×
Saravana Stores

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

“அணங்கே! அணங்குகள்‌ நின்பரி வாரங்கள்‌ ஆகையினால்‌
வணங்கேன்‌ ஒருவரை வாழ்த்துகிலேன்‌ நெஞ்சில்‌ வஞ்சகரோடு
இணங்கேன்‌; எனதுன தென்றிருப்‌ பார்சிலர்‌ யாவரொடும்‌
பிணங்கேன்‌ அறிவொன்றிலேன்‌ என்கண் நீவைத்த பேரளியே.’’

– என்பத்தோறாவது அந்தாதி

ஆதியாக

உலகிலுள்ளோர் தனது துன்பங்களை நீக்கிக் கொள்ள ஸ்ரீசக்கரத்தில் உமையம்மையை எழுந்தருளச்செய்து முறைப்படி பூசிப்பதால், துன்பங்களை விலக்கிக் கொள்ளலாம். விரும்பியதை அடையலாம், உலகம் வியக்கும் அற்புதங்களை நிகழ்த்தலாம், ஞானம் பெறலாம், மோட்சத்தையும் அடையலாம் என்ற ஸ்ரீசக்கர உபாசனையை
இப்பாடல் வலியுறுத்துகிறது. அதை செய்வோம். உமையம்மையின் கருணையை பெறுவோம். இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

* அணங்கே
* அணங்குகள்
* நின் பரிவாரங்கள்
* ஆகையினால் வணங்கேன்
* ஒருவரை வாழ்த்துகிலேன்
* நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன்
* எனதுன தென்றிருப் பார்சிலர் யாவரொடும் பிணங்கேன்
* அறிவொன்றிலேன்
* என்கண் நீவைத்த பேரளியே

இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

அணங்கே’’

“அணங்கு’’ என்ற வார்த்தையானது ஒரு கலைச்சொல்லாகும். தேவதையை “அணங்கு’’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். அந்தணர்களால் தேவதை என்ற சொல் கீழ்க்கண்டவாறு கருதப்படுகிறது. தேவதை என்பது அன்னம், பசு, மாடு, மரம், மனிதன் போல இதுவும் ஒன்று. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தன்மைகள் இருப்பது போல் தேவதைகளுக்கும் தனித்தன்மைகள் உண்டு. உதாரணமாக, நாய்க்கு மோப்பத் தன்மை, அன்னத்திற்கு நீரையும் பாலையும் பிரித்தெடுக்கும் தன்மை இருப்பது போல தேவதைக்கும் சில தனித்தன்மைகள் உண்டு.

இந்த தேவதைகள் மனிதனுக்கு அவன் இலக்கை விரைவாகவும் குறைந்த முயற்சியினாலும், எளிதில் அடையச் செய்யவும், தன்னிடத்தில் அதிகப்படியான பலன்களை தரவல்ல ஆற்றலையும் பெற்றிருக்கின்றன. இந்தத் தேவதைகளின் துணையில்லாவிடினும் மனிதன் தன் ஆற்றலால் இலக்கை அடைய முடியும் என்றாலும், மேற்கண்ட விரைவுப் பயன்பாட்டிற்காகவே மனிதன் தேவதைகளை நாடுகிறான்.

இவை பெரும்பாலும் நேரடியாக நம்மால் கண்டு, கேட்டு, உண்டு, உற்று, உணர முடியாத நிலையில் உள்ளன. நேரடியாக உணரமுடியாவிட்டாலும், மந்திரம் மற்றும் அதைச் சார்ந்த உபாசனை வழிபாட்டு முறையை பின்பற்றி அதைக் கண்டு, கேட்டு, உற்று, உணரமுடியும். உதாரணமாக ரத்தத்தில் உள்ள கிருமிகளை நாம் நேரடியாகக் காணமுடியாவிட்டாலும், மைக்ரோஸ்கோப் என்ற கருவியைக் கொண்டு காண்பது போல.

