கள்ளக்குறிச்சி, ஜூலை 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஏ.சாத்தனூர் எல்லையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தைவான் நாட்டு கம்பெனி மூலம் தோல் இல்லா காலணி தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு தற்போது அந்த தொழிற்சாலை அமைப்பதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தொழிற்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலை அமைய உள்ள இடங்களில் உளுந்தூர்பேட்டை வட்டம் ஏ.சாத்தனூர் மழவராயனூர், திருப்பெயர், எடைக்கல் கிராமம் உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள கூந்தலூர், காச்சிக்குடி, எறஞ்சி, குருபீடபுரம், ஆசனூர் ஆகிய 5 கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை சிட்கோ மூலம் கையகப்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து நிலம் பாதிக்கப்பட்ட 5 கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. இதனால் எங்களது வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்கப்படுகிறது என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து கூச்சலிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை அழைத்து வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் கிராம மக்கள் வட்டாட்சியர் பிரபாகரனிடம் முறையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
The post உளுந்தூர்பேட்டை காலணி தொழிற்சாலை அமைக்க இடம் தேர்வு செய்ததில் விவசாய நிலம் பாதிப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 கிராம மக்கள் தர்ணா கள்ளக்குறிச்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.