வந்தவாசி, ஜூலை 17: காஞ்சிபுரம் கோயிலில் காதல் திருமணம் செய்து பள்ளிக்கு 10ம் வகுப்பு மாணவி தாலி அணிந்து வந்தது குறித்து சமூக நலத்துறையினர் கொடுத்த புகாரின்பேரில் வந்தவாசி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அய்யவாடி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மகன் அஜித்(22), ஆட்டுப்பண்ணை உரிமையாளர். ஆடு மேய்க்கும்போது 10ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்களாம். கடந்த மே மாதம் 31ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரியவில்லையாம். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்த மாணவியின் கழுத்தில் தாலி இருந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறையினருக்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அனக்காவூர் வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் காவேரி விசாரணை மேற்கொண்டதில் திருமணம் செய்தது உண்மை என தெரியவந்தது. எனவே, சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளதாக வந்தவாசி மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து மாணவியை மீட்டு திருவண்ணாமலை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பள்ளிக்கு தாலி அணிந்து வந்த 10ம் வகுப்பு மாணவி வந்தவாசி மகளிர் போலீசார் விசாரணை காஞ்சிபுரம் கோயிலில் காதல் திருமணம் appeared first on Dinakaran.