இதையே அபிராமி பட்டரும் ‘ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாம சுந்தரி’ (68) என்பதனால் தேவதைகளை பார்க்கலாம், பேசலாம் என்கிறார். மந்திரங்களின் மூலம் அறிந்து உணரக்கூடிய பண்பையே மற்றும் அந்த பண்பை உடைய சிவகாம சுந்தரியையே “அணங்கே’’ என்கிறார்.

“அணங்குகள்’’

என்ற வார்த்தையால் ஸ்ரீசக்கரத்தில் உள்ள ஒன்பது ஆவரணத்திலும் எழுந்தருளியுள்ள தேவதைகளையே குறிப்பிடுகின்றார். ஆவரணம் என்ற சொல்லிற்கு சூழ்ந்த, மறைந்த சூழ்ந்ததால் மறைந்த என்பது பொருள்.

உமையம்மை நடுவிருக்க அவளை ஒன்பது சுற்றுகளாக சூழ்ந்தும், உமையம்மையை காணஇயலாதவாறு மறைத்து நிற்கின்ற தேவதைகளையே ‘`அணங்குகள்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர். ‘`அணங்கே’’ என்ற உமையம்மையை ஒருமையில் குறிப்பிட்டவர். சூழ்ந்து நிற்கின்ற இந்த தேவதைகள் அனைவரையும் இணைத்து “அணங்குகள்’’ என்ற வார்த்தையால் பன்மையில் குறிப்பிடுகின்றார். இவை ஒன்பது பிரிவுகளைக் கொண்டதாக இருந்தாலும், ஒவ்வொரு ஆவரணச் சுற்றும் ஒவ்வொரு கூட்டமாகும்.

இந்த தேவதைகள் கூட்டமாகவே வரும், கூட்டமாகவே செல்லும், தனித்து வராது, தனித்துச் செல்லாது என்பதை நுட்பமாக அறிவிக்கவே “அணங்குகள்’’ என்கிறார். அந்த தேவதைகள் அனைத்தின் பெயரை மட்டும் இவ்விளக்க உரையில் இனி காண இருக்கிறோம். ஒன்பது சுற்றுக்களாகவும் ஒவ்வொரு சுற்றிற்கு எத்தனை தேவதைகள் உள்ளன என்றும் தெளிவாக நாம் அறிந்துகொள்ள வேண்டும். எந்த திசையில், எந்த கோணத்தில், எந்த தேவதை, எந்தப் பெயர் என்பதையெல்லாம் தனித் தனியாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சுற்றிற்கும் எண்ணிக்கையை சூட்டி ப்ரதாமா வரணம், த்விதியா வாரணம் என்று ஒன்பது சுற்றிற்கும் எண்ணிக்கையை கொண்டு ஒவ்வொரு சுற்றிற்கும் ஒவ்வொரு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. த்ரைலோக்ய மோஹன சக்கரம், சர்வாஷா பாரிபூரண சக்கரம் என்பது போல, ஒன்பது சுற்றிற்கும் பெயர்கள் உள்ளன. அந்தந்த பெயர் சூட்டி அழைத்து அது அத்தனைக்கும் தனித்தனியே வழிபாடு செய்யவேண்டும் என்ற காரணத்தினாலேயே ‘`அணங்குகள்’’ என்கிறார்.

“நின் பரிவாரங்கள்’’

என்பதனால், ஆவரண தேவதையைக் குறிப்பிட்டார். அந்த தேவதையின் பெயர்களை இனி தொடர்ந்து காண்போம்.

‘முதலாவது த்ரைலோக்ய மோஹன சக்ரம்’

அணிமா, லகிமா, மஹிமா, ஈசித்வம், வசித்வம், ப்ராகாம்யம், புக்தி, இச்சா, ப்ராப்தி, ஸர்வகாமா.

‘இரண்டாவது த்ரைலோக்ய மோஹன சக்கரம்’

பிராஹ்மி, மஹேஸ்வரீ, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாஹேந்திரி, சாமுண்டா, மகாலட்சுமி.

