×
Saravana Stores

தயாமூலதன்மம்

எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கும் அருள் உள்ளமே ‘‘தயாமூல தன்மம்’’, இத்தகைய தத்துவம் பொதிந்த அழகிய, புதிய சொற்றொடரை நமக்கு வழங்கியவர் சிவபெருமான் திருவடிக்கே அன்பு பூண்டு ஞானப்பாடல்கள் தந்த அப்பர் பெருமான் ஆவார்.‘‘தயாமூல தன்மம் என்னும் தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே’’‘‘அன்பை அடிப்படையாகக் கொண்டு அறத்தின் உண்மைப் பொருளை அதாவது தயாமூல தன்மத்தை உணர்ந்து வாழும் அடியவர்கள் தம்மைத் தொழும்போது அவர்களுக்கு நலங்கள் கொடுக்கும் திருநள்ளாற்றுப் பெருமானை அடியேன் நான் நினைக்கப் பெற்று உய்ந்தேன்’’ என்று அப்பர் பெருமான், திருநள்ளாற்றுப் பெருமானைப் போற்றிப் பாடுகிறார்.

தெய்வீகமும் காண்பதற்கரிய சக்தியும் கொண்ட இறைவன் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் தோற்றமளிக்கின்றான். தனது ஈஸ்வரனைப் பற்றி முழுவதும் புரிந்து கொள்ளும் ஒருவன் அந்த ஈஸ்வரன் தான் ஒவ்வொரு பொருளிலும் உள்ளான் என்பதை உணர வேண்டும். இது சுலபமானது அல்ல. ஒரு சமயம் நானா சாந்தோர்க்கருக்கு சாயிபாபா என்பது இந்த எண்சாண் உடம்பு அல்ல என்று எடுத்துக் காட்டி விளக்கியருளினார் பாபா. ‘என் குரு என்னை இந்த உடம்பினின்றும் அப்புறப்படுத்தி விட்டார்’ என்று கூறினார் பாபா. இதன் பொருள், உலகம் முழுவதும் வியாபித்து இயங்கும் இறைசக்தியே இங்கு சாயி என்ற நாமரூபத்துடன் விளங்குகிறது என்பதாகும்.

‘‘ஸ பூமிம் விஶ்வதோ வ்ருத்வா அத்யதிஷ்டத் தஶாங்குலம்’’ என்பது புருஷ ஸூக்தம். ‘ஈஸ்வரம் உலகம் முதல் யாவற்றையும் வியாபித்து, அவற்றையும் கடந்து, பத்து விரல்களால் எண்ணப்படும் தன்மைக்கு அப்பால் உள்ளும் புறமும் நிறைந்துள்ளது.’ இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களிலும் ஈஸ்வரனே அந்தர்யாமியாக இருப்பதால் எல்லா உயிர்களுக்கும் இரக்கம் காட்டு அதாவது தயாமூல தன்மத்தைக் கடைப்பிடி.

இவ்வுண்மையை காசிநாத கோவிந்த உபாசினிக்கு சில அனுபவங்கள் மூலம் கற்பிக்க பாபா திருவுள்ளம் கொண்டார்.சீரடியில் கண்டோபா ஆலயத்தில் காசிநாதர் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். தாம் சமைத்த உணவை பாபாவிடம் கொடுத்து, பாபா சாப்பிட்ட பின் மீதமுள்ளதை பாபாவின் பிரசாதமாகப் பெற்று சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சமைத்தார். ஆனால் அவர் சமைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு கருப்பு நாய் அவர் சமைப்பதையே பார்த்துக் கொண்டிருந்தது. அவர் சமைத்த உணவை பாபாவிற்கு கொடுக்க, மசூதியை நோக்கிச் சென்றார்.

அப்பொழுதும் அந்த நாய் அவருடன் சற்று தூரம் வரை பின் தொடர்ந்து வந்தது. அதன்பின் அந்த நாயைக் காணவில்லை. பகவானுக்கு நிவேதனம் செய்து, தாம் உண்பதற்கு முன்பு ஒரு ஜந்துவான நாய்க்கு கொடுப்பதா என்ற எண்ணம் வைதீக மன முடைய காசிநாதருக்கு ஏற்பட்டது. எனவே, அந்த நாய்க்கு அதிலிருந்து கொஞ்சம் கொடுப்பதற்கு அவருடைய மனம் சஞ்சலப்பட்டது; சம்மதப்படவில்லை. நல்ல நடுப்பகல் கொளுத்தும் வெயிலில் மசூதியை அடைந்து பாபாவின் முன் நின்றார்.‘‘எதற்காக இங்கு வந்தாய்?’’ என்று கேட்டார் பாபா.

