திருவண்ணாமலை, ஜூலை 16: திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தமிழ்நாடு அரசின் திட்டங்களின் பயன்கள் நேரடியாக மக்களுக்கு எளிதில் சென்றடைய வசதியாக, மக்களுடன் முதல்வர் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏற்கனவே நகர பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, தருமபுரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், ஊரரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதே நாளில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் தொடங்கி வைத்தார். மேலும், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 15 துறைகளை ஒருங்கிணைத்து மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் 124 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை ஒன்றியம், வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. அதில், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அலுவலர்கள் கலந்துகொண்டு, துறைவாரியாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும், பொதுமக்களின் மனுக்களுக்கு ஒப்புகை ரசீதும் வழங்கப்பட்டது. இந்நிலையில், வேங்கிக்கால் பகுதியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ெதாடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி, 18 நபர்களுக்கு பட்டா மாற்றம், நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். மேலும், முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். அதன்படி, ஒவ்வொரு மனுவும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, தீர்வு காணப்படும் என கலெக்டர் தெரிவித்தார். முகாமில், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், ஆர்டிஓ மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, தாசில்தார் தியாகராஜன், பிடிஓக்கள் பிரத்திவிராஜ், அருணாச்சலம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள டி.எம் நிதியுதவி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். உடன், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை.
The post மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார் திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.