‘மூன்றாவது த்ரைலோக்ய மோஹன சக்ரம்’

ஸர்வசம்க்ஷோபினீ, ஸர்வவித்ராவினீ, ஸர்வகர்ஷினீ, ஸர்வ சங்கரி, ஸர்வோன் மாதினீ, ஸர்வமஹாங்குசா, ஸர்வ கேசரீ, ஸர்வ பீஜா, ஸர்வ யோகினீ, ஸர்வ த்ரிகண்டா.இந்த மூன்று சுற்று தேவதைகளும் முதலாவது ஆவரணத் தேவதைகள் ஆகும்.

‘இரண்டாவது ஆவரணம் ஸர்வாசா பரிபூரக சக்ரம்’

காமாகர்ஷிணி, புத்யாகர்ஷிணி, அஹக்காராகர்ஷிணி, சப்தாகர்ஷிணி, ஸ்பர்சா கர்ஷிணி, ரூபா கர்ஷிணி, ராஸா கர்ஷிணி, கந்தா கர்ஷிணி, சித்தா கர்ஷிணி, தைர்யா கர்ஷிணி‘

மூன்றாவது ஆவரணம் ஸர்வ ஸம்க்ஷோபணச் சக்ரம்’

அனங்ககுஸுமா, அனங்கமேகலா, அனங்கமதனா, அனங்கமதனா தூரா, அனங்கரேகா, அனங்கவேகினி, அனங்காகுசா, அனங்கமாலினி,

‘நான்காவது ஆவரணம் ஸர்வ சௌபாக்யதாயக சக்ரம்’

ஸர்வஸம்க்ஷோபிணி, ஸர்வ வித்ராவிணி, ஸர்வ கர்ஷினி, ஸர்வஹ்லாதினி, ஸர்வஸம் மோஹினி, ஸர்வஸ்தம்பினி, ஸர்வ ஜ்ரூம்பிணி, ஸர்வவசங்கரி, ஸர்வ ரஞ்ஜிநீ, ஸர்வோன்மாதினி, ஸர்வார்த்தஸாதினி, ஸர்வஸம்பத்பூரணி, ஸர்வமந்த்ரமயி, ஸர்வத்வந்த்வக்க்ஷயங்கரி,

‘ஐந்தாவது ஆவரணம் ஸர்வார்த்த ஸாதக சக்ரம்’

ஸர்வ ஸித்திப்ரதா, ஸர்வ ஸம்பத்ப்ரதா, ஸர்வ ப்ரியங்கரி, ஸர்வ மங்களகாரிணி, ஸர்வ காமப்ரதா, ஸர்வ துக்கவிமோசினி, ஸர்வாம்ருத்யுப்ரசமனி, ஸர்வ விக்நநிவாரிணி, ஸர்வாங்க சுந்தரி, ஸர்வ ஸௌபாக்கியதாயினி.

‘ஆறாவது ஆவரணம் ஸர்வரக்ஷாகர சக்ரம்’

ஸர்வஜ்ஞா, ஸர்வசித்தி, ஸர்வைச்வர்யப்ரதா, ஸர்வஞானமயீ, ஸர்வ வ்யாதிநிவாரணி, ஸர்வாதாரஸ்வரூபா, ஸர்வபாபஹரா, ஸர்வாநந்தமய, ஸர்வரக்ஷாஸ்வரூபிணி, ஸர்வேப்ஸிதபலப்ரதா.

‘ஏழாவது ஆவரணம் ஸர்வ ரோகஹர சக்ரம்’

வசிநீ, காமேச்வரி, மோதிநீ, விமலா, அருணா, ஜயநீ, ஸர்வேச்வரி, கௌலிநீ.

‘எட்டாவது ஆவரணம் ஸர்வ ஸித்திப்ரத சக்ரம்’

பாணம், வில், பாசம், அங்குசம், மஹாகாமேசி, மஹாவஜ்ரேச்வரி, மஹாபகமாலிநீ.

