத் தீர்த்து மக்களுக்கு இன்பங்களை வழங்குபவ ளாகவும் இந்த அம்மன் விளங்குகிறார். இக்கோயிலில் மிகச்சிறப்பு பெற்ற விழா வாக பூக்குண்டம் இறங்கும் விழா எனப்படும் தீமிதித்திருவிழா நடை பெறுகிறது. ஆடி அமாவாசை அன்று தரிசிப்பது சிறந்தது.

25. வெட்டாத்தங்கரை காத்தாயி அம்மன்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வெட்டாத்தங்கரை கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் உள்ளது. காத்தாயி அம்மன் என்பவர் நாட்டுப்புறத் தெய்வம் ஆவார். இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் இருப்பதால் குழந்தையம்மன் என்று அழைக்கப்படுகிறார். இவரது குழந்தையை முருகன் என்கின்றனர். காத்தாயி – காத்த + ஆயி. காக்கும் தொழிலைச் செய்வதால் காத்தாயி என்று அழைக்கின்றார்கள். முருகனின் மனைவியான வள்ளியை காத்தாயி என நம்புவோரும் உள்ளனர். இவர்கள் வள்ளி தந்தைக்காக பயிர்களை காக்கும் தொழிலை செய்தமையால் இப்பெயரை பெற்றமையாக கூறுகின்றனர். இவரை காத்தியாயினி அம்மன் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலை ஆடி மாதம் தரிசனம் செய்வது சிறப்பு.

26. மாதானம் முத்துமாரியம்மன்

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமையும், புகழையும் தருபவளாக அருள் பாலித்து வருகிறாள் சீர்காழிக்கு அருகே உள்ள மாதானம் முத்துமாரியம்மன். பழங்காலத்தில் பிரம்பு எனப்படும் ஒருவகை தாவரக் காடாக இருந்த இப்பகுதியில், ஒரு புளியமரம் செழித்து வளர்ந்திருந்தது. அதை பார்த்த வணிகர் ஒருவர், விலைக்கு வாங்கி வெட்டி வண்டியில் ஏற்றிச் செல்ல முற் பட்டார். வெட்டுண்ட புளிய மரத் துண்டுகளை ஏற்றிவந்த பார வண்டி மாதானம் பகுதிக்கு வந்தபோது இருட்டி விட்டது. மறுநாள் புறப்பட முடிவு செய்த வணிகர், இரவு அங்கேயே தங்கினார். மறுநாள் சூரியன் உதித்த பின்னர் வண்டியில் மாடுகளை பூட்டி ஓட்டமுற்பட்டபோது வண்டி கிளம்பவில்லை. விவர மறிந்து வடகால் ஜமீன்தார் வந்தார். மரத்தை, சிறு துண்டுகளாக்கி ஏற்றிச் செல்லுமாறு கூறினார். மரத்தை வெட்டியபோது எல்லோரது கண்களையும் கூசச் செய்யுமாறு ஒரு பேரொளி கிளம்பியது. அதில் இருந்து வெளிப்பட்டு அனைவரையும் பக்தி பரவசம் கொள்ளச் செய்து ஆட்கொண்டாள் முத்துமாரி. ஜமீன்தார் வியந்தார். அங்கேயே அம்மனுக்கு ஓர் ஆலய மெழுப்பினார். இங்குள்ள பல கிராம மக்களுக்கு கண் கண்ட தெய்வம். குலதெய்வமும் கூட. ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று தீமிதி மகோற்சவம் இங்கு வெகு சிறப்பாக நடக்கிறது. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் தீமித்து அம்பாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

27. தீப்பாச்சி அம்மன் கோயில்

திருநெல்வேலிக்கு அருகில் வண்ணார்பேட்டை என்ற ஊரில் கட்டப்பட்டுள்ள கோயில் தீப்பாச்சி அம்மன் கோயில். (சிலர் தீபச்சி அம்மன் என்கிறார்கள்.) இந்த கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், முழு கோயிலிலும் மனிதர்களின் திருவுருவங்கள் உள்ளன. கணபதி, முருகன், அம்மன் போன்ற கடவுள்களின் சிலைகள் எதுவும் இல்லை. இக்கோயிலில் மற்றொரு ஆச்சரியமான அம்சம் என்னவென்றால், தீபச்சி அம்மன் தனது கணவருடன் அருள்பாலிக்கிறார், மேலும் அவரது தோழி லட்சுமிக்கு அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனி சந்நதி உள்ளது. கோயில் சிறியதாக இருந்தாலும், உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரபலமானது. தீபச்சி (தீப்பாச்சி) அம்மனைக் காவல் தெய்வமாகப் போற்றுகிறார்கள். ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய் மற்றும் கடைசி வெள்ளிக் கிழமைகளில் அம்மனை வழிபட்டால் கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

