பெரம்பூர் ஜூலை 14: விளையாடும் போது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை படுகாயமடைந்தது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையை சேர்ந்தவர் முக்தார். இவரது குழந்தை அபூபக்கர் (3), நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில், வீட்டின் 2வது மாடியில் விளையாடி கொண்டிருந்தபோது, அங்கிருந்து கீழே எட்டிப் பார்த்துள்ளது. அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து, அலறி துடித்தது.
சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், குழந்தையை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை மயக்க நிலையில் உள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விளையாடும்போது 2வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.