- திமுகா
- விக்ராவண்டி இடைக்கால தேர்தல்
- பாமகவ நாமி தமிழ் கட்சி
- கலி விக்ரிவாண்டி
- இந்திய தேர்தல் ஆணையம்
- விக்ரவாண்டி
- விக்ராவண்டி சட்டமன்றத் தொகு
- எம். எல்.
- விலப்புரம் மாவட்டம்
- பிரம்மந்தா
- இடைநிலைத் தேர்தல்கள்
- தின மலர்
பாமகவுக்கு பெரும் பின்னடைவு
நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் காலி
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம்தமிழர் கட்சியில் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு விக்கிரவாண்டி இடைதேர்தல் முன்னோட்டம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருவதால் தமிழகமே இந்த தொகுதியின் வெற்றி நிலவரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. மொத்தமுள்ள 2,37,031 வாக்காளர்களில் 195495 பேர் வாக்களித்தனர். இதன்படி 82.48 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மட்டும் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 5.30 மணிக்கு வேட்பாளர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் வாகனம் மூலம் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ெகாண்டுவரப்பட்டன.
இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கின. வேட்பாளர்கள், முகவர்கள் போலீசாரின் சோதனைக்கு பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி முன்னிலையில் அகற்றப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்து வரப்பட்டது.
தபால் வாக்கிலும் திமுக முதலிடம்
முதலில் அஞ்சல் வாக்குகள் ஒரு சுற்றாக 2 மேஜைகளில் எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 798 வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 494 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 217 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 45 வாக்குகளும் பெற்றனர். 42 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. தபால் ஓட்டில் பாமக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 277 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இதன் பின் 14 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பல ஆயிரம் வாக்குகள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால் திமுக வரலாறு காணாத வெற்றி பெறுவது உறுதி ஆகி உள்ளது. 13 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 83,431 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி. அன்புமணி 36,241 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 6,432 வாக்குகளும் பெற்றுள்ளனர். அன்னியூர் சிவா 47 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளார். தொடர்ந்து 20-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,26,689 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து திமுக ஆதிக்கம்
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் 93,730 வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளரை விட திமுகவின் புகழேந்தி 9573 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குள் தான் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் 6823 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றிருந்தார். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 72,188 வாக்குகளும், அதிமுகவின் பாக்கியராஜ் 65,365 வாக்குகளும் ெபற்றிருந்தனர். தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் முன்னிலை பெற்றுள்ளார். ெதாடர்ந்து 3 தேர்தல்களாக இந்த தொகுதியில் திமுக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ந்து டெபாசிட் காலி
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த முதல் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளார் கந்தசாமி 2921 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8616 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குள் தான் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் 8362 வாக்குகள் மட்டுமே பெற்றார். தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி முகத்தில் உள்ளது. இந்த தேர்தலிலும் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா டெபாசிட்டை பறிகொடுக்கும் நிலையில் தான் உள்ளார்.
முதல் சுற்றில் சுயேச்சைகள் பூஜ்யம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இன்று காலை 8 மணி தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் சுற்றில் சுயேச்சையாக போட்டியிட்ட தேர்தல் மன்னன் பத்மராஜன், ஜனார்த்தனன், மோகனன் மற்றும் நடிகர் கார்த்திக் கட்சியான நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் மணிகண்டன் ஆகியோருக்கு ஒரு ஓட்டுக்கூட விழவில்லை. முதல் சுற்றில் நோட்டாவுக்கு 31 வாக்குகள் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பிரம்மாண்ட வெற்றி: தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்! appeared first on Dinakaran.