28. ஆடியில் தரிசிக்க வேண்டிய அற்புதக் கோயில்கள்

ஆடியில் சிறப்பு மிக்க வித்தியாசமான அம்மன் கோயில்களை தரிசிக்கலாம். சீர்காழி மகா மாரியம்மன் கோயில், குமுளி கண்ணகி அம்மன் கோயில், காரைக்குடி கொப்புடை அம்மன் கோயில், திருச்சி உஜ்ஜைன் மாகாளி அம்மன் கோயில், திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோயில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், சிவகங்கை பொன்னழகி கோயில், திருமுல்லைவாயல் பச்சை அம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், ஈரோடு கொங்கலம்மன் கோவில் மற்றும் தமிழகமெங்கும் உள்ள பல அம்மன் கோயில்கள் ஆடி மாதத்தில் ஜக ஜோதியாக இருக்கும்!

29. அம்மன் கோயில்களில்தான் எத்தனை விதம்?

எல்லா ஊர்களிலும் உள்ள பெண்தெய்வங்களும் சக்தி வாய்ந்ததாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருந்தாலும், சில ஊர்களில் வித்தியாசமான வழிபாடும், குறிப்பிட்ட காரணத்திற்காக வேண்டியதை அருளும் சக்தியும் அமையப் பெற்றுள்ளது.
1. ஊட்டியில் மகாகாளி, மகாமாரி இருவரும் ஒரே கருவறையில்அருள்கின்றனர்.
2. கரூர் மகா மாரியம்மனை வழிபட, நீண்ட நாள் வழக்கு தீரும், வியாபார சிக்கல்கள் நீக்கும். காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்க அருள்கிறாள் என்கிறார்கள்.
3. கும்பகோணம் அருகில் உள்ள திருச்சத்தி முற்றம் எனும் கோயிலில் அம்மன் சிவ லிங்கத்தை கட்டித்தழுவியபடி காட்சி தருகிறாள்.
4. காரைக்குடி, கொப்புடையம்மன் கோயிலில். அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடுகிறார்கள்.
5. கிடந்த கோல துர்க்கை சந்நதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள பராஞ்சேரியில் பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.
6. கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கிறாள். இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! இப்படிப்பட்ட அதிசய ஆலயங்கள் ஏராளம் உண்டு.

30. எத்தனை விதமான பிரார்த்தனைகள்.?

ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம்பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.
1. தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையை அம்மனின் பூஜைக்கு பயன்படுத்து கிறார்கள்.
2. காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரம் என்ற ஊரில் முத்துமாரியம்மனுக்கு மக்கள் தக்காளிப்பழத்தைக் காணிக்கை ஆக்குவதை வழிபாடாக வைத்திருக்கின்றனர். தக்காளிப்பழச்சாற்றால் அம்மனுக்கு அபிஷேகம் செய்வது இங்கு சிறப்பானதாகும்.
3. தேனி – பெரிய குளத்தில் உள்ள கெளமாரி அம்மனுக்கு பக்தர்கள், தங்களின் விவசாயம் செழிக்க. தானியங்கள், காய்கறிகள், பழங்களை சமர்ப்பிப்பது வழக்கம்
4. ஆடிமாதம் வெள்ளிக்கிழமை நெல்லையப்பர் காந்திமதி ஆலயத்தில் அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்பு வைபவம் மிகவும் சிறப்பானதாகும். அம்மனின் வயிற்றுப் பகுதியில் ஊரவைத்த பயறுவகைகளைக் கட்டு வார்கள். கர்ப்பிணி போலக் காட்சி தருவாள் அம்பிகை. இக்காட்சியினை கண்டு வணங்கிட, புத்திர பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் அம்மனை நாடிச் சென்றாலே, அருளைத் தேடித் தருவாள். கூப்பிட்டவுடன் ஓடி வருவாள். அதற்கென்றே அம்மன் நமக்குத் தந்த மாதம் தான் ஆடி.

எஸ். கோகுலாச்சாரி

The post ஆடி மாத திருவிழாக்களும் அம்மன் கோயில் அற்புதங்களும் appeared first on Dinakaran.

Tags : Aadi month ,Amman Koil ,Audi ,Dakshanayanam ,Adi ,Adi month ,Amman Temple Miracles ,
× RELATED கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டையால்...