‘‘தங்களுக்கு நைவேத்யம் கொண்டு வந்திருக்கிறேன்.’’‘‘இந்த வெயிலில் இவ்வளவு தூரம் ஏன் வந்தாய்? நான்தான் அங்கே உன் பக்கத்தில் தானே இருந்தேன்.’’‘‘அங்கே ஒரு கருப்பு நாயைத் தவிர வேறு யாரும் இல்லையே’’‘‘அந்தக் கருப்பு நாய் நான்தான். அங்கே எனக்கு கொடுக்கவில்லை. எனவே, இந்தப் பிரசாதத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் நீ போகலாம்.’

மனம் நொந்து திரும்பினார் காசி நாதர். மறுநாள் அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டார்.

மறுநாள் உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போது அந்த நாய் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்துக் கொண்டே உணவு சமைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அங்கே எந்த நாயும் இல்லாதது கண்டு தன் மனதைத் தானே தேற்றிக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்த போது அங்கு ஒரு நோயாளி மனிதன் மட்டும் பக்கத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு இவர் சமைப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான். வைதீகரான காசிநாதருக்கு அவன் அங்கிருந்து பார்ப்பது பிடிக்கவில்லை. அங்கிருந்து போகும்படி அவனை விரட்டிவிட்டார்.

அவன் போய்விட்டான். சமைத்த உணவை எடுத்துக் கொண்டு பாபாவிடம் சென்ற போது, ‘நேற்றும் எனக்குக் கொடுக்கவில்லை இன்றும் என்னை விரட்டி விட்டாய்’ என்று பாபா சொன்னார். ‘பாபா தாங்களா அந்த நோயாளி மனிதன்’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டார் காசிநாதர். ‘‘ஆம்! கருப்பு நாயும் நான் தான்; அந்த நோயாளி மனிதனும் நான்தான்’’ என்றார் பாபா. காசிநாதர் ஸ்தம்பித்து நின்றார். ‘‘ஆவிஷ்க்ருத திரோதத்த பஹூரூப விடம்பநாய நம:” – பல உருவங்களில் தோன்றுவதும் மீண்டும் மறைந்து விடுவதுமான லீலை புரியும் சாயிநாதரே போற்றி என்று
ஸ்ரீ சாயி ஸஹஸ்ரநாமம் கூறும்.

பண்டரிபுரத்தைச் சேர்ந்த நாமதேவர் அங்கு எழுந்தருளியுள்ள பாண்டுரங்கனிடம் நேருக்கு நேர் பேசும் புண்ணியம் பெற்றவர்.ஒருமுறை பண்டரிபுரத்தில் நிவ்ருத்தி, ஞானதேவர், ஸோபானர், முக்தாபாய் ஆகிய நால்வரும் நாமதேவரை சந்திக்கும் பொழுது, நாமதேவர், அவர்கள் நால்வரையும் விட தான் வயதில் மூத்தவர் என்றும், ஆத்ம ஞானத்தில் தான்தான் பெரியவர் என்றும் நினைத்துக் கொண்டு வணக்கம் சொல்லாமல் நின்றார். ஆனால் அவர்கள் நால்வரில் முக்தாவைத் தவிர மற்றவர்கள் நாமதேவரை மிகப் பணிவுடன் தலை வணங்கி நின்றார்கள்.

தம்மோடு பகவான் நேருக்கு நேர் பேசுகிறார் என்ற அகந்தையோடு நாமதேவர் இருக்கிறார் என்று முக்தா புரிந்து கொண்டாள். ‘‘தான் என்ற அகந்தை கொண்டவரை நான் வணங்க மாட்டேன்! சந்தனமரம் இயல்பாக மணமுடையது என்றாலும், விஷப்பாம்பு அதைச் சுற்றிக் கொண்டிருந்தால் அந்த மரத்தால் என்ன பயன்? அதைப் போலத்தான் அகந்தை என்ற நச்சரவம் இவருடைய உள்ளத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது.

வாழ்வில் எப்போதும் ஆண்டவன் சந்நதியில் இருந்து அந்தப் பரம்பொருளுடன் பேசும் நீங்கள் இப்படி அகந்தையாக நடந்து கொள்வது நன்றாய் இருக்கிறதா? எனக்கு விந்தையாக இருக்கிறது”. என்று முக்தா நாமதேவரை கோபமாகக் கேட்டாள். நாமதேவர் கலக்கமுற்றார்.பின் கோராகும்பார் அவரைச் சோதித்து நாமதேவர் இன்னும் ஆன்ம பக்குவம் பெறவில்லை என்று கூறிவிட்டார்.

இதனால் மனமுடைந்த நாமதேவர் பாண்டுரங்கனிடம் சென்றார். ‘எனக்கு ஏன் இந்த நிலைமை? எனக்கு பக்குவம் இல்லையா?’’ என்று கேட்டார். அதற்கு பாண்டுரங்கன் ‘‘என்னை நேரில் கண்டு பேசினாலும் நான் யார் என்ற உண்மையை நீ அறியவில்லை’’ என்றான். ‘‘என்ன நான் உன்னை அறியாதவனா? தினமும் உன்னைக் கண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். நானா உன்னை அறியாதவன்?’’

