×
Saravana Stores

அற்புதம் நிகழ்த்திய ஆதிகேசவப் பெருமாள்

திருப்பதியில் வெங்கடாசலபதி காட்சி தருவதுபோல், தமிழ்நாட்டிலும் வெங்கடாசலபதி காட்சி தருகிறார். இதனால் அந்த ஆலயம் ‘‘தென் திருப்பதி’’ என்று அழைக்கப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொன்னகரம். இது கடற்கரை கிராமம். இங்குதான் வெங்கடாசலபதி எழுந்தருளி உள்ளார். இவரை ஆதிகேசவப் பெருமாள் என்றும் அழைக்கிறார்கள். இவரை வணங்கினால் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கிய பலன் கிட்டும் என்பார்கள். திருப்பதியில் செலுத்த வேண்டிய காணிக்கையை இங்கு செலுத்தினால், அது திருப்பதி வெங்கடாசலபதிக்குப் போய் சேருகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. தஞ்சை மன்னன் குலோத்துங்க சோழன், ஆதிகேசவப் பெருமாளுக்கு இப்பகுதியில் ஓர் ஆலயம் எழுப்பினான். மீனவர்கள் அந்தப் பெருமானை குலதெய்வமாக வழிபட்ட மக்கள் தவித்தனர்.‘‘தனுஷ்கோடி’’ என்பவர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன், நண்பர்களுடன் கடல் நடுவே படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது புயல் வீசி, நிலை தடுமாறி படகு அலைபாய்ந்தது. திசைமாறிச் சென்றது உடனே தங்கள் குலதெய்வமான ஆதிகேசவப் பெருமாளை நினைத்து தங்களைக் காப்பாற்றும்படி குரல் கொடுத்தனர். அலையில் தட்டுத் தடுமாறிய படகு ஏதோ ஒரு கரையை நோக்கி நகர்ந்தது. திடீர் என்று எதன் மீதோ மோதி, நங்கூரம் பாய்ந்தது போல் நின்றது. அந்த இடம் அவர்கள் வந்து சேர வேண்டிய கிராமம்தான். படகைவிட்டு இறங்கிய மீனவர்கள், மண்வெட்டி, கடற்பாரையை எடுத்து வந்து படகு நின்ற இடத்தைத் தோண்டினார்கள். படகைத் தடுத்து நிறுத்தியது என்ன என்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அது சாமி சிலை, ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரான ஆதிகேசவப் பெருமாளின் சிலை. முன்பு குலோத்துங்க சோழன் கட்டிய பெருமாள் கோயில் கடலில் மூழ்கியதல்லவா? அந்த ஆலயத்தின் மூலவர்தான் இந்த ஆதிகேசவப் பெருமாள் என்று தெரியவந்தது.

தங்கள் குலதெய்வமே தங்களை காப்பாற்றியது என்று அகமகிழ்ந்தனர். அந்த இடத்திலேயே ஆதிகேசவப் பெருமாளுக்கு கொட்டகை அமைத்து வழிபட்டனர்.கடலில் புதையுண்ட பெருமாள், கடலில் சிக்கி தத்தளிக்கும் மீனவர்களைக் காப்பாற்றவே அப்பகுதியில் எழுந்தருளியதாக மக்கள் நம்பினார்கள். திருப்பதி வெங்கடாசலபதியே ஆதிகேசவப் பெருமாளானதாகவும் இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். மணமாகாத கன்னிப் பெண்கள் இவரை வழிபட்டால் 48 நாளில் திருமணம் கைக்கூடும் என்கிறார்கள். நேரில் வந்து வேண்டுதல் செய்தால் விரைவில் வேலை கிடைக்கும். மகப்பேறு இல்லாதவர்கள் இங்கு மூன்று நாள் தங்கி வழிபாடு செய்தால், பிள்ளைச் செல்வம் கிடைக்கும். மூலவரின் பாதங்களில் கணக்கு நோட்டுகளை வைத்து வணங்கி தொழில் தொடங்கினால் சிறப்பாக அமையும் என்பார்கள் பக்தர்கள்.

ஜி.ராகவேந்திரன்

The post அற்புதம் நிகழ்த்திய ஆதிகேசவப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Adikesava Perumal ,Venkatachalapati ,Tirupati ,Tamil Nadu ,Southern Tirupati ,Ponnakaram ,Mamelgudi ,Puthukkottai district ,Venkatachalapathy ,
× RELATED திருமலை விஐபி தரிசன டிக்கெட் விவகாரம்...