சென்னை, ஜூலை 16: சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், சாலைகளில் சட்டம் -ஒழுங்கு போலீசார் நிற்பதால், குற்றவாளிகளை கண்காணித்தப்படி போக்குவரத்து போலீசாருக்கு உதவி செய்யும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், நகரில் வாகன போக்குவரத்து சீராக இயங்க தொடங்கியுள்ளது. குற்றங்களும் குறைய தொடங்கி விட்டதால் சென்னை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையில் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு, சட்டம் -ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்ளுக்கு 4 உத்தரவுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக சட்டம் – ஒழுங்கை பொறுத்தவரை, காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும். தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்ய வேண்டும், என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம், சட்டம் – ஒழுங்கில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை அனைவரும் அவரவர் காவல் எல்லையில் உள்ள முக்கிய சாலைகளில், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கட்டாயம் நிற்க வேண்டும். அப்படி சாலைகளில் நிற்கும் போது, சாலைகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செல்லும் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். பழைய குற்றவாளிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகள் என சந்தேகம் இருந்ததால் சம்பந்தப்பட்ட நபரை புகைப்படம் எடுத்து அதை ‘பறந்து’ செயலியில் பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் காவல் நிலையங்களில் சம்பந்தப்பட்ட நேரங்களில் எழுத்தர் புகார்களை பெற வேண்டும் என்றும், முக்கியமான புகார்கள் என்றால் எழுத்தர் உடனே இன்ஸ்பெக்டருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சென்னை பெருநகரில் உள்ள 104 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சட்டம் – ஒழுங்கு போலீசார் சாலைகளில் நின்றும், ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சட்டம் – ஒழுங்கு போலீசார் சாலைகளில் பணியில் இருக்கும் போது, போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசாருக்கு உதவும் வகையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, வடபழனி 100 அடி சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, சர்தார் பட்டேல் சாலை, ஈவெரா சாலை என முக்கிய சாலைகளில் வாரத்தின் முதல் நாளான நேற்று போக்குவரத்து சீராக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமங்கள் இன்றி அலுவலகங்களுக்கு செல்ல முடிந்தது. இந்த நடவடிக்கையால் சாலைகளில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் சட்டம் – ஒழுங்கு போலீசார் நிற்பதால் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் தடுக்கப்படுவதாகவும், குறிப்பாக மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நிற்பதால் பணிக்கு சென்று வீடு திரும்பும் இளம்பெண்கள் அச்சமின்றி சாலையில் நடந்து செல்ல ஏதுவாக இருப்பதாகவும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
The post காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து விபத்து, வாகன நெரிசலை குறைக்க உதவும் சட்டம் – ஒழுங்கு போலீசார்: குற்ற சம்பவங்களும் குறைந்தது வாகன ஓட்டிகள் பாராட்டு appeared first on Dinakaran.