×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் இன்று அதிகாலை என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

காவல்துறை அறிக்கையில்:
கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம், ໙/33, த/பெ.கண்ணன், குன்றத்தூர், சென்னை உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர் மேற்கண்ட கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று 14.07.2024 தேதி அதிகாலை. போலீஸ் காவலில் இருந்த எதிரி திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு எதிரி தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த எதிரி திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, எதிரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் எதிரி திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த எதிரி உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக M3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Rawudi Thiruvengadam ,Armstrong ,Chennai ,president ,Bagujan Samaj Party ,Raudi Thiruvengadam ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்