- சுதர்ஜன்
- ஸ்ரீ சகரதல்வர் ஜெயந்தி
- சுதர்சனார்
- சுதர்சன
- பரந்தமான்
- மத்திய தரைக்கடல் கடல்
- சுதர்சனம்
- சுதர்சனார்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜெயந்தி (சுதர்சனர்) – 14.7.2024
பாற்கடலில் பள்ளிகொண்டருளும் பரந்தாமன், பத்து அவதாரங்கள் எடுத்தபோதும் உடன் இருந்த உயர்வுக்கு உரியது அவரது திருக்கையில் திகழும் சுதர்சன சக்கரம். தசாவதாரத்தை முழுமையாகக் கண்ட பெருமைக்குரிய சுதர்சனமே, பக்தர்தம் வாழ்வில் வரும் தடைகளை விரட்ட பகவானால் பிரயோகிக்கப்படுகிறது. எல்லா வகையிலும் பகவானோடு இணைந்திருந்து அவரது கட்டளைப்படி பக்தர்களைக் காத்திடும் பரமதயாள சொரூபமுடையவர் சுதர்சனர். அண்டியவர் வாழ்வில் அரணாக இருந்து அவர்களின் முன்னேற்றத் தடைகளைத் தகர்த்து வளமும் நலமும் பெற வகை செய்பவர் சுதர்சனர். ஞான சொரூபியாகவும், அழிக்க முடியாத பகையையும் அழிப்பவராகவும், அதாவது வெல்ல முடியாத காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் போன்ற உட்பகைகளையும் விரட்டுபவர் என்றும் பொருள்.
பயங்களைப் போக்குபவராகவும், அறிவும் செல்வமும் அளிப்பவராகவும் உள்ள சுதர்சனரை வழிபடுவது சர்வ மங்களங்கள் யாவையும் கிட்டச் செய்யும் என்கின்றன புராணங்கள்.எம்பெருமானுடைய சங்கல்பமே திருவாழி யாழீவானாக சுதர்சனர் உருக்கொண்டதாக சாஸ்திரம் கூறுகிறது. மூன்று யாக அக்னிகள் மற்றும் ரிக், யஜூர், சாமம் ஆகிய வேதங்களின் வடிவமாய்த் திகழ்கின்றவர் சுதர்சனர். தம்முடைய 16-கரங்களில், 16-திவ்ய ஆயுதங்களைக் கொண்டுள்ளார். சக்கரம், மழு, ஈட்டி, தண்டு அங்குசம், அக்னி வடிவமுள்ள ஆயுதம் கத்தி, வேல்.
இவற்றை வலப்புறத் திருக்கைகளிலும், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் இவற்றை இடப்புறத் திருக்கைகளிலும் கொண்டு கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர இரு பாதங்களையும் தூக்கியபடி சேவை சாதிக்கிறார் சுதர்சனம். சுதர்சனர், வேண்டுவோர்க்கெல்லாம் வேண்டியவை நல்குபவர். கோடி சூரியனுக்குச் சமமான காந்தியை உடையவர். அழகிய நல்வழியைக் காட்டுபவர். அவன்மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்து அவன் திருவடியை மனத்தில் நிறுத்தி, அந்தச் சுடரை, பரஞ்சோதியை, அடைக்கலம் புகுந்தால் அருவினையால் வந்த ஆபத்தெல்லாம் சடுதியில் மறையும். பிறவி எனும் பெருங்கடலை எளிதாகக் கடக்கலாம். எல்லையில்லாப் பேரின்பமாகிய மோட்சத்தை அடையலாம்.
ரிஷிகளைக் காட்டிலும் சிறந்தவர்கள் எனப் பெரியோர்களால் போற்றப்படுகின்ற பன்னிரு ஆழ்வார்களும், தம் பாசுரங்களில் இந்த சக்கரத்தாழ்வாரைப் போற்றுகின்றனர். அவன் மகிமை அபாரம், அநந்தம், சகலத்தையும் தரக்கூடிய கல்பக விருட்சம் காமதேனு, சிந்திப்பதையெல்லாம் தரும் சித்தாமணியே சுதர்சனர் என்று போற்று கிறார்கள். கவிதைத் திறனும் பக்திப் பெருக்கும் ததும்பும் ஸ்ரீமந் நிகமாந்த மகாதேசிகன் அருளிச் செய்துள்ள ‘சுதர்ஸன அஷ்டகம்’, ‘ஸ்ரீஷோசாயுத ஸ்தோத்ரம்’ ஆகியவை சுதர்சனரின் சிறப்பை விளக்குகின்றன. வேதாந்த தேசிகரின், சுதர்சன அஷ்டகத்தில்;
‘‘ப்ரதிபட ச்ரேணி பீஷண வரகுண ஸ்தோம பூஷண
ஐநி பயாஸ்த்தாந தாரண ஜகத வஸ்தாந காரண
நிகில துஷ்கர்ம கர்சந நிகம ஸத்தர்ம தர்சந
ஜய ஜய ஸ்ரீசுதர்சன ஜயஜய ஸ்ரீசுதர்சன’’
– என்று பாடி மக்களின் துன்பங்களைப் போக்குமாறு வேண்டுகிறார்.
