ஊட்டி, ஜூலை 14: ஊட்டியில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றும் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்ததால் குளிர் வாட்டியது. நீலகிரி மாவட்டத்தில், ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் பலத்த காற்று வீசும். மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, மின் துண்டிப்பு போன்றவைகள் ஏற்படும். இம்முறை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது.
ஆனால், ஜூன் மாதம் துவக்கம் முதல் இம்மாதம் துவக்கம் வரை ஊட்டியில் மழை பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தாமதித்து வந்தது. கடந்த மாதம் சில நாட்கள் மழை பெய்தது. எனினும், இந்த மழை நீடிக்கவில்லை. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
குன்னூர்-மஞ்சூர் சாலையில் கெந்தளா அருகே ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனைத்தொடர்ந்து, குன்னூர் தீயணைப்புத்துறையினர் அப்பகுதிக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், இவ்வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நேற்றும், காலை முதலே ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை துளிகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதனால், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிர் அதிகமாக காணப்பட்டது. இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர்.
The post ஊட்டியில் மீண்டும் காலநிலையில் மாற்றம் appeared first on Dinakaran.