‘‘ஆமாம். நீ தான் என்னை அறிந்து கொள்ளவில்லை’’ என்று பாண்டுரெங்கன் சொல்ல நாமதேவர் மிகுந்த வருத்தமடைந்தார்.சிலநாட்கள் சென்ற பின் பகவான் நாமதேவரை சோதிக்க மிலேச்ச குதிரை வீரனாக அவர் முன் வந்தான். அப்போது நாமதேவர் அவன் பாண்டுரங்கன் என்று அறிந்து கொள்ள இயலவில்லை. பின்னர் நாமதேவர் பாண்டுரங்கனிடம் சென்ற போது, ‘‘நான் மிலேச்சனாய் வந்தேனே ஞாபகம் இருக்கா?’’ என்று கேட்க, அதை உணர்ந்து நாமதேவர் மனம் வருந்தினார். பின்னர் பாண்டுரெங்கன், ‘‘என்னை அறிய வேண்டிய ஞானத்தை விசோபாகேசரிடம் சென்று அறிந்து கொள்’’ என்றான். அதன்படி விசோபாகேசரிடம் உண்மை ஞானம் பெற்று திரும்பி வந்தார். குருவின் உபதேசம் எந்த அளவிற்கு அவரது உள்ளத்தில் ஆழப்பதிந்திருந்தது என்பதை ஓர் நிகழ்ச்சி மூலம் விளக்கலாம்.

ஒருமுறை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நாயொன்று அவரின் தட்டிலிருந்து ரொட்டியைத் தூக்கிக் கொண்டு போக நாமதேவர், ‘வெறும் ரொட்டியைச் சாப்பிடாதே பாண்டுரங்கா. உனக்கு விக்கும். இந்த நெய்யையும் சேர்த்துச் சாப்பிடு’ என்று சொல்லிக் கொண்டே அந்த நாயின் பின்னாலேயே ஓடினார்.அங்கு வந்த நாய் தான் பாண்டுரங்கன் என்ற உண்மை ஞானத்தைப் பெற்றார்.

மெய்ஞ்ஞானம் பெற்ற ஞானிகள் அனைத்தையும் ஈஸ்வர சொரூபமாகவே பார்க்கின்றார்கள். சமநோக்குடைய அவர்கள் பார்வையில் சற்றும் வேற்றுமை உணர்வில்லை.
‘‘எல்லா ஜீவன்களினுள்ளும் என்னைக் காண்’’ ‘‘அத்தனை ஜீவன்களுக்கும் இரக்கப்படு’’ என்பதே பாபா காசிநாதருக்கு அளித்த போதனை. யோக சாதனை மூலம் தன் சொரூபத்தை பூரணத்தில் லயப்படுத்தும் போது எல்லா சொரூபங்களும் ஒன்றுதான் என்ற தத்துவ உபதேசத்தை இந்நிகழ்வின் வாயிலாக பாபா எடுத்துரைத்தார். இது காசிநாதருக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்குமான உபதேசமும் கூட. அதனால், காசிநாதர், தாம் எழுதிய “ஸ்ரீ ஸாயிநாத மஹிம்ன ஸ்தோத்ர”த்தில்,

“அனேக அஸ்ருத அதர்க்ய லீலா விலாஸை:
ஸமாவிஷ்க்ருத ஈசான பாஸ்வத் ப்ராபாவம் l
அஹாம்பாவஹீனம் ப்ரஸன்னாத்ம பாவம்
நமாமீஸ்வரம் ஸத்குரும் ஸாயிநாதம் ll”

‘‘கேள்விப்படாததும், தர்க்கத்திற்கு உட்படாததும் ஆன பல்வேறு லீலைகளின் மூலம் ‘‘மேலான பரம்பொருள் தாமே’’ என்று வெளிப்படுத்துபவரும், தான் என்ற ‘‘பாவ’’ (Bhava) மில்லாதவரும், ஆனந்தமய ஆத்ம சொரூபமான சாயிநாதரை வணங்குகிறேன்’’ என்று பாபாவை போற்றி வணங்குவார்.

இந்த அருள் அனுபவம் பெற்ற காசிநாதர் தான் பின்னாளில் ‘ஸ்ரீ உபாசினி பாபா’ என்று சாயி பக்தர்களால் கொண்டாடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஜீவனிலும் ஈசன் உள்ளார் என்பதை மானசீகமாக உணர்ந்து அந்த ஜீவனுக்கு மானசீகமாக வணக்கம் செய்து அன்பும் அறமும் கொண்டு வாழ்வதே தயாமூலதன்மமாகும். பாபாவின் திருவடிகளே சரணம்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

 

The post தயாமூலதன்மம் appeared first on Dinakaran.

Tags : Daimula Tanma ,Shivaberuman ,Thirudate ,Daimulthanmam ,
× RELATED இறைவனிடம் எப்படி வேண்டுவது?