‘ஒன்பதாவது ஆவரணம் பிந்து மண்டல மத்ய கோனே’

சுத்த பரே, பிந்து பீட கதே, மஹா திரிபுரசுந்தரி, பரா பர அதி ரஹஸ்ய யோகினி, சாம்பவ தர்சனங்கீ, ஸர்வ நந்தமய சக்ர ஸ்வாமினி, திரி புரே, திரிபுரேசி, திரிபுர ஸீந்தரி, திரிபுர ஸ்ரீ, திரிபுர வாஷினி, திரிபுர மாலினி, திரிபுர ஸித்தே, திரிபுராம்பா, திரிபுரசுந்தரி. இந்த அனைத்து தேவதை களையுமே ‘`நின் பரிவாரங்கள்’’ என்கிறார்.

“ஆகையினால் வணங்கேன்’’

இது ஒரு ஸ்ரீவித்யா பூசனை கலைச்சொல் அதன்படி ஒரே ஸ்ரீசக்கரத்தில் மூன்று தேவதைகளை வழிபாடு செய்யலாம். ஆனால், மூன்று தேவதைகளையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்தில் சக்கரத்தில் வழிபாடு செய்யக் கூடாது. அந்த வகையில் ஸ்ரீசக்கரத்தில் மூன்று பாகங்கள் உள்ளன. பிந்து மண்டலம், த்ரி கோணம், ஸ்ரீ பத்ம பூபுரம் என்று மூன்றாக பிரித்து வழிபட வேண்டும். அதில் பிந்து மண்டலத்தில் வழிபடுவது முக்தியையும், த்ரிகோண மண்டலத்தில் வழிபடுவது ஞானத்தையும், ஸ்ரீ பத்ம பூ புரத்தில் வழிபடுவது உலகியல் மற்றும் உடல் சார்ந்த நலன்களையும் பெற்றுத்தரும்.

அந்த வகையில் ஸ்ரீ பத்ம பூபுர மண்டலத்தில் உள்ள தேவதைகளை வணங்கி உடல்சார்ந்த உலகியல் இன்பங்களை வேண்டி பூசனை செய்வர். அந்த பூசனை சைவம், அசைவம் என இருவிதமாக உள்ளது. அசைவப் படையல்களால் துன்பத்தை போக்கிக் கொள்ளலாம், எதிரிக்கு துன்பத்தை கொடுக்கலாம்.சைவப் படையல் மூலமாக இன்பம் பெறலாம். பிறரைத் தன் வயப்படுத்திக் கொள்ளலாம். இந்த வழிபாட்டை இனி நான் செய்ய மாட்டேன் என்பதை ‘`ஆகையினால் வணங்கேன்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

பொதுவாக, ஸ்ரீ வித்யா வழிபாடு என்பது படிநிலை முக்தியை வலியுறுத்துகிறது. வழிபாட்டு நெறியானது பத்து படிநிலைகளைக் கொண்டது. பத்தாவது படிநிலையிலேயே ஆன்மாக்களுக்கு முக்தி சித்திக்கும். இதை ஒரு உதாரணத்தால் உணரலாம். விதை, முளை, நாற்று, செடி, மரம், பூ, பிஞ்சு காய், கனி, மலர் என்று பத்துவிதமான நிலை ஒரு மரத்திற்கு இருப்பதுபோல, ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிற்கும் அடிப்படையானது. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைவிட உயர்ந்தது.

இதுபோலவே, ஸ்ரீ வித்யா உபாசனையை குரு தர்சனம், குரு சந்தானம், குரு உபதேசம், சிஷ்யாப்யாசம், சிஷ்ய ஆசரனம், சிஷ்யானுபூதி, வேதா சந்தானம், வேத அனுசந்தானம், வேதா அனுகிஹம், வேதானுபூதி என்று பத்து நிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.உபாசகன் ஒவ்வொரு நிலையை விட்டு மேலே செல்லும்போதும், கீழுள்ள தேவதையை வணங்குவதில்லை. மாறாக எந்தப் படியில் இருக்கிறாரோ, அந்த தேவதையை மட்டுமே வணங்குவார். மேல்நிலைக்கு செல்லச்செல்ல அந்த தேவதை உபாசகனுக்கு கட்டுப்பட்டு அருளும் என்பதையே ‘`ஆகையினால் வணங்கேன்’’ என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.

Tags : Antadhi ,Aadasa ,Srisakkara ,
× RELATED அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்