அண்ணாநகர், ஜூலை 16: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பிளாஸ்டிக் பைகள் சப்ளை செய்தவரின் வீட்டுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 80 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை உட்பட 12 வகையான பொருட்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்களை தடுக்கும் வகயைில் அவ்வப்போது, அதிகாரிகள் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவ்வப்போது அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி, விதிமீறும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதாக கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் பைகள்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. விசாரனையில் அந்த வீட்டில் இருந்த கணபதி என்பவர், சவுகார்பேட்டை பகுதியில் இருந்து பிளாஸ்டிக் பைகளை வாங்கி வந்து, கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 80 கிலோ பிளாஸ்டிக் பைகளை அங்கிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாடகை வீட்டுக்கு சீல் வைத்து ₹2,000 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பிளாஸ்டிக் பைகள் சப்ளை செய்தவர் வீட்டுக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.