×
Saravana Stores

இஸ்லாமியப் புத்தாண்டு!

இறைத்தூதர் நபிகள் நாயகம் காலத்தில் ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கு இல்லை. ஆனால், மாதங்கள் பன்னிரண்டு என்பதும் சந்திரனின் தோற்றம் – மறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்களைக் கணக்கிடுவதும் இருந்தன.குர்ஆன் கூறுகிறது: “உண்மையாக இறைவனிடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் இறைவனின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது.” (குர்ஆன் 9:36)
பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு ஆண்டுகள் கழித்து உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 639இல்) இஸ்லாமிய நாள்காட்டியின் அடையாளமாக என்ன பெயரைச் சூட்டலாம், ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

இப்படி ஓர் ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித்தோழர் அபூமூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்களையே சாரும். அவர் ஒருமுறை உமர் (ரலி) அவர்களுக்குக் கடிதம்
எழுதியபோது அரசாங்கக் கடிதங்களில் தேதி இல்லாதது குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் விளைவாக இஸ்லாமிய நாள்காட்டி ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைக் கலீஃபா உமர் (ரலி) உணர்ந்தார்.எனவே இது குறித்து நபித்தோழர்களுடன் உமர் கலந்தாலோசித்தார். அதில் நான்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக்
கொண்டிருந்தன.
1) நபிகளாரின் பிறப்பு
2) நபிகளாரின் இறப்பு
3) நபிகளார் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்டது
4) நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தது. (ஹிஜ்ரத்)

உமர்(ரலி) நபிகளார் புலம்பெயர்ந்த நிகழ்வையே ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது.மக்காவிலிருந்து நபிகளார் புலம்பெயர்ந்து மதீனா வந்ததுதான் இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது. நபிகளாரின் மக்கா வாழ்க்கை துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாக் கொடுமைகளும் நிறைந்த வாழ்க்கையாகும். புலம்பெயர்ந்து செல்வதற்கான உத்தரவை இறைவனிடமிருந்து நபிகளாரும் எதிர்பார்த்திருந்தார்.மதீனாவில் வாழ்ந்த மக்கள் நபிகளாருக்கு அடைக்கலம் தந்ததுடன் அவர் பரப்புரை செய்த இஸ்லாமிய வாழ்வியலையும் ஏற்றுக் கொண்டனர். உலகில் முதன்முதலாக ஓர் இஸ்லாமிய அரசும் சமூகமும் மலர்ந்த இடம் மதீனாதான். அங்கிருந்துதான் வேத ஒளி உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. ஆகவே நபிகளார் புலம்பெயர்ந்த நிகழ்வையே -ஹிஜ்ரத்- இஸ்லாமிய நாள்காட்டியின் தொடக்கமாக உமர் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஹிஜ்ரி ஆண்டு தொடங்கியது.

இஸ்லாமிய நாள்காட்டியின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் மாதம் கண்ணியமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும். (துல்கஅதா, துல்ஹஜ், ரஜப் ஆகியவை இதர மூன்று மாதங்கள்) பல தியாக நிகழ்வுகள் நடைபெற்ற மாதமாகவும் முஹர்ரம் திகழ்வதால் அந்த மாதமே ஆண்டின் முதல் மாதமாகத் தேர்வு செய்யப்பட்டது.எத்துணைத் துயரங்கள், இடையூறுகள் ஏற்பட்டாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்னும் பாடத்தையே நபிகளாரின் ஹிஜ்ரத்- புலம்பெயர்தல் நமக்குக் கற்றுத்தருகிறது.அனைவருக்கும் இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்துகள்.
– சிராஜுல்ஹஸன்

The post இஸ்லாமியப் புத்தாண்டு! appeared first on Dinakaran.

Tags : Islamic New Year ,Hijri ,earth ,
× RELATED அலர்ஜியை அறிவோம்..! டீடெய்ல் ரிப்போர்ட்!