பாடிய எட்டு பாடல்களிலும் ‘ஜயஜய சுதர்சன’ என்று போற்றியுள்ளார். சுதர்சன ஆழ்வாரின் திருவிளையாடல்கள் பலவுண்டு. செருக்கினாலும் சினத்தினாலும் சிறுமதி படைத்த சிசுபாலன் வாசுதேவன் மீது வார்த்தை அம்புகளை வரிசையாகப் பொழிந்து அவமதித்தான். பூமிதேவியின் உத்தம புருஷன் நான் என்று உணர்த்துவது போல் பொறுமையாக இருந்தான் புருஷோத்தமன். வசை வார்த்தைகளில் சதம் அடித்தான் சிசுபாலன்.
அடுத்த வார்த்தை ஆரம்பிப்பதற்குள் சட்டென்று சுதர்சன சக்கரத்தைச் செலுத்தினான் சக்கரதாரி. அது அறுத்து எறிந்தது சிசுபாலனின் சிரத்தை. தணித்தது கிருஷ்ணனின் சினத்தை! அம்பரீஷன் எனும் பக்தன் துர்வாசரின் வீண் கோபத்திற்கு ஆளான போது அவனைக் காத்திட தன் சக்கர ஆயுதத்தினை அனுப்பினார் பரந்தாமன் அது அம்பரீஷனைக் காத்ததால், துர்வாசரின் கோபத்துக்கு ஆளானது சக்கரம்.
‘ஒரு நாழிகை காலம் உன் ஒளி குன்றட்டும்’ என்று துர்வாசர் தந்த சாபத்தை தக்க சமயத்தில் ஏற்று தனது ஒளி குன்றச் செய்துகொண்டு, தர்மத்தின் மீது வெளிச்சம் பட வழிசெய்தார் சுதர்சனர். சக்கரம் என்ற சொல் மந்திர யந்திர வழிபாட்டையும் சேர்த்து நினைவுறுத்துகிறது. அதற்கேற்றவாறு சக்கரத்தாழ்வாரை ஆறுகோணத்திலோ, முக்கோணத்திலோ அமைத்து வழிபடும் முறை வழக்கத்தில் உள்ளது.
இது பெரும்பாலும் தீமை அகலவும் நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் தொலையவும், பிணிகள், பில்லி, சூன்யம் போன்றவைகள் ஒழியவும் சுதர்சன வழிபாடு மேற் கொள்ளப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் சக்கரபாணி கோயில் என்று வழங்கும் கோயிலில் மூலவர் சுதர்சன ஆழ்வாரே ஆவார். அவரை திருமால் என்று எண்ணியே வழிபடுகிறார்கள். திருமோகூர், காஞ்சிபுரம், கண்டியூர், தாடிக் கொம்பு, திருமெய்யம் போன்ற பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சுதர்சனர் தனிச் சந்நதி கொண்டருள்கிறார்.
சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோக நரசிம்மர் வடிவம் அமைப்பதும் மரபு. புகழ் பெற்ற தாடிக்கொம்பு, திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் இந்த அம்சத்தைப் பார்த்து மகிழலாம். இப்படி எல்லாவற்றிற்கும் மேலாக சர்வ மங்களமும் தரும் சுதர்சன ஆழ்வாரைப் போற்றும் உயர்வான துதி ஒன்றை அம்பரீஷ மகரிஷி இயற்றியுள்ளார். ‘மகாசுதர்சன ஸ்தோத்ரம்’ என்ற இந்தத் துதிப் – பாடல்களைக் கொண்டது. அத்துதியைப் பாடி மகாசுதர்சனரை மனதாரக் கும்பிட்டு, மங்களங்கள் யாவும் பெறுங்கள்.
டி.எம்.வேல்
The post சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர் appeared first on Dinakaran.